Skip to main content

சுந்தரச் சிலேடைகள் 14. நங்கையும் நாணலும் – ஒ.சுந்தரமூர்த்தி





சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை  அணி 14

நங்கையும் நாணலும்

கொண்டையதோ வெண்பூக்கள் கொண்டிருக்கும், நாடலுறும்
கெண்டைகளும் உள்ளிருக்கக் கேள்வியெழும் –  பண்டையரின்
பாவிருக்கும், பங்கமிலாப் பண்பிருக்கும், பெண்ணினத்தைக்
காவிருக்கும் நாணலெனக் காட்டு .
பொருள் – நங்கை
பெண்கள் தலைவாரிக் கொண்டையிட்டுப் பெரும்பாலும் வெண்பூக்களைச் சூடிக் கொள்வார்கள்.
விரும்பத் தகுந்த புருவத்திற்குக் கீழே இமைகளின் காவற்கு உள்ளே கெண்டை மீனையொத்த கண்கள் பல கேள்விகளை அசைவில் கேட்கும்.
பண்டை இலக்கியங்களில் பெண்ணின் பெருமை போற்றாத புலவர்களே இல்லை.
பெண் மென்மையானவள்;  நல்ல பண்பு நலன்களைக் கொண்ட பெண்களிடம் எவ்விதக் குற்றமும் இருக்காது.
 பொருள் -நாணல்
நன்கு வளர்ந்த நாணல் பூத்துக் குலுங்குவது அதன் தலையில் பூச்சூடியது போன்றிருக்கும்.
ஆற்றுள்ளே நீரோடுங்காலத்தில் பெரிய கெண்டை மீன்கள் யாரிடமும் சிக்காமல் இருக்க நாணற் புற்களுக்குள் மறைந்து கொண்டு தன்னைப் பிடிக்க வந்தவர்களைப் பலவாறாகக் கேள்வி கேட்கச் செய்யும் .
பண்டைப் புலவர்கள் நாணலைப் பல பாடல்களில் பாடியுள்ளார்கள் .
நாணல் மென்மையானது வளைந்து கொடுக்கும் நற்பண்பு கொண்டது.
அனைத்து ச் சிறப்புநாள்களிலும் வீற்றிருக்கும் .
எனவே நங்கையும் , நாணலும் ஒன்றாம் .
கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue