Skip to main content

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 05. நெஞ்சே எழு!

 




(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 04. உள்ளுறை உவமம்-தொடர்ச்சி)

ஒரு தொழிலைத் தொடங்குவார், அத்தொழிலை முற்றுப் பெற முடித்தல் வேண்டும். தொடங்கிய வினைக்கண் வெற்றி வாய்க்கும் வரை. உழைக்காது, அதை இடையே கைவிட்டு, வேறு ஒன்றில் கருத்தைச் செலுத்துவாராயின், அவர்க்குப் பொருட்கேடும் புகழ்க்கேடும் உண்டாம்.

அதனால் ஒரு வினையைத் தொடங்குமுன் அவ்வினையின் ஆற்றல், அவ்வினையைத் தொடங்கும் தன் ஆற்றல், அவ்வினை வெற்றிபெற முடியாவாறு இடைநின்று தடுக்கும் பகை ஆற்றல் ஆகிய அனைத்தையும் பல முறை அளந்து நோக்கி தன்னால் அதை முடிக்க முடியும் எனத் தெளிவாக உணர்ந்த பின்னரே தொடங்குதல் வேண்டும்.

அவ்வாறில்லாமல் ஆர்வத்தில் ஒன்றைத் தொடங்கிவிட்டு அதில் ஒரு பகுதி இன்னமும் முடிய வேண்டியிருக்கும் பொழுது, இதை முடிக்கும் ஆற்றல் எமக்கு இல்லை என்று கூறி அதை அந்நிலையிலேயே கைவிட்டுப் போவது அறிவுடைமையாகாது அத்தகையார் எடுக்கும் வினை எதுவும் வெற்றி பெறாது. உயர்ந்தோர்.அவரை மதியார் அவ்வினையைத் தொடங்குமுன், அவர்க்கிருந்த புகழும் அதன்பின் இல்லாகிவிடும்; இவையெல்லாம், தொடங்குவதற்கு முன்பாகவே பலமுறை எண்ணிப் பார்க்காததன் விளைவாம்.

இவ்வுண்மையை உணர்ந்த ஓர் இளைஞன், அண்மையில் மணஞ்செய்து கொண்டிருந்தான். அவன் வாழ்க்கைத் துணையாய் வாய்த்திருந்தவள், அழகிற் சிறந்து விளங்கினாள். அவள் பால் அவன் தன் உயிரையே வைத்திருந்தான். மணம் முடிந்து சின்னாட்கள் தான் ஆயிருந்தன.

ஒருநாள், அவன், தன் இல்வாழ்க்கை நிலையினை எண்ணிப் பார்த்தான். வருவார்க்கு வழங்கி வாழும் தன் இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் தன்பால் இல்லாமையை உணர்ந்தான், அதனால் வற்றாப் பெருநிதியை அது கிடைக்கும் வெளிநாடு சென்றேனும் சேர்த்து வருதல் வேண்டும் எனத் துணிந்தான்.

அவன் நெஞ்சு, அந்நிலையில் ஆழ்ந்து கிடக்கும் அப்போது அவன் மனைவி அவன் முன் வந்து நின்றாள். அவள் உருவ நலனை இளைஞன் ஒருமுறை நோக்கினான் மனைப் புறத்து நொச்சிவேலியில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடியின்ற மலரும் பருவத்து அரும்புகள் வரிசையாகத் தோன்றுவது போலும் அவள் வெண்பற்களின் வனப்பைக் கண்டான். முல்லை அரும்புகளின் வெண்ணிறம் ஒன்றைக் கண்டு அதை விரும்பி அடைந்து, அதை விடுத்து வர மாட்டாது. அதையே சுற்றிச் சுற்றித் திரியும் வண்டுகள் போல், அவள் பல்லழகு ஒன்றிற்கே தான் தன் உணர்வு இழந்து எப்போதும் அவள் நினைவாகவேயிருந்து வருந்துவதை உணர்ந்தான். தன்னை அடிமை கொள்ள அப்பல்லழகு ஒன்றே போதியதாகவும்; அவள் அழகு அத்துடன் அமையவில்லை. அவள் வயிறும் அழகாயிருந்தது. அவள் இடையும் அழகாயிருந்தது.

பின்னப் பெற்றுப் பின்னால் கிடந்து தொடங்கும் கூந்தலை நாள் முழுதும் நின்று பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் தோன்றிற்று. தோள் மலைவளர் மூங்கில் போன்றிருந்தது. அதன் பருமையும் மென்மையும் அதற்கு மேலும் நலம் அளித்தன.

இவை அத்தனைக்கும் மேலாக கள்ளம் அற்ற அவள் உள்ளத்தில் காதல் உணர்வு ஒன்றே இடம் பெற்றிருந்தமையால், அவள் உருவ நலன் மேலும் பன்மடங்கு உயர்ந்து காட்டிற்று.

மனைவியின் இம்மா நலத்தைக் காண நேர்ந்ததும் அவன் உள்ளுணர்வு சிறிதே நிலை தளர்ந்தது. இத்துணைப் பேரழகுடையாளைப் பிரிந்து பொருளீட்டப் போவது கூடாது. இவளை இங்கே விட்டுச் சென்றால் அங்கே வெற்றி பெறுதல் இயலாது.

இவள் பேரழகு தன் முயற்சியைப் பாழாக்கிவிடும். ஆகவே பொருளீட்டும் நினைப்பு இப்போது வேண்டா எனத் தன் நெஞ்சை நோக்கிக் கூறிற்று. உள்ளுணர்வு உரைப்பது உண்மை என்பதை அவன் நெஞ்சம் உணர்ந்திருந்தது. என்றாலும், பொருளின் இன்றியமையாமை எவ்வாறாயினும் சென்று பொருளீட்டி வா எனக் கூறினமையால் அந்நெஞ்சு, அப்பொருளீட்டும் முயற்சியில் நீங்காது நின்றது. அவன் புறப்பட்டு விட்டான்.

இளைஞன் பல காவதங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தான், காட்டு வழிக் கொடுமையால், அவன் உடல் நலன் சிறிதே தளர்ந்தது. உடல் தளர்ச்சி அவன் உணர்வையும் பற்றிக் கொண்டது. உணர்வு உரம் இழந்ததும், காதல் வேட்கை உரம் பெற்று எழுந்தது.நெஞ்சு அதற்கு அடிமையாகி விட்டது. அதனால் அது அவனை மேற்கொண்டு செல்லாவாறு தடை செய்தது. மீண்டும் மனை நோக்கி செல்லுமாறு வற்புறுத்திற்று. இந்நிலையில், அவன் வினை மேற்கொண்டு வழியை முன்னோக்கிக் கடப்பதோ, காதலியை நினைந்து கடந்து வந்த காட்டு வழியே மீள்வதோ செய்ய மாட்டாது செயலிழந்து நின்று விட்டான். காதலுக்கு அடிமைப்பட்டு கடமை முயற்சிக்குக்கேடு சூழும் நெஞ்சின் பால் அவன் உள்ளுணர்வு சினம் கொண்டது. ஆனால் அதைக் கடிந்து கொண்டால் மேற்கொண்டு வந்த காரியம் கெட்டு விடும்: நெஞ்சை ஒதுக்கி விட்டுச் சென்றால், வெற்றி கிட்டாது. ஆகவே அந்நெஞ்சு ஏற்குமாறு இனிய சொற்களால் அதற்கு அறிவூட்டி அதையும் உடன்கொண்டு செல்லக் கருதிற்று உள்ளுணர்வு.

ஆசைக்கு அடிமைப்பட்டு, காதலியைக் காணத் துடித்து நிற்கும் நெஞ்சை அணுகி, “நெஞ்சே! காதலி பேரழகு வாய்ந்தவள். அவளைப் பிரிந்து வாழ்வது நம்மால் இயலாது. மேலும் நாம் போய் விட்டால், அவள், நம் பிரிவை எண்ணித் துயர் உறுவதால், அவள் அழகு அவளை விட்டுப் போய்விடும்.

போன அழகு பின்னர் எப்பாடுபடினும் மீண்டு வராது ஆகவே, அவள் அழகு கெட, நாம் துயர்உற பிரிந்து போவது பொருந்தாது என, அன்று, எத்தனையோ முறை எடுத்துச் சொன்னேன். அதை நீ அப்போது கேட்க மறுத்து விட்டாய்.

வினைமாற்றுவதையே விரும்பி நின்றாய். வேறு வழியின்றி நானும் அதற்கு இசைந்தேன். புறப்பட்டு இவ்வளவு தூரம் வந்து விட்டோம், இனி, வீட்டிற்கு வெறுங்கையோடு மீள்வது மதியுடைமையாகாது.

மேலும், நம் பிரிவைப் பெறாது நம்மனைவி வருந்துவா ளெனினும் அவள் நாம் வறிதே மீளக் காணின் மகிழாள்: மாளாத் துயர்கொண்டு மாண்டு விடுவள். வினைக் கருதிப் பிரிந்து வந்த நாம், அவள் கண்டு வியந்து மகிழுமளவு மாநிதி ஈட்டிச் சென்ற வழியே, அவள் மனம் மகிழும். ஆகவே அவள் மகிழ்ச்சியே உன் குறிக்கோளாயின், அவள் மகிழுமாறு மாநிதி ஈட்டும் பணி மேற்கொண்டு மேற் செல்வோம் வருக.

நெஞ்சே என் சொல்லை ஏற்று, என் பின் வரின் காதலியை நினைந்து விரைந்து மனைநோக்கி மீளாது, வினையை நினைந்து விரைந்து வழி மேல் செல்வதே சிறப்புடைத்து; அதுவே அவளுக்கும் மகிழ்ச்சி தரும் என்பதை உனக்கு விளங்க எடுத்துரைக்கின்றேன்; அதை விளக்கும் அரிய காட்சிகளையும் காட்டிக் கொண்டே செல்கிறேன்; என்னைப் பின் தொடர்ந்து வருக. நெஞ்சே! நாம் செல்லும் வழியில் மராமரம் மலர்ந்து மணம் நாறி நிற்கும்.

(தொடரும்)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்