(ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி)
3. இந்தியப்பணத்தாளில் காந்தி …
சீனப் பணத்தாளில் மாவோ!
சீனாவுக்குள் நுழைந்தவுடன் சிகப்பு
நிறத்தில் மாவோ – இலெனின் படங்கள் என்னை வரவேற்கும் என நினைத்திருந்தேன்.
ஆனால், நுழைந்தவுடன் சிவப்பு நிறப்பின்னணியுடன் வட அமெரிக்க நிறுவனமான
கே.எப்.சி. நிறுவன முதலாளி சாண்டர்சு படத்துடன்கூடிய வணிகச்சின்னம்தான்
என்னை வரவேற்றது! ஒரு சில
இடங்களில் டெங் சியோ பிங்கின் படங்களைக் கொண்ட பதாகைகளில் சீன எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன.

நம்மூரில், எப்படி மகிழுந்துகளின் முன்புற
இருக்கைக்கு முன் சிறு சிறு கடவுள் சிலைகளை வைத்திருப்போமோ, அதே போல
சீனர்கள் பலரும், தங்களுடைய வாகனங்களின் முகப்பில் மாவோவின் சிலையை
வைத்திருக்கின்றனர். எளிமையான சில கடைகளில், மாவோவின் படம் இருப்பதைக்
கண்டேன். ஆனால், சீனத் தகவல் தொழில்நுட்ப நண்பர்கள் பலரிடம் பேசியபோது,
அவர்கள் மாவோ-வை வெறும் ‘தேசத்தந்தை’யாக மட்டுமே அறிந்து வைத்துள்ளனர்
என்று புரிந்து கொண்டேன்.

வானளாவிய உயர்ந்து நிற்கும் கட்டடங்கள் –
தெருவுக்குத் தெரு – கே.எப்.சி. – மெக்டொனால்டு நிறுவனங்கள் என ஒரு குட்டி
வட அமெரிக்காவாகவே காட்சியளித்தது, சீனா. அவ் வகையில், தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்கள் நிறைந்த வட அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு
என்றழைக்கப்படும் சான் பிரான்சிசுகோ நகரம் போலவே, தெற்குச் சீனாவில்
அமைந்துள்ள சியான் நகரம் காட்சியளித்தது. ஏனெனில், இந்த நகரத்தில் மட்டும்
சற்றொப்ப 800க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
கடைவிரித்திருந்தன.
தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 7.2 கோடி என்றால், சியான் மக்கள்
தொகை மட்டும் 8.4 கோடி. சென்னையைவிட 57 மடங்கு அளவிற்கான பரப்பளவைக் கொண்ட
நகரம் இது! பண்டைய சீனாவின் முதன்மையான மன்னர்கள் பலர், இந்நகரைத்
தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் ஏற்படுத்தப்பட்ட பல கட்டடக்
கட்டமைப்புகள் இங்கு தொடர்ந்து காணக் கிடைக்கின்றன. அதை சுற்றிப்பார்க்க,
கணிசமான அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சியான் நகரத்திற்கு
வருகின்றனர்.




வேளாண்மை குறைவாக நடக்கும் இப்பகுதியில்
காலப்போக்கில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வந்திறங்கின. சுற்றுலா-தகவல்
தொழில்நுட்ப நிறுவனங்களின் வருகை காரணமாக, இங்கு சின்சியாங்கு(Xinjiang)
என்ற பெயரிலான மிகப்பெரும் விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
(தொடரும்)
