கலித்தொகையில் வாழ்வியல் பண்புகள்



""கல்வி வலார் கண்ட கலி'' எனப் பாராட்டப்படும் கலித்தொகையில் பல்வேறு வாழ்வியல் செய்திகள் இடம்பெற்றுள்ளன.""பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்'' என்பது பலராலும், பல நேரங்களிலும் எடுத்துரைக்கப்படுகிறது. இத்தொடர் எங்கிருந்து எடுத்தாளப்படுகிறது என்பதைப் பலர் அறிந்திருக்கலாம்; சிலர் அறியாமலும் இருக்கலாம். ஆயினும், இக் கருத்து, இன்று மிகப்பெரிய ""மக்கட் பண்பு என்று சொல்லப்படுவது - உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதலாகும்'', என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார் (கலி.133). இத்தொடர் நெய்தற்கலியில் (133) இடம் பெற்றுள்ளது. இதைத்தவிர, பல அரிய செய்திகளும் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.இக்கலிப்பாவில் (133) ஒன்பது கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இல்வாழ்க்கை நடத்துதல் என்று சொல்வது வறியவர்க்கு உதவுதலாம். ஒன்றைப் பாதுகாத்தல் என்பது கூடியவரைப் பிரியாது இருத்தலாம். அன்பெனச் சொல்லப்படுவது தன் சுற்றத்தாரைப் பேணிக்காத்தலாம். அறிவெனக் கூறப்படுவது அறியாதார் கூறும் சொல்லையும் பொறுத்துக் கொள்ளுதலாம். ஒருவரோடு ஒருவர்க்குள்ள உறவென்பது கூறிய சொல்லை மறுக்காமல் காத்தலாகும். நிறையென்று சொல்லப்படுவது, மறைவான செயலைப் பிறர் அறியாது ஒழுகுதலாகும். முறையென்று சொல்லப்படுவது நம்மவரெனக் கண்ணோடாது குற்றத்திற்கேற்பத் தண்டனை வழங்குதலாகும். பொறுமையெனச் சொல்லப்படுவது பகைவரைக் காலம் வரும்வரையில் பொறுத்துக் கொள்ளுதலாகும். மேலே கூறிய கருத்துகளை இன்னும் சற்று விரிவாகப் பார்த்தல் நலம். "ஆற்றுத லென்பது அலந்தவர்க் குதவுதல்'; இதனை,""துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை'' (42)எனத் திருக்குறள் தெளிவுற வழிகாட்டியுள்ளது. "போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை'; இத்தொடரின் கருத்தினைக்,""செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை'' என்ற பிரிவாற்றாமையில் அமைந்துள்ள குறள் தெளிவு படுத்துதலை அறியலாம். பிரிவு இன்னாதது என்பதனை, இன்னா தினியார்ப் பிரிவு (1158) என்ற வள்ளுவம் தெளிவாக உரைக்கும். "பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுதல்'; இதனைத் திருவள்ளுவர்,""நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை'' (998) என எடுத்தோதுவார். "அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை'; இக்கருத்தினை உள்வாங்கிக்கொண்ட வள்ளுவப் பேராசான், உறவினரைத் தழுவி வாழும் வழியாகப்,""பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையர் மாநலத் தில்'' (526) என எடுத்துரைப்பார். இதனையடுத்து, "அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்'; எனச் சுட்டும் கலி. இக்கருத்தினை,""எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு'' (423) என வழிமொழிந்துரைப்பார் வள்ளுவர். "தெளிவெனப் படுவது கூறியது மறாஅமை'; என்ற கலித்தொகைச் செய்யுள் கருத்தை, ""நின்ற சொல்லர்'' (நற்றிணை:1) எனக் கபிலர் கூறுவார். இக் கருத்தினை,""உழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்காழி யெனப்படு வார்'' எனத் குறள் சுட்டுகிறது. "நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை'; என்ற கருத்தைக் காமத்துப் பாலில், நிறையழிதல் என்னும் அதிகாரத்தில் தலைவி கூற்றாக வள்ளுவர்,""நிறையுடோன் என்பேன்யன் யானோ வென்காமம்மறையிறந்து மன்று படும்'' (1254) "முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வெüவல்' இதனைச் செங்கோன்மை அதிகாரத்தில்,""ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை'' (541) என்ற குறட்பாவால் குறிப்பிடுகிறார். இறுதியாகப் "பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்' என்னும் கருத்தினைக் கலித்தொகை கூறும். இதனைப் பொறையுடைமையின் முதல் குறட்பா மிகத் தெளிவாகச் சுட்டுதலைக் காணலாம். அக்குறட்பா,""அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார் பொறுத்தல் தலை'' (151) என்பதாகும். மேலும், "வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை' எனவும் திருவள்ளுவர் கூறுவார். நாலடியாரும் "எல்லாம், ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை' எனப் பொறைக்கு இலக்கணம் வகுப்பார். இவ்வாறு, வாழ்வியல் நெறிகளுக்கான பண்புகளைத் தொகுத்துச் சுட்டியுள்ளார் நெய்தற்கலி ஆசிரியர் நல்லத்துவனார். அவரது பாடலுக்கு திருக்குறள் வழி விளக்கம் கண்டோம். அப்பாடல் வருமாறு:""ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமைபண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமைஅறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்செறிவெனப் படுவது கூறியது மறாஅமைநிறையெனப் படுவது மறைபிற ரறியாமைமுறையெனப் படுவது கண்ணோடா துயிர்வெüவல்பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்''(கலி.133)மேலே காட்டிய ஒன்பான் செய்திகளும் ஒன்பான் மணிகளாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியன. இத்தகைய நற்கருத்துகள் நம் தமிழிலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இம்மாமணிகளை ஓதியுணர்ந்து நல்வாழ்வை மேம்பாடுறச் செய்வோமாக!

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்