Skip to main content

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 09. இறையனார் அகப்பொருள் உரை

 




(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 08. பெருமை என்பது கெடுமோ? – தொடர்ச்சி)

இறையனார் அகப்பொருள் முதல் சூத்திர உரையில் உரை கண்ட வரலாறு பற்றிய விளக்கம் அளிக்கும் பகுதியில் “நக்கீரனால் உரைகண்டு, குமாரசுவாமியால் கேட்கப்பட்டது” எனவரும் தொடர்கொண்டு, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர் எனக் கொள்வர் சிலர்.


நக்கீரனார் கடைச் சங்கப்புலவர்: கடைச்சங்க இலக்கியங்களில் கட்டளைக் கலித்துறை இடம்பெறவில்லை: கட்டளைக் கலித்துறைக்குத் தொல்காப்பியரும் இலக்கணம் வகுக்கலில்லை; மேலும் கோவை எழுந்த காலம் கடைச் சங்க காலத்திற்கும் பின்னர் நானூறு ஆண்டுகள் கழிந்த பிற்காலம்: அங்ஙணமாக, கடைச்சங்க காலத்தவராகிய நக்கீரர், தமக்கு நானூறு, ஐந்நூறு ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய, கோவையாரிலிருந்து கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களை மேற்கோள் காட்டியிருக்க இயலாது; ஆனால் இறையனார் அகப்பொருள் உரையில் கோவையாரின் கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் காட்டப்பெற்றுள்ளன.

எழுத்து, சொல், பொருள். யாப்பு, அணி என்ற ஐந்திலக்கணங்களைக் கூறும் தொல்காப்பியம், இறவாது இன்று வரை கிடைக்கவும், “அரசனும் புடைபடக் கவன்று” என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே; பொருளதிகாரம் பெறேமேயெனின் இவைபெற்றும் பெற்றிலேம்” எனக் கூறி வருந்தினான் என்பது பொருந்தாது.


“கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த விடத்துப் பதந்தொறும் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான்; இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்றும் இந்நூற்கு என்றார்.” என்றும் நக்கீரனார் உரை கண்டு குமாரசுவாமியால் கேட்கப்பட்டது” என்றும் நக்கீரர், தம்மைத் தாமே மிகைப் புகழ்ந்து கொண்டு படர்க்கையில் நிறுத்திப் பேசினார் என்பதும் பொருந்தாது.
நக்கீரனார் இயற்றிய கடைச்சங்க நூல்களில் ஓரிரு சொற்களே, வடசொற்களாக, இவ்வுரையில் கானுமிடமெல்லாம் சிட்டர், பிராமணன், காரணிகன், குமாரசுவாமி – முத்திரபுரிடம் சுவர்க்கம், வாசகம் போலும் வடசொற்கள் பயில இடம் பெற்றுள்ளன.
இவை போலும் காரணங்களைக் காட்டி. இவ்வுரை நக்கீரனார் செய்த உரையன்று. பிற்காலத்தில் பெயர் தெரியா யாரோ ஒருவர் செய்து நக்கீரனார் பெயர் சூட்டி விட்டார் எனக் கூறுவர் வேறு சிலர்.


யார் இயற்றிய உரையாயினும் இறையனார் அகப் பொருள் உரை தவிர்தொறும் நம் பயக்கும். நல்லுரையாகும் என்பதில் ஐயம் இல்லை.


ஒரு நூலுக்கு உரை எழுதுவார். அந்நூலில் வரும் பா ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு, அதில் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு தொடருக்கும் தம் அறிவு ஆற்றல் துணை கொண்டு உரிய பொருள் உரைக்க வேண்டும்.
அவ்வாறு உரைக்கும் போது, அவற்றிற்குப் பிறர் என்னென்ன பொருள்களைக் கூறக் கூடும் என எண்ணிப் பார்த்து அப்பொருள்களையெல்லாம் முதற்கண் கூறிவிட்டுப், பின்னர், அப்பொருள்கள் உண்மைப் பொருள்களாகா என்பதற்கான காரணகாரியங்களை வரிசையாக எடுத்துவைத்து மறுத்தல் வேண்டும்.
அது மட்டுமன்று, தான் கூறிய பொருள் ஏற்கத்தக்க பொருள் அன்று என்பதற்குப் பிறர் என்னென்ன காரணங்களைக் காட்டக் கூடும் என்பதையும் எண்ணிப் பார்த்து அவற்றையும் எடுத்து வைத்துப் பின்னர், அக்காரணங்கள் எவ்வெவ் வகைகளால் ஏற்கத்தக்கன அல்ல என்பதையும் எடுத்துக் கூறி அத்தடைகளை உதறித் தள்ளுதல் வேண்டும்.


இவ்வாறு தடை விடை மூலம் பொருள் கூறிச் செல்லும். நெறியினை இவ்வுரையாசிரியர், ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு தொடருக்கும் மேற்கொண்டு உரை கூறிச் செல்லும் அழகு இவர்தம் ஆராய்ச்சித் திறத்திற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாம். உதாரணத்திற்கு ஒன்று. களவொழுக்கமாவது கந்தருவ ஒழுக்கமாம் என முதல் சூத்திரத்தில் கூறி. அதற்கு விளக்கம், உரைக்கப் புகுந்த “அதுவே” எனத் தொடங்கும் இரண்டாவது சூத்திரத்தில் வரும் “தானே அவளே” என்ற தொடருக்குப் பிறர் கூறும் உரைகளை மறுத்துத் தான் கூறிய உரையை நிலைநாட்டும் அருமை பாராட்டிற்கு உரியது.
காதலன் காதலி என வேறு பிரித்து அறியப்படாதவர் கந்தருவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆகவே, களவு, கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும் என்று கூறியதனாலேயே, அவனும் அவளும் வேறு பிரித்து அறியப்படாதவர்: என்பது புலனாகவும், அவர்கள் இருவரும் அன்பாலும், குணத்தாலும், கல்வியாலும், உருவாலும் திருவாலும் ஒருவரோடொருவர் வேறு பிரித்து அறியப்படார் என்பது உணர்த்தவே, “தானே அவளே” என்றார், எனக் கூறின் கூறியது கூறலாம். ஆகவே அவ்வுரை பொருந்தாது எனவும், கந்தருவ ஒழுக்கத்தில், கந்தருவ ஆணும் பெண்ணும் தமியராய் இருந்தே புணர்வர் ஆதலின், களவு ஒழுக்கம், கந்தருவ ஒழுக்கத்தோடு ஒக்கும் என்று கூறவே, அவளும் அவனும் தமியராய்ப் புணர்வர் என்பது தானாகவே புலப்படும்.


ஆகவே அவன் இளைஞர் கூட்டத்திலிருந்து நீங்கித் தனியனாய் வந்தும், அவள் தோழியர் கூட்டத்திலிருந்து நீங்கித் தனியளாய் வந்தும் புணர்வர் என்பது உணர்த்தவே, “தானே அவளே” என்றார், எனக் கூறுவதும் கூறியது. கூறலாம்.


ஆகவே அவ்வுரையும் பொருந்தாது எனப், பிறர் கூறும் உரைப் பொருள்களை மறுத்து விட்டு, உருவாலும், திருவாலும், அறிவாலும், ஒழுக்கத்தாலும் ஆடவருள் குறைந்தவர் அல்லது ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவன் என அவனை ஆடவரிலிருந்து பிரித்து உணர்த்தவும், அது போலவே, அவளை மகளிரிலிருந்து பிரித்து உணர்த்தவுமே, “தானே அவளே” என்றார் என்ற தான் கூறும் பொருளை முதற்கண் நிலைநாட்டி விட்டுப் பின்னர், அவ்வுரைக்குக் “கந்தருவ ஒழுக்கத்தோடும் ஒக்கும் என்று கூறிய தனாலேயே, எவ்வகையாலும் குறைபாடு இலாதவர் என்பது பெறப்படும். ஆகவே அவ்வாறு கூறுவதும் பொருந்தாது” எனத் கூறும் மறுப்புரைக்குக் கந்தருவர் எவ்வகையாலும் குறைபாடு இலாதவர் எனக் கோடல் முறையாகாது. அறிவுக் குறைபாடும், அருள் உணர்வுக் குறைபாடும் அவர்க்கு உண்டு. ஆகவே, கந்தருவ ஒழுக்கத்தோடு ஒக்கும் என்பதினாலேயே, அவனும் அவளும் ஒப்பாரும். மிக்காரும் இலாதவர் என்பது பெறப்பட்டு விடாது.
ஆகவே அதைத் தனியே எடுத்துக் கூற வேண்டியது இன்றியமையாதது என அத்தடைக்கு விடையளித்து விட்டுத் தான் கூறிய பொருளே முடிந்த பொருளாம் என முடித்திருக்கும் நயம் வியந்து பாராட்டிற்கு உரியது.


இவ்வாறு தடை விடைகளால் பொருள் விளக்கிச் செல்லுங்கால் அப்பொருளை மேலும் எளிதாக்குவான் வேண்டி சிலபல உவமைகளை மேற்கொள்வதும், மேற்கொள்ளும் உவமைகளை மிகமிக உயர்ந்தனவாகக் கொள்வது சிறந்த உரைக்கு இலக்கணமாம். அகப்பொருள் உரையாசிரியர் இத்துறையிலும் சிறந்த விளங்குகிறார்; இவ்வொரு சூத்திரத்திற்கு உரை வழங்குவதற்கு உள்ளாகவே பத்துக்கும் மேற்பட்ட உவமைகளை அடுக்கடுக்காக மேற்கொண்டு உரைக்கு மெருகூட்டியுள்ளார்.
தலைமகளைக் காணும் காட்சியும் தலைமகனுடைய ஞான வொழுக்கக் குணங்களது தன்மை அழிவும் ஒருசேர நிகழும் என்பதை விளக்க, இருட்டகத்து விளக்குக் கொண்டு புக்கக்கால் விளக்கு வாராத முன்னரும் இருள் நீங்காது விளக்கு வந்த பின்னரும்; இருள் நீங்காது விளக்கு வருதலும் இருன் நீக்கமும் உடனே நிகழும் என்பதையும்,
யாயும் ஞாயும் யாராகியரோ;” என்பது போல் எங்கோ பிறந்த அவனும் எங்கோ பிறந்த அவளும் அப்பொழிலிடை ஒன்று கலந்த நிகழ்ச்சியை விளக்க வடகடல் இட்ட ஒரு நுகம் ஒரு துளை, தென்கடல் இட்ட ஒரு கழி சென்று கோத்த நிலமையையும்,
காதலன் உடன் இருக்கக், காதலிக்கு ஆற்றாமை உண்டாகாது என்பதை விளக்க நீருடை நிலத்து நிவந்த நீள்மரம் வெப்பத்தால் தெறப்படா நிலைமையையும் உவமை காட்டிச் செல்லும் கவின் கற்றுக் களித்தற்கு, உரியவாம்.


தடைவிடைகளைக் கையாண்டும். ஏற்புடைய உவமைகளை, மேற்கொண்டும் உரைவிளக்கம் கூறும் நிலையில் இடையிடையே வரும் சிற்சில சொற்களுக்கும். சிறுசிறு தொடர்களுக்கும் முடிந்த முடிவான பொருள் கூறிச் செல்வதும் உரைக்கு ஓர் அழகாம். உரையாசிரியரின் தெளிந்த அறிவுடைமைக்கு ஓர் அகச் சான்றாம். அகப்பொருள் உரையாசிரியர் அத்துறையிலும் முன்னிலையில் நிற்கின்றார்.
எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று அம் மெய்ம்மையை. உணர்வது அறிவு; காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் நிறை, ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் ஓர்ப்பு: கொண்ட பொருள் மறவாமை கடைப்பிடி; பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொரு தன்மை நாண்; கொளுத்துக் கொண்டு கொண்டது விடாமைமடம்:காணப் படாததொரு பொருள் கண்ட விடத்து உண்டாவது அச்சம்: பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை பயிர்ப்பு எனச் சொற்களுக்குக் கூறியிருக்கும் பொருள் விளக்கமும், தலைமகனும் தலைமகளும் தமியராய், ஒரு பொழிலகத்து எதிர்பட்டுத் தம் உணர்வினர். அன்றி வேட்கை மிகவினால் புணர்வது காமப் புணர்ச்சி, புலவரால் கூறப்பட்ட இயல்பினாலும் கந்தருவ வழக்கத்தோடு ஒத்த இயல்பினாலும் புணர்வது இயற்கைப் புணர்ச்சி; முயற்சியும் உளப்படும் இன்றித், தெய்வத் தன்மையால் புணர்தலின் தெய்வப் புணர்ச்சி; காதலன் நலம் காதலியினால் முன்னுற எய்தப்பட்டமையானும், காதலி நலம் காதலனால் முன்னுற எய்தப்பட்டமையானும் முன்னுறு புணர்ச்சி எனச் சொற்றொடர்களுக்குக் கூறியிருக்கும் பொருள் விளக்கமும் போற்றுதற்கு உரியன.


நூலாசிரியரோ, உரையாசிரியரோ மேற்கொள்ளும் சில சொல்லாட்சியும், சில பொருளாட்சியும், ஏற்றுக் கொள்ளப்பட்ட இலக்கணவிதி. இலக்கண மரபுகளுக்கு முரண்பட்டனபோல் தோன்றினும், அவற்றை ஒருவாறு ஏற்புடைய அமைதி கூறி ஏற்றுக் கொள்ளச் செய்வதே பின் வரும் ஆசிரியர்களின் நீங்காக் கடமையாகும். இதையும்
அகப்பொருள் ஆசிரியர் மிக நயம்படச் செய்து முடித்துள்ளார். “தெய்வப் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, இயற்கைப் புணர்ச்சி. என்பனவற்றுள் ஒன்று சொல்லாது காமப் புணர்ச்சி என்றே கூறிய காரணம் என்னையெனின் பலகாரணத்தினாய பொருளை ஒரு காரணத்தினாற் சொல்லுவது சிறப்புடைமை நோக்கி என அவர் கூறும் அமைதியின் அழகைக் காண்க.


அரசன் அவன் நிலைக்கு ஏற்ப உயர்ந்த ஆடை அணிகளை அணிவதும் அவன் கீழ்ப் பணிபுரியும் ஏவலாளன், அவனுக்கேற்ற ஆடை அணிகளையே ஏற்பதும் உலகியல்: அதுபோலவே மிக உயர்ந்த ஒரு நூலுக்கு உரையெழுதும் உரையாசிரியர், அவ்வுரை இலக்கியச் செறிவு வாய்ந்த சிறந்த நடையாக இருக்கவே விரும்புவர்: அகப்பொருள் உரை, எதுகையும் மோனையும் இனிய ஓசையும் நிறைந்த அழகு நடையாகவே அமைந்துள்ளது. அவ்வுரையைப் படிக்குங்கால், நாம் ஓர் இலக்கண நூல் படிக்கின்றோம் என்ற நினைவே எழுவதில்லை; மாறாகச் சிறந்த ஓர் இலக்கிய உலகில் புகுந்திருப்பது போன்ற உணர்வே உண்டாகின்றது.


இளையர் தற்சூழச் செல்லும் தலைமகன் செலவு குறிக்கும் பகுதியும் தாரகை நடுவண் தண்மதி போலச் செல்லும், தலைமகள் செலவு குறிக்கும் பகுதியும் இளமயில் ஆடுவது நோக்கித் தலைமகள் நிற்பதைக் குறிக்கும் பகுதியும் காமன் போலச் சென்று, தலைமகன் தலைமகள் முன் நிற்பதை உணர்த்தும் பகுதியும், பிறவும், உரையாசிரியரின் இலக்கியச் செறிவு வாய்ந்த உரைநடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாம்.


ஒரு சூத்திரத்துக்கு உரை எழுதப் புகுந்த இவ்வுரையாசிரியர் இலக்கண விளக்கம் அளிப்பதோடு அமையாது அவ்விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மேற்கொண்ட
ஓர் இலக்கியச் செய்யுளுக்கும் விரிவான விளக்க உரைகளைக் கூறியிருப்பது அவர்தம் இலக்கியப் பேரறிவுக்குச் சிறந்த உதாரணமாகும்.


நயப்பு என்ற துறையை விளக்க அவர் காட்டிய “வேலும் என நின்று இகல் மலைந்தார்” என்ற கோவைச் செய்யுளில் வந்திருக்கும் ஒவ்வொரு சொல்லையும் எடுத்துக் கொண்டு விளக்கம் அளித்துச் செல்லும் முறை வியந்து பாராட்டற்கு உரியது.


பொதியில் என்பதற்கு எல்லாத் தேவர்களுக்கும் பொதுவாகிய இல் என்றும் மெல்லியல் என்பதற்கு மென்மை பெண்டிர்க்கு இயல்பு, அதனைத் தனக்குச் செய்து கோள் அன்றி இயல்பாக உடையாள் என்றும், செந்துவர்வாய் என்பதற்குச் செம்மையைத் தனக்கு மிகவுடையவாய் என்றவாறு, செம்மை உடையார் என்பது உலகத்துத் தம் குணங்களை மறையாது ஒழுகுவாரை என்றும் விளக்கம் அளிக்கும் வனப்பினைக் காண்க.
இவ்வாறு தருக்க நெறி நின்று வாதப் பிரதி வாதங்களை முன் வைத்துத் தம் பொருளை வலியுறுத்திக் கெஞ்சும் நிலையிலும் பொருள் விளக்கம் வேண்டி அழகிய உவமைகளை ஆளும் நிலையிலும், சொல் சொற்றொடர்களுக்குப் பொருந்தும் பொருள் உரைத்துச் செல்லும் நிலையிலும், இலக்கண அமைதியினை எடுத்தியம்பும் நிலையிலும். தென்றற் பூங்காற்றுப் போலும் தீந்தமிழ் நடை வழங்கு முறையிலும், அகப்பொருள் உரையாசிரியர்க்கு நிகர் அவரே எனக் கூறுவதே சாலப் பொருந்தும்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்