என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 10. மெய்ம் மலிந்து நகைத்தேன்
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 09 இறையனார் அகப்பொருள் உரை -தொடர்ச்சி)
என் தமிழ்ப்பணி
அத்தியாயம் 7. மெய்ம் மலிந்து நகைத்தேன்
காடு சூழ்ந்த மலைநாட்டு மகன் ஒருவன், குறவர் குடிக் குமரி யொருத்தியைக் கண்டு காதல் கொண்டான். தங்கள் குலக் கடவுளாகிய முருகன் உறைவதால் பெருமைப் பெற்ற மலை உச்சியில் தோன்றிய அவன் நாட்டு அருவிகள், கீழே பாய்ந்து அவன் நாட்டுக் காட்டை வளமுறச் செய்வது போலேவே, ஆற்றல் அருள், முதலிய அரிய பண்புகளால் சிறந்த பெரியோனாய அவன், தன்பால் பேரன்பு கொண்டு, தன்னை வாழ்விக்க வந்ததைக் கண்டு, அப்பெண்ணும் அவன் பால் காதல் கொண்டாள். இருவரும் தம் பெற்றோர் அறியாவாறு தம் காதலை வளர்த்து வந்தனர்.
அவர் காதலும் ஒருவரை இழந்து ஒருவர் உயிர் வாழ்தல் இயலாது ஒருவரை யொருவர் ஒரு நாள் காணாது போயினும் அவர் உயிர் நீள் துயர் கொள்ளும் எனக் கூறுமளவு பெருகி வி்ட்டது. இந்நிலையில், அப்பெண்ணைப் பெற்ற தாய், மகள் மணப்பெறு பருவத்தை அடைந்து விட்டாள்; இனி அவளைப் மணைப்புறம் போக விடுதல் கூடாது எனக் கொண்டு, அவளை இற்செறித்து விட்டாள். அதனால், முன்போல் கண்டு மகிழ்தற்கு இயலாது, காதலர் இருவரும் கலங்கினர். அக்கலக்கம் சின்னாள்வரையே இருந்தது.
பகற்போதில் காண்டதற்ரு இயலாத தன் காதலியை இரவில் காண துணிந்தான் இளைஞன். அவ்வாறே, இரவில் எல்லோரும் உறங்கிய பின்னர், அவன் அவ்வூர் அடைந்து, அவள் மனையின் ஒருபால் ஒளிந்திருந்து அவளை எதிர் நோக்கியிருப்பதும், தன் காதலன் மார்பில் கிடந்து மணக்கும் சந்தன மணமும், மலர் மாலை மணமும் தன் மனைப்புறத்தில் மணக்கக் கண்டு, அதற்கான காரணத்தைக்காண மனைப்புறம் வரும் அவள், ஆங்குத் தன் காதலனைக் கண்டு மகிழ்வதும், வழக்கமாகி விட்டன.
காதலன் தரும் இன்பத்தில், தங்கள் களவு வாழ்க்கையால் உண்டாகவிருக்கும் கேட்டினை உணர மறந்த அவள் சின்னாட்கள் கழிந்ததும் உணரத் தொடங்கினாள். அரிய காவல் அமையப் பெற்றது தன் ஊர்; அயலார் யாரேனும் தன்னகர்க் காவலர் கண்ணின் பட்டு விடுவாராயின் அவர் உயிர் பிழைத்துப் போதல் அரிதிலும் அரிதாம்.
மேலும் தன் மனையில் தாய் உறக்கத்தை மறந்து தன்னைக் காத்துக் கிடக்கிறாள். அவளை ஏமாற்றிவிட்டு, அவனை வந்து காண்பது தனக்கும் அரிதாக உளது. காதலன் காவலர் கையிலும் தான் தாயின் கையிலும் அகப்பட்டுக் கொண்டால் தங்கள் நிலை என்னாம் என எண்ணிப் பார்த்தாள் ஒருநாள்: அன்று முதல் அவள் அக்கவலையால் வருந்தி, உடல் தளர்ந்து போனாள்.
மகளின் தளர்ச்சியைக் கண்ணுற்ற தாய் அதற்கு யாது காரணம் எனத் தனக்கு வேண்டியவர்களிடத்திலெல்லாம் வினவினாள். கன்னி மகளிரின் காதல் உள்ளத்தை உணர்ந்து கொள்ள மாட்டாத அவ்வூர்க் கிழங்கள், அது தெய்வக்குற்றம் எனக் கூறினர்.
அது கேட்டதாய், உடனே, அக்குறை தீர வெறியாட்டு விழா கொண்டாட முனைந்தாள். தன்னைப் பகைப்பவர்களைக் பாழாக்குவோன் முருகன் என்ற நினைவால், மகளைப்பற்றி வருத்தும் நோயையும் போக்குவன் என நம்பி, தாய் வெறியாட முனைவது கண்டு அப்பெண், ஒரு பால் தனக்குள்ளே நகைத்துக் கொண்டாள்; முருகன், பகைவரைத்தான் வருத்துவன் அவன் அன்பரையும் அவன் வருத்துவனோ? நான் அவன் அடிமை: அவ்வாறாகவும் அவன் என்னையும் வருத்துவான்-எனக் கருதுவது என்ன அறியாமை என அவர்களை எள்ளி நகைத்தாள், அந்நகை அவள் உள்ளம் உணர்த்திய ஓர் ஐயத்தினை உணர்ந்ததும் அழிந்து மறைந்தது; தன்னைப்பற்றி வருத்தும் நோய் முருகனால் வந்ததன்று; அதனால், அது வெறியாடுவதால் நீங்காது.
இது உறுதி, அவ்வாறாயின் தாய் வெறியாட்டு விழா நிகழ்த்த, அது நிகழ்த்திய பின்னரும் தன் நோய் நீங்காமையைக் காணின் அவளும் இவ்வூர்க்கிழங்களும் என் ஒழுக்கத்திற்கு இழுக்கம் கற்பித்துப் பழிப்பர்; பழியேதும் நேர்ந்து விடா வண்ணம் என்னைத் தாம் விரும்பும் ஒருவனைப் பிடித்து வந்து மணம் செய்து கொடுக்கத் துணிவர்.
அந்நிலை உண்டான பின்னர் நான் எவ்வாறு உயிர் வாழ்தல் இயலும் என்ற எண்ணம் எழவே அவள் துயர்க்கடலில் ஆழ்ந்து போனாள். மகளின் துயர் மேன்மேலும் பெருகக் கண்ட தாய் வெறியாட்டினை விரைந்து முடிக்க விரும்பினாள்: அன்றே அதை முடித்துவிடக் கருதினாள்; வேலனை அழைத்தாள்: வெறியாடும் இடத்தை அழகுற ஆக்கினாள்; இடையே வேலை நாட்டி, அதற்கு மாலை சூட்டினாள்.
வேலன் வாய் திறந்து உரத்த குரல் எடுத்து, முருகன் புகழைப் பாடிப் பரவினான். ஆட்டுக் குட்டியை அறுத்துப் பலி கொடுத்தார்கள்: அவ்வாட்டுக் குருதியோடு கலந்த தினைச்சோற்றைக் கூடைகளில் இட்டு வழிபட்டனர் இவ்வாறு இரவின் இடையாமத்தில், வெறியாட்டுவிழா தடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்பெண்ணின் நினைவு ஆங்கு இல்லை. விழா முடிவில் தன் நோய்தணியா தாயின் தன் நிலை என்னாவது என் எண்ணித்துயர் உற்றுக் கிடந்தாள். அப்போது, ஆங்கு, அவள் அறிந்த அம்மணம் வீசிற்று. தலை நிமிர்ந்து சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.
களிற்று யானை இறைச்சிபால் காதல் கொண்டபுலி, அக்களிறு தப்பிப் போகாவாறு, அதை எப்படியாவது கொன்று வீழ்த்த வேண்டும் என்ற கருத்தால், அது கண்டு அஞ்சி கண்டு ஓடி விடாவாறு, ஆங்காங்குள்ள புதர்கள் தோறும் ஒளிந்து ஒளிந்து, அதே நேரத்தில், களிற்றின் மீது சென்ற தன் கண்பார்வை தப்பாது பின் தொடர்ந்து செல்வது போல், தன் காதலன், தன் வீட்டுக் காவலர் அறிந்து கொள்ளாவாறு ஒளிந்து ஒளிந்து வருவதைக் கண்டாள்.
உடனே, அங்குள்ளார் அறிந்து கொள்ளாவாறு, அவ்விடத்தை விட்டு நீங்கிக் காதலனை அடைந்து சிறிது நேரம் இருந்து இன்புற்றாள். மீண்டும் பிறர் அறியாவாறு விழாக் களத்தை அடைந்து விட்டாள்.
காதலனைக் கண்டு களிப்புற்றமையால் அவள் மேனியைப் பற்றி வருத்திய நோய் மறைந்திருந்தது. விழா முடிந்தது; தாய் தன் மகளை நோக்கினாள். அவள் மேனி நோய் நீங்கித் திகழ்வதைக் கண்டாள், வெறியாட்டின் பயன் அது என உணர்ந்து மகிழ்ந்தாள்.
அன்று தனக்கு நேர இருந்த கேடு, ஒருவகையால், நீங்கினமை கண்டு அப்பெண்ணும் மகிழ்ந்தாள். காதலன் வரவால் நோய் நீங்கவும், தாய் அதை வெறியாட்டின் விளைவு எனக் கருதுவது கண்டு, அவள் அறியாமையை எண்ணி அவள் உள்ளம் நகைக்கவும் செய்தது. ஆனால் அம் மகிழ்ச்சியும் நெடிது நிற்கவில்லை.
வெறியாடு களத்திற்கு வந்த காதலன் வாளா வந்திலன்; தன் நாட்டு மலைவளர் சந்தனக் குழம்பு மார்பில் பூசப்பெற்று மணக்க, தன் நாட்டில் அடைதற்கு அரிய மலைக் குகைகளில் மலரும் இயல்பினவாய மலர்களால் ஆன மாலையைச் சூழ்ந்து பறக்கும் வண்டுகளின் ரீங்காரம் ஓ என ஒலிக்க வந்திருந்தான். அப்புது மணத்தையும், புதிய ஒலியையும் என்னைப் போலவே அவ்விழாக்களத்தில் வந்திருந்தோரில், வேறு யாரேனும் உணர்ந்து, அவற்றிற்கான காரணத்தைக் காண முற்பட்டிருந்தால் என்னாகியிருக்கும் எனக் கவலையுறத் தொடங்கினான்.
அவ்வாறு அவள் கவலையுற்றுக் கிடக்கும்போது அவள் தோழி ஆங்கு வந்தாள். வந்தவள்பால் தன் உள்ளத் துயரை உரைத்து வருந்தினாள். அவள் துயர் நிலை கண்ட தோழி “பெண்ணே உன் துயர் நீங்க வேண்டுமாயின், அது உங்கள் திருமணம் ஒன்றினால் ஆகும். ஆகவே, திருமணத்தை விரைந்து முடித்துக் கொள்ளுமாறு உன் காதலனுக்கு உணர்த்தல் வேண்டும். களவின்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் அவன் உள்ளத்தில் உன் வேண்டுகோள் எளிதில் இடம் பெறாது. ஆகவே அவன் உன் துயர் நிலையை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்; அதுவும் நீ உன் வாயினால் உரைக்க உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்; அதற்கு நான் ஒரு வழி காணுகிறேன்; அஞ்சாதே” எனக் கூறித் தேற்றினாள்.
இரண்டொரு நாள் கழித்து, ஒருநாள் இரவு இளைஞன் வழக்கம்போல் வந்து ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தான். அதைக் கண்டு கொண்ட தோழி தன் அருகில் கிடந்து வருந்தும், அப்பெண்ணை நோக்கி, “பெண்ணே! இவ்வாறு வருந்தும் நீ, அன்று நம் தாய் வெறியாட்டு நிகழ்த்திய பொழுது, அது கண்டு அஞ்சுவதற்குப் பதிலாக நகைத்து மகிழ்ந்தாயே, அது ஏன்? அவ்வாறு நகைக்க உன்னால் எப்படி முடிந்தது?” என வினவினாள்.
உடனே, அப்பெண் அன்று நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நிரலே எடுத்து உரைத்துவிட்டு, “காதலர் வரவால் என் நோய் நீங்கிற்று; அதை உணர்ந்து கொள்ளும் அறிவு அவ்வேலனுக்கு அழிந்து விட்டது; அதை நினைத்துக் கொண்டேன்: வயிறு வலிக்க நகைத்தேன்” எனக் கூறிக் களவு வாழ்க்கையால், ஒவ்வொரு நாளும் நான் படும் துன்பத்தை, அவன் உணருமாறு செய்தாள்.
அவள் கூறியன கேட்ட அவன், அன்று நடந்ததை உடனிருந்து கண்ட தோழி, இன்று கேட்டது, தான் அறிந்து கொள்ளும் கருத்தோடு அன்று: அதை நான் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்; உணர்ந்து களவொழுக்கத்தைக் கைவிட்டு வரைந்து கொள்ளற்கு விரைய வேண்டும் என்ற கருத்தாலாகும் என உணர்ந்தான்: அவள் கூறியதில் உண்மையும் உளது எனக் கொண்டான்; உடனே அவன் மனமும், மணம் நோக்கி விரைந்தது.
“அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணங்கொள் அருவிகான் கெழு நாடன்
மணங்கமழ்வியன் மார்பு அணங்கிய செல்லல்
இதுவென அறியா மறுவரற் பொழுதில்
- படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேள் பேணத் தணிகுவள் இவள்என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக்
களன் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப், பலி கொடுத்து, - உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்
ஆரம் நாற, அருவிடர்த்ததைந்த
சாரல்பல்பூ வண்டுபடச் சூடிக்
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் - ஒளித்து இயங்கு மரபின் வயப்புலி போல
நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத்
தன்னசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
நக்கனென் அல்லனோ, யானே, எய்த்த - நோய்தணி காதலர் வரவு ஈண்டு ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
திணை: குறிஞ்சி
துறை : தன்லமகன்சிறைப்புறத்தானாகத் தோழியால், சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியது.
புலவர் ; வெறி பாடிய காமக் கண்ணியார். - அணங்கு – தெய்வம்.
- கணங்கொள் – கூட்டமான, கான்கெழு = காடு பொருந்திய
- அணங்கிய – வருந்திய; செல்லல்= நோய்.
- மறுவால்-மனக் கவலையுற்ற
- படியோர் – பகைவர். தேய்த்த = அழித்த.
- சிலம்ப – ஒலிக்க
- ஆரம் – சந்தனம் விடர் = குகை. தழைந்த மலர்ந்த
- பட – ஒலிக்க
- எய்த்த-வருந்திய
- உலந்தமை – அழிந்தமை
(தொடரும்)
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்
Comments
Post a Comment