கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல் – தொடர்ச்சி)
பூங்கொடி
எரிந்த ஏடுகள்
அண்டையில் நின்ற அந்நூல் நிலையப்
பணியாள் தன்பாற் பரிந்து வினவினென்,
இன்னும் உளவோ ஏடுகள் என்னவும்
அன்னாய்! ஏடுபல் லாயிரம் இருந்தன,
வெந்நீர் வேண்டி விறகென அவற்றை
எரித்தோம் என்றனன்; துடித்ததென் மனனே,
90 எரித்தஅவ் வேடுகள் எத்தகு நூலோ! i
கலைமகள் தமிழைக் காப்பதிப் படியோ!
கொலைமிகு நெஞ்சர் கொடுமைதான் என்னே!
வெந்நீர் பாய்ச்சி, மிகுபயன் நல்கும்
கன்னல் தமிழ்ப்பயிர் கருகிட முனைந்தனர்;
95 என்னே! என்னே இவர்தம் மதிதான்!
மடமை என்கோ? கொடுமை என்கோ?
படம்விரி யரவுக்குப் பசுப்பால் வார்த்தோம்!
உடனுறை வாழ்வும் உவந்ததற் களித்தோம்!
மனத்துயரம்
அச்சகம் தொழிலோன் அவன்மனை யாட்டி
100 மகப்பெறு நிலையில் மிகப்பெருந் துயரால்
வருந்துதல் கேட்டு விரைந்தவன் தொழிலைத்
திருந்த முடித்து வரும்பொருள் பெற்று
வீடு செல்ல விழைந்தவன் எடுக்கக்
கூடும் எழுத்துக் குலைந்து சிதறி
105 விழ்ந்திடக் கண்டு வெதும்புதல் போல
என்மனம் கலங்கி ஏடுகள் பார்த்தேன்;
இருபெருஞ் சுவடிகள்
கூத்தும் இசையும் கூறும் இருநூல்
ஏத்தும் படியாய் என்விழிப் பட்டன;
வாழ்த்துக் கூறி மகிழ்ந்தவை புரட்டினேன்;
110 நெருப்பாற் புண்படு நெஞ்சம் வேதுபெற்
றிருப்பது போல இன்பம் விளைந்தது;
இசையும் கூத்தும் தமிழில் இலைஎனும்
வசைமொழி கூறி வருவோர் மடமை
தொலைக்கஇவ் விருநூல் துணைசெயும் எனநான்
விலக்குப் பெற்றவ் வேடுகள் கொணர்ந்தேன்;
மூதாட்டி சுவடிகள் தருதல்
நானிவை பிரித்துப் பயிலும் நாளில்
மீனவன் என்னும் மேலோன் கையன
இந்நற் சுவடிகள் என்ப துணர்ந்தேன்;
மின்னற் கொடியே மிகுபயன் தருமிவ்
வேடுகள் நின்பால் இருந்திடல் நலமாம்;
கூடிய ஆண்டெனைக் கூடிய ததனால்
இவைநீ கைக்கொண் டியற்றுக நற்பணி:
பூங்கொடி சுவடிகள் பெறுதல்
நவையிலாய்! நின்னூர் ஆங்கண் நாடொறும்
அன்பாற் பணிபுரி மலையுறை யடிகள்
தம்பால் இவற்றின் தகவெலாம் கேட்குவை:
என்றவள் உரைத்தலும் இளையவள் மகிழ்ந்து ‘
நன்றுநன் றன்னாய் என்றவள் மொழிந்து
வணங்கித் தொழுது வாங்கினள் செங்கையில்;
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment