Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல்

 






(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல் –தொடர்ச்சி)

அவரவர் மொழியில் உயர்பொருள் காணின்
தவறறப் பெயர்த்துத் தாய்மொழிக் காக்கு!
தாய்மொழி விடுத்துப் பிறமொழி விழைவோர்
ஆய்வுரை கேட்கின் அவர்செருக் கடக்கு!
பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் 90
பிழைப்போர்க் காணின் பேரறி வூட்டு!
பழிப்போர் இங்கே பிழைப்போர் அல்லர்
அழித்தேன் என்றெழும் சிறுத்தைகள் கூட்டம்
நாட்டினில் பல்கிட நல்லுரை வழங்கு!

கோட்டமில் மனத்தாய்! குக்கலின் செயல்போல் 95
 இலக்கண நூலை இழித்தும் பழித்தும்

குரைத்தால் அவர்தம் கொட்டம் அடக்கு!

பொருள்நூல் உணர்த்தல்

 தொல்காப் பியமெனும் ஒல்காப் பெருநூல்

நல்கிய தாய்மொழி நாளும் வாழிய!
எழுத்தின் இயலும் சொல்லின் இயலும் 100
வழுக்களைந் துணர்ந்தனை! வாழ்வியல் கூறும்
அகம்எனப் புறம்என வகைபெறு பெருநூல்
உலகிற் பிறமொழி உரையாப் பொருள்நூல்
திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கற்பின்
அறிவுரம் பெறுமே, ஐவகை இலக்கணம் 105
உணர்வார் மொழியில் உயர்வார்’ என்று
துணர்மலர்க் கொடிக்குத் தொல்காப் பியநூல்
முழுமையும் ஓதி முடித்தனள் தாமரை
விழியாள் கொடிபால் விடைபெற் றனளே. 109
+++

கோட்டம் இல் - குற்றம் இல்லாத, குக்கல் - நாய். ஐவகை இலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி; துணர் - கொத்து, தாமரை விழியாள் - தாமரைக்கண்ணி.
பரி - குதிரை, பாவாய் - பூங்கொடியே, நெருநல் - நேற்று, மாற்றார் - பகைவர்.

+++

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்