Skip to main content

மாமூலனார் பாடல்கள் 25: சி.இலக்குவனார்


மாமூலனார் பாடல்கள் 25: சி.இலக்குவனார்

உரு. எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! – தலைவி

-சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
elephant_pidi01
திருமணம் நிகழ்ந்தபின் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளான். பண்டைத் தமிழ்நாட்டில் திருமணம் நிகழ்ந்த சின்னாட்களில் தலைவன் தலைவியைப் பிரிதல் சிறப்புக்கல்வி பெறும்பொருட்டும், அரசியல் அலுவல் பொருட்டும். பொருளீட்டும் பொருட்டும் நிகழ்ந்தது. இப் பிரிவுகளைப்பற்றிய விரிவுகளைத் தொல்காப்பியர் இலக்கண நூலில் தெளிவுற அறியலாம். இப்பாடலில் வருகின்ற தலைவனும் அவ்வாறே பிரிந்து சென்றுள்ளான். தலைவனைப்பிரிந்த தலைவி வருந்துகின்றாள். ஆறுதல் கூறும் தோழியிடம் கூறுகின்றாள்.
  ‘‘அன்று அவர் என் கைகைப்பிடித்து மணந்த நாளில் என் அழகு எவ்வளவு மிகுதியாக விளங்கிற்று? இன்று அவ்வழகெல்லாம் எங்குச் சென்றது? நம்மைவிட, நம் அழகைவிடச் சிறந்தபொருள் என்ன என்று கொண்டாரோ?” என்று கூறி வருந்துகின்றாள். இக்கருத்தை வெளிப்படுத்த எண்ணிய மாமூலனார் சில வரலாற்றுச் செய்தியையும் பிணைத்துவிடுகின்றார். அக்காலத்தில் கலைஞர் நிலை எவ்வாறு இருந்தது என்பதைக் கூறுகின்றார். புலவர் என்றால் சில நூற்றாண்டுகளாக இல்லாததைப் புனைந்து உரைப்பவர்; கூழுக்கும் கூறைக்கும் (ஆடைக்கும்) பொருந்தாதனவற்றைப் பாடுபவர்; பொருள் கொடுத்தால் போற்றுவர்; பொருள் கொடாவிடின் தூற்றுவர் என்றெல்லாம் கருதிவருகின்றனர். ஆனால் பழந் தமிழ்ப்புலவர் இயல்பு அவ்வாறு இருந்தது அன்று. வாழ்வினும், வயிற்றினும் மானமே பெரிதென மதித்தனர். உண்மை கூறுவதே புலவன் இயல்பு என்று எண்ணினர். கோடி கொடுத்தாலும் இல்லாததைக் கூறார். ஒரு பொருளும் பெறவில்லையாயினும், உள்ளதை மறைத்துக் கூறார். அச்சிறப்புக் குணத்தை மாமூலனார் இப்பாடலில் குறிப்பிடுகின்றார். நன்னனிடம் செல்லும் புலவர்கள் துலாக்கோல் போன்ற நடுநிலையாளர்கள். குற்றமற்ற சிறந்த மொழிச் செல்வர்கள். கொடுக்கிலாதாரைப் பாரியே என்று கூறிப்பொருள் பெற்றவர்கள் அல்லர். இவ்வுலகம் முகமனைப் பெரிதும் விரும்பும் இயல்பினது. துன்பமின்றி வாழ்க்கை நடத்தவிரும்பும் சில சோம்பர்கள் செல்வரையடுத்து அவர்க்கு மகிழ்ச்சிதரும் செய்தியையே கூறி வயிறு வளர்க்கின்றவர்களும் உளர். உண்மை கூறின் விரும்பாத போலிமனிதர்களே உலகில் மிகுதியும் உளர். ஆகவே உண்மை கூறுபவர் வறுமையால் வாடுதல் இயல்பே. மாமூலனார் குறிப்பிடும் பண்டைத் தமிழ்ப்புலவர்களும் வறுமையால் வாடினர் என்பதை உலைந்த (கெட்ட) ஒக்கல் உடையவர் என்பதனால் குறிப்பிடுகின்றார். புலவர் தலைவராகிய வள்ளுவர் பின்வருமாறு கூறினார்.
இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு”
ஏழைகளை வஞ்சித்து, மறைத்து மறைத்து வாணிபம் செய்து, பகற்கொள்ளை – பலவகை ஏமாற்றும் கொள்ளை-யால் பொருள் ஈட்டிச் செல்வராதலும், சிறந்த நூல்களைக்கற்று, தெளிந்த அறிவினை அடைந்து, பண்பட்ட பெரியராதலும் வெவ்வேறுதானே! ஆகவே கலைச்செல்வர் வறுமையில் வாடுதல் இந்த ஆட்சிமுறை நீடிக்கும் வரையில் என்றும் நிகழும்.
  ஆனால் அன்று அரசர்கள் குறுநிலமன்னர்கள், கலைஞர்களைப் போற்றுதல் கடன் எனக் கருதிப் போற்றினர். அவ்விதம் போற்றிய நன்னன் என்பவனையே இப்பாடலிலும் குறிப்பிடுகின்றார். பகைவர்களை வென்று பெற்ற பொருள் எல்லாம் சேமித்து வைப்போம் என்றும், தனக்குப் பயன்படும் என்றும், உறவினர்க்குக் கொடுப்போம் என்றும் கருதாது, ஆராயாது, புலவர்கட்கு – கலைஞர்கட்கு, வழங்கியதாகக் குறிப்பிடுகின்றார். அவன் நாட்டில் உணவின்றி வாடுதல் கிடையாது.
  உணவின்றி வாடும் பயிர்களைப் பார்க்கவேண்டுமென்றால் மக்களில்லாக் காட்டில்தான் காணலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றார். காட்டில் உள்ள யானை பசியால் வேங்கைப்பூவைத் தின்றுவிட்டு பசி நிரம்பாது தலையில் கையை வைத்துக்கொண்டு நிற்கும் என்கிறார்.
  இங்கு மாமூலனாரின் இயற்கைப்புலமை இனிது விளங்குகின்றது. “வேங்கைமரம் உயர்ந்த அடிமரத்தை உடையது; கரிய கிளைகளை உடையது. சிவந்த – நெருப்புப் போன்ற – பூக்களை உடையது. நெற்றியில் வெண்புள்ளிகளையும் கோடுகளையும் யானை பெற்றுள்ளது. பசியால் வாடியது. அது தன் தலையில் கையை வைத்துக்கொண்டிருப்பது, மலைமீது பாம்பு ஊர்வது போல் இருக்கின்றது.” என்று என்ன அழகுறக் கூறுகின்றார். இந்த யானை, பசியால் வாடுமிடமும் தமிழ்நாடு அல்ல; வேற்று நாடு என்று கூறிவிட்டார். சொல்பெயர் தேயம். அதாவது மொழி வேறுபட்ட நாடு. ஆகவே தமிழ்நாட்டில் விலங்குகூடப் பசித்திராது என்று கூறிவிட்டார். உழவையும் தொழிலையும் போற்றி வாழ்ந்த நாட்டில் பசிக்கு இடம் ஏது?
உரு . பாடல்
அகநானுறு     349      பாலை
அரம்போழ் அவ்வளை செறிந்த முன் கை
வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய
எவன் ஆய்ந்தனர்கொல்! தோழி! ஞெமன்
தெரிகோல் அன்னசெயிர்தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே
உரன்மலி உள்ளமொடு முனைபாழ் ஆக
அரும்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நன்னாட்டு
ஏழில் குன்றத்துக் கவா அன் கேழ்கொளத்
திருந்து அரை நிவந்த கருங்கால் வேங்கை
எரிமருள் கவளம் மாந்திக் களிறுதன்
வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
கல்ஊர் பாம்பில் தோன்றும்
சொல்பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.
 
உரைநடைப்படுத்தல்:
க. தோழி! ஞெமன் தெரிகோல்…..சுரன் இறந்தோர் (அடிகள் ங – கச)
உ. அரம்போழ்….ஆய்ந்தனர்கொல் (அடிகள் க-ங)
*****
சொற்பொருள்
dancetroop02
க. (அடிகள் ங – கச)
  தோழி – தோழியே, ஞெமன் – சமனாக நின்று பொருள்களின் நிறையை, தெரிகோல் அன்ன – அறியும் துலாக் கோலை ஒத்த, செயிர் தீர் – குற்றம் நீங்கிய, செம்மொழி – சிறந்த மொழியால் நடுநிலை மாறுபடாது உள்ளதை உள்ளவாறே பாடும் தன்மையினையும், உலைந்த – வறுமையால் அழிந்த, ஒக்கல் – சுற்றத்தாரையும் உடைய, பாடுநர் – புலவர்கள் பாணர்கள் முதலியோர், செலினே – சென்றால், உரன்மலி – வலிமைமிகுந்த, உள்ளமொடு – ஊக்கத்தொடு, முனை – பகைவர் போர் முனை, பாழ்ஆக – கெட்டு அழிய, அரும்குறும்பு – பகைவர்களின் அரிய காவலை, எறிந்த – அழித்துப்பெற்ற, பெரும்கல – சிறந்த நகைகள் முதலான, வெறுக்கை – செல்வத்தை, சூழாது – எதையும் ஆராயாது, சுரக்கும் – கொடுக்கும், நன்னன் – நன்னன் என்பானின், நல் நாட்டு – நல்ல நாட்டின் கண் உள்ள, ஏழில்குன்றத்து – ஏழில்மலையின், கவான் – சாரலில், கேழ்கொள – அழகுவிளங்க, திருந்துஅரை – ஒழுங்குபட்ட அடிமரம், நிவந்த – உயர்ந்த, கரும்கால் – கரிய கிளைகளையுடைய, வேங்கை – வேங்கைமரத்தின், எரிமருள் – நெருப்பை ஒத்த சிவந்த பூக்கள் ஆய, கவளம் – உணவை, மாந்தி – தின்று, களிறு – பசிதீராத ஆண்யானை, தன்வரிநுதல் – தன் கோடு பொருந்திய அழகிய நெற்றியில், வைத்த வலிதேம்பு – வைக்கப்பட்டுள்ள வலிமை குறைந்துவாடிய, தடக்கை – பெரியகை, கல்ஊர் – மலைமீது தவழ்ந்து செல்கின்ற, பாம்பின் – பாம்பைப்போல, தோன்றும் – காணப்படும். சொல்பெயர் – மொழி வேறுபட்ட தேஎத்த – பிறநாடுகளில் உள்ள, சுரன்இறந்தோர் – வெப்பம்மிக்க வழியைக் கடந்து சென்றோர்.
dance01
உ. (அடிகள் க-ங)
அரம்போழ் – அரத்தால் அறுத்துச் செய்யப்பட்ட, அம்வளை – அழகிய சங்கு வளையல்கள், செறிந்த – நிறைந்த, முன்கை -முன்கையினை, வரைந்து – தனக்கு உரித்தாகத் திருமணம் செய்து, பிணித்த – அன்பால் பிடித்ததால் உண்டாகிய, தொல்கவின் – பழைமையாகிய அழகு, தொலைய – கெடுமாறு, எவன் ஆய்ந்தனர் கொல் – என்ன நினைத்தனரோ?
ஆராய்ச்சிக்குறிப்பு:-
திருமணக்காலத்தில் தலைவியின் கையைத் தலைமகன் பிடித்துக்கொள்ளுதல் hands_marriage01மணநிகழ்சசிகளுள் ஒன்றாகும். பண்டைத் தமிழ்நாட்டில் இவ்வழக்கம் இருந்தது என்பதைப் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டும் உணர்த்துகின்றது. குறிஞ்சிப்பாட்டில்,
நேர் இறை முன்கை பற்றிநுமர்தர
நாடறி நன்மணம் அயர்கம்; சில்நாள்
கலங்கல் ஓம்புமின்; இலங்கு இழையீர்!”
என்று தலைவியை நோக்கித் தலைவன், கூறுவதை நோக்குங்கள். ஆகவே, மணமாகாத பெண்ணின் கையைக் கணவனாக வருபவனே பிடித்தற்குரியவன். வேறு ஆடவர் தொடுதல் கூடாது. பட்டினத்தாரும் கணவனைக் குறிப்பிடும்போது “கைபிடி நாயகன்” என்று குறிப்பிட்டார். இன்னும், ஒரு பெண் “அவன் என் கையைப் பிடித்தான்” என்று கூறுவளேல் அதன் பொருளை அறியாத தமிழர் இரார். திருமணத்தை ஆரியமொழியில் “பாணிக்கிரகணம்’ (கையைப் பிடித்தல்) என்பதும் இதனாலேயே.
நன்னன்: இவனைப்பற்றிய வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. இவன் பல்குன்றக்கோட்டம் என்ற இடத்தை ஆண்ட சிற்றரசன் என்றும் பல்குன்றக்கோட்டம் இப்பொழுதைய வடஆர்க்காடு தென்ஆர்க்காடு மாவட்டங்களில் அடங்கி இருக்கின்றது என்றும் வரலாற்றுக்காரர் கூறுவர். மதுரைக் காஞ்சியில் நன்னன் நாள்கொண்டாடப்படும் சிறப்பு கூறப்படுகின்றது. அப்பொழுது ஆண்டவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்பவன் ஆவான்.
பேரிசை நன்னன் பெறும் பெயர் நன்னாள்
சேரிவிழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு”
என்று கூறப்படுவதை நோக்குங்கள். உரையாசிரியர் நச்சினார்க்கினியர், “நன்னனைக் கொண்டாடுகின்ற பிறந்தநாள்” என்று பொருள் கூறுகின்றார். ஆதலின், நெடுஞ்செழியனைச் சிறப்பித்த மருதனாரால் சிறப்பித்துப் பாடப்பட்ட பெருமையுடையவன் என்று அறிகின்றோம்.
இப்பாட்டில் இவன்நாட்டில் உள்ள ஏழிற்குன்றம் குறிப்பிடப்படுகின்றது. இவ்வேழிற்குன்றம். ஏழுமலை என்று வழங்கும் திருப்பதியோ அல்லது வேறு இடமோ அறியமுடியவில்லை. ஏழில்மலை என்று பெயரைப்பெற்ற ஒரு மலையாய் இருக்கலாம் என்று எண்ண இடம் உண்டு.





Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்