மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார்
மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக.. (ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) உஅ. முன்னே புறப்படு என்நெஞ்சே! -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவன் திருமணத்தை நடத்திக்கொள்ளாது வேற்றுநாட்டிற்குச் சென்றுவிட்டான். தலைவி முதலில் ஆற்றி இருந்தாளேனும், நாள் ஆக, நாள் ஆக உடல் இளைத்தது; கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று கழன்று விழுந்தன உறக்கம் என்பது இல்லாது கண்களினின்றும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ஆற்ற முடியாத துன்பம்! இதைப் போக்கி கொள்வதற்கு வழிதேடுதல் வேண்டும். வழி என்ன? தலைவனை அடைவதே. தலைவன் இவளையடைந்து மணம் நிகழ்த்தல் வேண்டும். அல்லது தலைவி தலைவனிடத்திற்குச் சென்று மணக்குமாறு செய்தல் வேண்டும் ஒரு பெண் தன் காதல் மிகுதியால் காதலனை நாடிச்செல்லுதல் மிக அருமை. தன் காதலனை அடைய முடியாத நிலைகள் வீட்டில் ஏற்படுத்தப்படுமாயின், அஃதாவது வேறு ஆடவனுக்கு மணம் செய்து கொடுப்பதற்குப் பெற்றோர் முயல்வர...