செஞ்சீனா சென்றுவந்தேன் 4 – பொறி.க.அருணபாரதி
சீன வரலாற்றுக் குறிப்புகள்
தமிழர்களைப் போலவே நாகரிகத்தில் சிறந்து விளங்கியசீனர்கள். தமக்கென தனித்த பல அரச மரபினரால் ஆளப்பட்டு வந்தவர்கள். சீனாவில், 1912ஆம் ஆண்டு மக்களாட்சி அரசு வேண்டி, கலகம் நடைபெற்றது. சன் யாட் சென் என்ற குடியரசுவாதியின் தலைமையில் நடைபெற்ற அக்கலகம், சீன மக்கள் குடியரசை நிறுவியது. இதே காலக்கட்டத்தில் இரசியாவில் புரட்சியாளர் இலெனின் தலைமையில் நடைபெற்ற சமவுடைமை(சோசலிச)ப் புரட்சி உலகையே உலுக்கிபோட்டது போல சீனாவையும் உலுக்கியது. சீனாவில், பொதுவுடைமைக் கட்சி உருவானது. சன் யாட் சென் வழி வந்த சீனத் தேசியவாதிகள், மக்களுக்கான அரசாகச் செயல்படவில்லை. நாட்டை மீண்டும் மன்னராட்சியை நோக்கித் திருப்பும் பணியை, தேசியவாதிகளின் கட்சியான கோமிங்டன் கட்சி செய்து கொண்டிருந்தது.
இந்நிலையில், சீனாவை இரண்டாம் உலகப் போர் கடுமையாகப் பாதித்தது. இட்லருடன் கரம் கோத்த சப்பானியப் படையினர் சீனாவிற்குள் ஆக்கிரமிப்புப் படைகளாக நுழைந்தனர். நாட்டை வல்லாண்மையர் (பாசிஃச்டுகள்) சூறையாடுவதைத் தடுக்கும் பொருட்டு, சீனத் தேசியவாதிகளுடன் இணைந்து சீனப் பொதுவுடைமைக் கட்சியும் தாயகத்தைக் காக்கும் பெரும் போரில் இறங்க வேண்டுமென அறைகூவல் விடுத்தது. சப்பானிய இராணுவத்திற்கு எதிராக சீனத் தேசியவாதிகள் ஒருபுறமும் சீனப் பொதுவுடைமையர் மறுபுறமும் தாக்குதல் நடத்தினர். இட்லரின் அழிவோடு நிலைகுலைந்த சப்பான் இராணுவம் பின்வாங்கிச் சென்றது. சீனப் பொதுவுடைமைக் கட்சி, இது தான் நேரம் என்று சீனத் தேசியவாதிகளை முறியடித்தனர். மாவோ தலைமையில், செஞ்சீன மக்கள் குடியரசு, பொதுவுடைமை அரசாக உருவானது.
அரசமைந்தவுடன், சீன மக்களுக்கு நிலச்சீர்திருத்தம் முதலான பல்வேறு வகைப்பட்ட நலத் திட்டங்களைச் செயலாக்கத் தொடங்கிய சீனப் பொதுவுடைமை அரசு, சோவியத் இரசியாவின் நட்பு சக்தியாக, தனியதிகாரஆட்சிகளுக்கு எதிராக உலக அரங்கில் நின்று பல அருவினை படைத்தது.
மாவோவின் தலைமையில் நடைபோட்ட சீனப் பொதுவுடைமைக் கட்சி, 1960களில் ‘புரட்சிகரப் பாய்ச்சல்’ என்ற பெயரில் பெருமளவிலான உற்பத்தியை நோக்கி நாட்டை முன் நகர்த்தும் திட்டத்தைச் செயலாக்கியது. ஆனால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் மக்கள் அரசியல்படுத்தப்படவில்லை. அதேபோன்று உள்கட்டமைப்பு வசதிகளும் அதற்கு ஈடுகொடுக்கவில்லை. முதலாளியம் முன்வைத்த ஆதாயநோக்கிலான – பெருமளவிலான உற்பத்தியையே, சீன அரசும் முன்வைத்தது. ஆனால், சீன அரசு இதனால் நாட்டின் ‘வளர்ச்சி’யை எட்ட முடியும் என நம்பியது. முதலாளியச் சீர்திருத்தவாதிகள் பலர், இத்திட்டம் குறித்து கடும் திறனாய்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், இத்திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்தி – முன்னோக்கிச் செல்லும் அளவிற்கு மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை.
எனவே, பொதுவுடைமைக் கொள்கையின்பால் மக்களை ஈர்க்கும் வகையில், பண்பாட்டுப் புரட்சி’ என்ற வரலாற்று முதன்மை வாய்ந்த பண்பாட்டுப் புரட்சியை மாவோ கொண்டு வந்தார். முதலாளியக் கருத்தியலாளர்களும், எதிர்ப்புரட்சிக்காரர்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். மாவோ தோற்றுவித்த இப்புதிய எழுச்சி, சீனப் பொதுவுடைமைக் கட்சிக்குள் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.
எனினும், 1976இல் மாவோவின் மறைவிற்குப் பிறகு அரசைத் தலைமையேற்று நடத்திய தெங்கு சியோ பிங்கு (Deng Xiaoping) மாவோ பாதையிலிருந்து விலகி, சந்தைப் பொருளியலின் சில நல்ல கூறுகளையும் இணைத்துக் கொண்டு நாம் சமவுடைமை(சோசலிச) இலக்கை நோக்கி நகர முடியும் என திரிபுவாதம் பேசினார். “சோசலிச சந்தைப் பொருளியல்” என்று அதற்கு பெயர் சூட்டினார். இப்புதிய பொருளியல் கொள்கையை செயலாக்கத் தொடங்கிய பின்னர், சீனா அந்நிய நிதி மூலதனங்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
எனினும், கட்சி மற்றும் அரசுப் பெயர்களில் மட்டும் ‘பொதுவுடைமை’ என்பதை நீக்காமல் பார்த்துக் கொண்டார். அதன் விளைவாக, 30 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு வளர்ந்து வரும் இன்னொரு வட அமெரிக்காவாகவே சீனா காட்சியளிக்கிறது. சீன உழைக்கும் மக்கள் அதன் விளைவுகளைத் துய்த்துக் கொண்டுள்ளனர்.
தெங்கு சியோ பிங்கின்(Deng Xiaoping) ”சீனத்தன்மையுடனான சமவுடைமை” உண்மையில் முதலாளியச் சந்தைப் பொருளியலுடன் சமரசம் செய்து கொள்ளும் வகையிலான ‘முதலாளியத் தன்மையுடனான சமவுடைமை’ ஆகவே செயலாற்றி வருகின்றது.
முதலாளியச் சந்தைப் பொருளியல், மக்களையும் இயற்கையையும் நுகர்வுக்கான வளங்கள் என சுருக்கிக் கருதுவது போலவே, டெங்சியோ பிங்கின் ‘சீனத்தன்மையிலான சமவுடைமை’ கருதத் தொடங்கியது. உள்நாட்டு உற்பத்தியின் மிகுதியைக் கொண்டு மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டிய சீன அரசு, உள்நாட்டு உற்பத்தியை ஏற்றுமதி செய்வதுதான் ‘வளர்ச்சி’ என்று கருதத் தொடங்கியது. ஏற்றுமதி சார்ந்து வளர்ந்த சீனப் பொருளியல், காலப்போக்கில் நாடுகள் கடந்து நிதி மூலதனம் வந்து கோலோச்ச இசைந்து கொடுத்தது. இதன் விளைவாக, இன்றைக்கு தனிவல்லாண்மை முதலாளிய நாடுகள் சீனாவில் பெரும் பெரும் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.
சந்தைப் பொருளியலின் இலக்கும் அதுவே! எனவே, சீனாவில் முதலாளியம் கோலோச்சத் தொடங்கியது.
இன்றைக்கும், மின் ஆற்றல், பகிர்வு, நிலக்கரி, தொலைத்தொடர்பு, எண்ணெய், எரிநெய்வேதிப்பொருள்கள், விமானப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆகிய துறைகளில் சீன அரசு நிறுவனங்கள் மட்டுமே கோலோச்ச முடியம். தனியார் நிறுவனங்கள் இத்துறைகளில் அரசுடன் போட்டியிட முடியாது. இத்துறைகளின் உற்பத்தி மட்டும், சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40இலிருந்து 50 விழுக்காடு பங்கு வகிக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பெரும் போர்களையும், உள்நாட்டுக் கலகங்களையும் சந்தித்து வந்த சீனப் பொதுவுடைமைக் கட்சியின் முன்னணியாளர்களும் சரி, தோழர்களும் சரி, டெங் சியோ பிங்-கின் சமவுடைமைப் பொருளியல் எதிர்ப்பு நிலைக்கு பெரிய அளவிலான கண்டனங்கள் எதையும் எழுப்பவில்லை. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளியச் சந்தைப் பொருளியல் ஏற்படுத்திக் கொடுக்கப்போகும் புதிய வாய்ப்புகளை எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
கட்சியின் முன்னணித் தலைவர்களும், அதன் குடும்பத்தினர் பலரும் முதலாளியச் சீரழிவுகளில் சிக்கினர். பணக்காரர் ஆவது தான் நமது இலட்சியம் என உழைக்க வேண்டும் என்ற ‘மந்திரத்தின்’ வழியே, மக்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். இன்னொருபுறத்தில், சீனப் பொதுவுடைமைக் கட்சியின் உயர்மட்டத் தலைமையிலிருந்து தோழர்கள் வரையிலும் ஊழலும், கையூட்டும் பரவியது. ஊழல்தான் முதலாளியத்தின் ஊற்றுக்கண் என்பது மெய்ப்பிக்கப்பட்டது.
முதலாளியச் சந்தைப் பொருளியல் உருவாக்கிய சீனாவின் புதியப் பணக்கார வகையினருள்(வர்க்கத்தினருள்) தாமும் ஓர் அங்கமாகத் துடிக்கும் பலர், சீனப் பொதுவுடைமைக் கட்சியிலும் இருப்பதுதான் வேதனை! 2012 ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் மதில்வீதி அல்லது வால்வீதி இதழ்(The Wall Street Journal), சீனாவின் 1024 பணக்காரர்களில் 160 பேர் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் என்றும் அவர்களது சொத்து மதிப்பு 22100 கோடி டாலர்கள் என்றும் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. குடும்ப அரசியலும், வல்லாண்மையும் தலைதூக்கியுள்ள இலங்கையை விட அதிகளவில் ஊழல் நடைபெறும் நாடாக சீனாவே திகழ்வதாக 2013ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பன்னாட்டுப் புலப்பாட்டு அமைப்பு (Transparency International) தயாரித்த ஊழல் நாடுகளின் பட்டியல் தெரிவிக்கிறது.
(தொடரும்)
வணக்கம்
ReplyDeleteஅறிய முடியாத சில தகவலை அறிந்தேன் இவை எல்லாம் வரலாற்றில் ஒரு மைக்கல். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-