Skip to main content

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 19 : செங்கோன் தரைச் செலவு

 



(

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 18 : வீரப் புகழ்மாலை-தொடர்ச்சி)

செங்கோன் படையெடுப்பு
செங்கோன் என்பவன் பழங்காலத் தமிழரசருள் ஒருவன். அவன் ஆண்ட நாடு பெருவளநாடு. அந்நாட்டில் மணிமலையும், பேராறும், முத்தூரும் இருந்தன என்பர். அம் மன்னவன் அயல் நாட்டின்மீது படையெடுத்தான்; போர் புரிந்தான்; வெற்றி பெற்றான். அப்போரைப் பாடினார் சேந்தன் என்ற செந்தமிழ்க் கவிஞர்“செங்கோன் தரைச் செலவு” என்பது அப்பாட்டின் பெயர். யாத்திரை என்ற வடசொல்லைப் போலவே செலவு என்ற தமிழ்ச் சொல்லும் படையெடுப்பைக் குறிப்பதாகும். எனவே, தரைவழியாகச் செங்கோன் படையெடுத்து மாற்றாரை வென்ற செய்தி அப்பாட்டிலே குறிக்கப்பட்டதென்று கருதலாம்.

களவழி நாற்பது
செங்கண்ணனும் சேரமானும்
சோழ மன்னனாகிய கோச் செங்கண்ணனும், சேரமானும் மாறுபட்டனர். கழுமலம் என்னும் இடத்தில் இருவர் சேனைக்கும் பெரும்போர் நிகழ்ந்தது. சேரமான் தோற்று ஓடினான். அவனைப் பிடித்துச் சிறைக் கோட்டத்தில் அடைத்தான் செங்கட் சோழன்.

களவழிப் பாட்டு
போர் நிகழ்ந்த களத்தைப் புகழ்ந்து பாடினார் பொய்கையார். நாற்பது பாட்டுடைய அந் நூல் “களவழி நாற்பது” என்னும் பெயர் பெற்றது. செருக்களத்தில் உருத்து நின்ற வீரரின் ஏற்றமும், குருதி சொரிந்த யானைகளின் தோற்றமும் சொல்லோவியமாக அக் களவழியிலே எழுதிக் காட்டப்படுகின்றன. கருங்குன்று போன்ற யானைகள் குருதியிலே மூழ்கிச் செங்குன்றுபோலக் காட்சியளித்தன என்றும், கையறுபட்ட யானைகள் பவளம் சொரியும் பைபோல் செந்நீர் உகுத்தன என்றும், துணிபட்ட துதிக்கையைத் தூக்கிச் செல்லும் பறவைகள் கருநாகத்தைக் கவ்வி எழுகின்ற கருடனை ஒத்தன என்றும் போர்க் களத்தைப் புனைந்துரைத்தார் பொய்கையார்.
அக் களப்பாட்டைக் கேட்டான் வளவர் கோமான்; செந்தமிழ்க் கவிதையின் சுவையை நுகர்ந்தான்; செவ்விய இன்பமுற்றான்.

பாவலர் விண்ணப்பம்
அந் நிலையில் ஒரு விண்ணப்பம் செய்தார் கவிஞர்; “அரசே, உன் படைத்திறத்தால் பகைவரை யெல்லாம் அடக்கினாய்; போரை ஒடுக்கினாய்; மாற்றார் தந்த மட்டற்ற திறைப் பொருளால் மாடக் கோயில்கள் கட்டினாய். ‘ஈசன் கழலோத்தும் செல்வமே செல்வம்’ என்பதைச் செய்கையிலே காட்டினாய். நீ ஆளும் தமிழ் நாடு தெய்வத் திருநாடு. இந் நாட்டில் எவரும் கவலையுற்றுக் கண்ணீர் வடித்தல் ஆகாது. உன்னோடு போர் செய்து தோற்ற சேரமான் சிறையிடைத் தேம்புகின்றான். அம் மன்னனைச் சிறையினின்றும் விடுவித்தருளல் வேண்டும். உன் சிறைக் கோட்டம் அறக்கோட்டமாதல் வேண்டும்” என்று மன்னன் சேவடி தொழுது நின்றார்.

சேரமான் விடுதலை
அம் மொழி கேட்ட வளவன் முகம் மலர்ந்தது. பொய்கையார் விரும்பிய வண்ணமே ஆணை பிறந்தது. சிறைக் கதவும் திறந்தது. சேரமான் வந்து சோழனடி பணிந்தான். செங்கண்ணன் அவனை அமர்ந்து நோக்கினான்; ஆரவமுற எடுத்தணைத்தான்; முடி மன்னர்க்குரிய சிறப்பெல்லாம் அளித்தான்; மலை நாட்டுக்கு அனுப்பினான். ‘காவலன் கண்ணீரைக் களவழி மாற்றியது’ என்று எல்லோரும் களிகூர்ந்தார்.[1]

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி
கலிங்க நாட்டின்மீது படையெடுத்து வெற்றி பெற்ற குலோத்துங்க சோழன் ஒரு பரணிப் பாட்டின் தலைவனாயினான். கலிங்கத்துப் பரணி என்று வழங்கும் அக் கவிதை தமிழ் நாட்டாரது வெற்றியை முழக்கும் வீர முரசம்.

பரணித் தலைவன்


போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்றுயர்ந்த வீரனே பரணிப் பாட்டின் தலைவனாக அமையத் தக்கவன் என்பது தமிழர் கொள்கை. கலிங்கப் போரில் மாற்றாரது பல்லாயிரக்கணக்கான யானைப் படையை அழித் தொழித்தது குலோத்துங்கன் சேனை. வெற்றி பெற்ற அரசனைப் புகழும் வாயிலாகச் சோழர் குலத்தின் நலத்தையும், நாட்டின் வளத்தையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது பரணிப் பாட்டு.


புகழ் புரிந்த சோழர்
அப்பாட்டிலே தவறு செய்த தன் மகனை முறை செய்து அழியாப் பெருமையுற்ற மனுவேந்தனைக் காணலாம். அடைக்கலமாக வந்தடைந்த புறாவின் உயிரைக் காக்குமாறு தன் பொன்மேனியை அரிந்திட்ட புரவலனைக் காணலாம்; மாற்றாருடைய வானக் கோட்டைகளைத் தகர்த்தெறிந்த தனிப்பெரு வேந்தனைக் காணலாம். செஞ்சொற் கவிதையால் வெஞ்சினம் தீர்ந்து சிறைபிடித்த சேரனை விடுவித்தருளிய செங்கண்ணனையும் காணலாம்.

பரணிக்கோர் சயங்கொண்டான்
இத்தகைய சீர்மை வாய்ந்த கலிங்கத்துப்பரணி பாடிய கவிஞர் நன்னிலம் என்ற ஊருக்கு அருகேயுள்ள தீபங்குடியிற் பிறந்தவர்; ‘செயங்கொண்டார்’ என்னும் சிறப்புப் பெயர் வாய்ந்தவர்; ‘கவிச் சக்கரவர்த்தி’ப் பட்டம் பெற்றவர்; அவர் பாடிய கலிங்கத்துப் பரணியைப் பின்பற்றி ஒட்டக்கூத்தர் முதலாய கவிஞர் பரணிப்பாட்டு இசைத்தார்கள். ஆயினும், இன்றளவும் கலிங்கத்துப் பரணியே தலை சிறந்த பரணியாகக் கற்றோரால் மதிக்கப்படுகின்றது. “பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று பாராட்டப் பெற்றார் அக் கவியரசர்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்