நச்சினார்க்கினியரின் உவமைத்திறன்



தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பெருமக்களில் நச்சினார்க்கினியர் குறிப்பிடத்தக்கவர். இவர் தொல்காப்பிய நூலில் உள்ள எழுத்ததிகாரம், பொருளதிகாரம் இரண்டுக்குமே உரை எழுதியுள்ளார்.


பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், செய்யுளியல் எனும் ஆறு இயல்களும் எழுதப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியரின் உரையானது இளம்பூரணர் உரைக்கும் பேராசிரியர் உரைக்கும் காலத்தால் பிற்பட்டதாகக் கருதப்படுகிறது.


புலவர்கள் தாங்கள் கூறவந்த கருத்துகளைத் தெளிவாக விளக்குவதற்கு உவமைகளைக் கையாள்வது தொன்றுதொட்டு வரும் மரபாகும். பொருளதிகாரத்தில் நச்சினார்க்கினியர் பயன்படுத்தியுள்ள சில உவமைகள் இந்த உரையாசிரியரின் கற்பனை நயத்துக்கும், இவரது எழுத்து ஆளுமைக்கும் உவமையாக இருக்கிறது.


நச்சினார்க்கினியர் பொருளதிகாரத்திற்கு அப்பெயர் ஏன் வந்தது என்பதை பின்வருமாறி விளக்குகிறார். அப்போது, "நாண்மீனின் பெயர், நாளிற்குப் பெயராகினாற் போல' என்ற உவமையைக் காட்டுகிறார்.


கார்த்திகை என்பது ஒரு நாள்மீனின் பெயராகும். கார்த்திகை மீனின் ஆட்சிக்குரிய நாளுக்கு கார்த்திகை எனும் பெயரே ஆகிவந்து ஆகுபெயராக நிற்கிறது. அதுபோல, "பொருள்' எனும் பெயரானது அப்பொருளின் இலக்கணத்தை உணர்த்தும் அதிகாரத்திற்குப் பெயராக வந்துள்ளது என்பது நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம்.


கலித்தொகையில், ""கொடிமிசை மையறு மண்டிலம்'' எனும் தொடர் காணப்படுகிறது. இத்தொடரில் கொடி என்பதற்குக் கீழ்த்திசை என்பது பொருளாகும்.

""கொடிநிலை கந்தழி வள்ளி என்ற


வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்


கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே''

என்ற நூற்பாவின் பொருளைக்கூற வரும் நச்சினார்க்கினியர் கலித்தொடரின் தொடரை உவமையாக்குகிறார். ""கொடிமிசை மையறு மண்டிலம் என்றாற்போல'' என்பது அவர் காட்டும் உவமையாகும்.


அதாவது, கலித்தொகையில் கொடி எனும் சொல் கீழ்த்திசை எனும் பொருள்தருவதுபோல இந்நூற்பாவிலும் கொடி என்பதற்குக் கீழ்த்திசை என்று பொருள் கொள்ள வேண்டும். அப்போது ""கொடிநிலை என்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் சூரியன் எனும் பொருளைத்தரும்'' என்பது இதன் விளக்கம்.


அடுத்து, உள்ளங்கை, புறங்கை எனும் இரண்டையும் உவமையாக நச்சினார்க்கினியர் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. உள்ளங்கை இரண்டு உடையவர்க்குப் புறங்கையும் இரண்டாகத்தாம் இருக்கும். நான்கு இருக்க முடியாது.


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை பெருந்திணை எனப்படும் ஏழும் அகத்திணையில் வருகின்றன. பன்னிரு படலத்தாரும், வெண்பாமாலை ஆசிரியரும் புறத்திணை பன்னிரண்டு என வகுத்துள்ளனர். ஆனால் நச்சினார்க்கினியரோ, ""அங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காவது இரண்டாயவாறு போல'' எனும் உவமையைக் கூறி, அகத்திணை ஏழுவகை என்றால் புறத்திணையும் ஏழுவகையாகத்தான் இருக்க முடியும். பன்னிரண்டாக இருக்க முடியாது என்று விளக்குகிறார்.


பொதுவாக ஒருவரை பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்களில் யார் உயர்ந்தவர் என்பது உலக வழக்காகும். ஆனால் அறிவர், தாபதர் முதலியவர்களைப் பிறரோடு ஒப்பிட்டுப் பாராமலேயே அவர்தம் உயர்வை எண்ணி அவரை மேம்பட்டவர் என்று வாகைத்திணையில் காட்டப்படுகிறது.


இதற்கு உவமை கூறவந்த நச்சினார்க்கினியர் ""ஒன்றனோடு ஒப்பு ஒரீஇக் காணாது மாணிக்கத்தினை நன்றென்றாற் போல'' எனக் காட்டுகிறார். உலகில் மாணிக்கத்தை வேறு பொருளுடன் ஒப்பிட்டுப் பாராமலேயே அதன் உயர்ச்சி கருதி பாராட்டுகின்றனர். அதுபோல அறிவர் முதலானவர்களையும் உயர்வாகக் கருதுவர் என்பது இதனால் விளக்கப்படுகிறது.


ஒன்றே வேறே எனும் நூற்பாவில் "உயர்ந்த பால்' என்பது உயர்தற்குக் காரணமாகிய பால் எனப் பொருள் விரியும். இதை விளக்க நச்சினார்க்கினியர், "நோய் தீர்ந்த மருந்து' என்ற உவமையைக் கையாள்கிறார். நோய் தீர்ந்த மருந்து என்பது, நோய் தீர்வதற்குக் காரணமாகிய மருந்து என்று பொருள் விரியும். எனவே இவ்வுவமை மிகவும் பொருத்தமானதாகும்.


""மிக்கோனாயினும் கடிவரையின்றே'' எனும் நூற்பாவில் மிகுதல் என்பது இரட்டித்தல் எனும் பொருளைத் தருகிறது. இதை விளக்க, ""வல்லெழுத்து மிகுதல் என்றாற்போல'' என்று நச்சினார்க்கினியர் உவமை கூறுகிறார். புணர்ச்சி இலக்கணத்தில் வல்லெழுத்து மிக்கது என்றால் அங்குள்ள ஒரு வல்லொற்று இரட்டித்தலைக் குறிக்கும். அதுபோலவே இந்நூற்பாவிலும் பொருள்காண வேண்டும் என்று உவமை காட்டுகிறது.


இதுபோல தொல்காப்பியப் பொருளதிகார உரையில், தான் கூற வந்த விளக்கத்துக்கு அரண் சேர்த்துப் பெருமை சேர்க்கப் பல உவமைகளை நச்சினார்க்கினியர் கையாண்டுள்ள உவமைத்திறன் படித்து இன்புறத்தக்கது

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்