Skip to main content

அகநானூற்றில் ஊர்கள் :7/7 – தி. இராதா

அகரமுதல

 

அகநானூற்றில்  ஊர்கள் -7/7


வல்லம்
    மழைபோல் செரியும் அம்பனையும், மேகம் போன்ற தோற்கிடுகினையும் உடைய சோழரது அரண் கொண்டது வல்லம் எனும் ஊராகும்.
                “……………..சோழர்
                வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புரமிளை (அகநானூறு 336)
                “நெடுங்கதி நெல்லின் வல்லம்                                      (அகநானூறு  356)
நெல்வளம் மிக்க ஊர் வல்லம் என்பதை மேற்கண்ட அடிகள் விளக்குகின்றன.
வாகை
      வாகை மரம் நிற்றலால் வாகைப் பெருந்துறை எனப்பட்டது. வாகைப்போர் நடந்த இடம் நன்னனுடைய காவல் மரம் வாகையாகும். இது வாகை பறந்தலை என்று அழைக்கப்படுகிறது.
                “சூடா வாகை பறந்தலை, ஆடுபெற”                                              (அகநானூறு               125)
                “இடும்பொன் வாகைப்பெருந்துறைச் செலின்”   (அகநானூறு 199)
வாகையின் சிறப்பு இதனால் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியலூர்
                நன்னன் என்ற குறுகிய மன்னனின் ஊர். வயலைக் கொடி படர்ந்த வேலிகளையுடைய வியரினை,
                “…………………….நன்னன் வேண்மான்
                வயலை வேலி வியலூர் அன்ன நின்”                                         (அகநானூறு 97)
என்ற அடிகள் புலப்படுத்துகின்றன.
விளங்கில்
      பாலை நிலத்தின் சிறப்பு மிக்க ஊர். வெப்பம் மிகுதியான ஊராக காணப்படும். வள்ளன்மை மிக்க கடலன் என்ற குறுநில மன்னனின் ஊர் விளங்கில் என்பதை,
                மாவன் கடலன் விளங்கில் அன்ன எம்                (அகநானூறு  81)
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரை
                வேளிர் என்ற மன்னனின் ஊர். வீரை என்பது பட்டினமாகும் இங்க உப்பு குவிய நிறைந்திருக்கும்.
                அடுபோர் வேளிர் வீரை முன்துரை                         (அகநானூறு 206)
என்று வீரையின் சிறப்பு அறியப்படுகிறது.
வெளியம்
        வானவரம்பனின் வெளியம் எனும் ஊர் மாண்நலம் மிக்க ஊராகும்.
                வானவரம்பன் வெளியத்து அன்ன நம்                              (அகநானூறு 359)
என்று வானவரம்பனின் சிறப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வேம்பி
    முசுண்டன் என்ற குறுநில மன்னனின் ஊர். பாணனுக்கு நாள்தோறும் உணவு கொடுக்கும் ஊர் என்பதனை,
                பல்வேல் முசுண்டை வேம்பி அன்ன என்           (அகநானூறு 249)
என்பது  புலப்படுத்துகிறது.
வேளூர்
       பலவகை நெல் வளங்களைக் கொண்டது. நல்ல மரங்கள் சூழ்ந்த பல நாட்கள் வடித்து எடுக்கப் பெற்ற கள்நிறைந்த சாடியை முகக்கும் கலம் உடைய ஊர் என்பது,
                பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்                      (அகநானூறு 166)
என்பதால் பெறப்படுகிறது.
மூதூர்
      மிகுதியான கள்ளினைப் பருகிக் களித்தாடும் மக்களையும் ஆரவாரத்தினையுடைய பழைமை வாய்ந்த ஊரினை,
                “…………………..மூதூர்
                 விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்             (அகநானூறு 122)
                விளை கொள் மூதூர் விறலி பின்னற                   (அகநானூறு 352)
விழாக்கள் நடைபெறவில்லையென்றாலும் தூங்காமல் இருக்கும் ஊராகத் திகழ்கிறது.
                “பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” என்று பதிற்றுப்பத்தும், “பழவிறல் நனந்தலை பழவிறல் மூதூர்” என்று சிலப்பதிகாரமும் மூதூரைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.
நிறைவாக
  • அகநானூற்றின் ஊர் பெயர்களைப் பற்றியும் சிறப்பு பற்றியும் இவ்வாய்வுக்கட்டுரையில் அறிய முடிகிறது.
  • மூவேந்தர்களின் ஊர்களைப் பற்றியும், துறைமுகங்களான, உறந்தை, வஞ்சி, கொற்கை, முசிறி, புகார் ஊர்களைப் பற்றியும் அயல்நாடுகளோடு கொண்ட வணிகத்தையும் அறியமுடிகிறது.
  • தொண்டை நாட்டில் தேவாரம் புகழ்பெற்றுத் திகழ்கின்றது என்பதை அறிய முடிகிறது.
  • குறுநில மன்னர்கள் நிதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் போன்ற மன்னர்களைப் பாண்டிய நெடுஞ்செழியன் வெற்றி கொண்ட சிறப்பினை அறிய முடிகிறது.
  • அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் முருகனின் அழகும் மயிலின் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது.
  • சீத்தலைச்சாத்தனாரின் பெயரினைக் கொண்டு சீத்தலை எனும் ஊரினை அகநானூற்றில் அறிய முடிகிறது.
  • நெல்வளம் மிக்க ஊராக வல்லம் திகழ்கின்றதை அறிய முடிகிறது.
பார்வை நூல்கள்
             அகநானூறு                 – என்.சி.பி.எச்சு. வெளியீடு
             குறுந்தொகை           – என்.சி.பி.எச்சு. வெளியீடு
             பரிபாடல்                      – என்.சி.பி.எச்சு. வெளியீடு
             மதுரைக்காஞ்சி      – என்.சி.பி.எசுச். வெளியீடு
             நற்றிணை                   – என்.சி.பி.எச்சு. வெளியீடு
             சிலப்பதிகாரம்       – நா.மு.வேங்கடசாமி நாட்டார் உரை
             தமிழக ஊரும் பேரும் – சிதம்பரனார். சாமி. தமிழறிஞர்

    – திஇராதா,

முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),
அரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்