இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 18 : வீரப் புகழ்மாலை
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 17 : பேர் தெரியாப் பெருவீரர் – தொடர்ச்சி)
தமிழர் வீரம்
வீரப் புகழ்மாலை
வீரமும் ஈரமும்
தமிழ் நாட்டுக் கவிகள் எஞ்ஞான்றும் படைத்திறத்தையும் கொடைத் திறத்தையும் பாராட்டிப் பாடுவர். “பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர்; அவரே புகழத் தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு; நாவிற்கு அழுக்கு” என்பது அவர் கொள்கை.
ஔவையாரும் செல்வரும்
புலமையுலகத்தில் ஔவையாருக்குத் தனிப்பெருமை உண்டு. “ஔவை வாக்குத் தெய்வ வாக்கு” என்று கருதப் பட்டது. ஆதலால், அரசரும் செல்வரும் அவர் வாயால் வாழ்த்துப் பெற ஆசைப்பட்டார்கள்; ஒருநாள் ஔவையார் ஒரு சிற்றூரின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவ்வூர்ச் செல்வர் இருவர் அவரிடம் போந்து, “அம்மையே உமது வாக்கால் எம்மையும் பாடுக” என்று வேண்டி நின்றார்.
வசைப் பாட்டு
அவ்விருவரையும் நன்றாகத் தெரிந்தவர் ஔவையார். வீரத்திற்கும் அவருக்கும் வெகு தூரம். போர்க்களத்தின் அருகே அவர் போனதில்லை. ஈரமும் இரக்கமும் அவர் மனத்தை எட்டிப் பார்த்ததில்லை. இத்தகைய பதடிகள் பாட்டுப் பெற ஆசைப்பட்டது கண்டு ஔவையார் உள்ளத்துள்ளே நகைத்தார்; அருகே நின்ற இருவரையும் குறுநகையுடன் நோக்கி, “செல்வச் சேய்களே! என் பாட்டு வேண்டும் என்று கேட்கின்றீர்களே! உம்மை நான் எப்படிப் பாடுவேன்? போர்க்களத்தை நீங்கள் கண்ணால் கண்டதுண்டா? வறுமை வாய்ப்பட்ட அறிஞர் வாய் விட்டுரைப்பதைச் செவியால் கேட்டதுண்டா? எவரேனும் உம்மால் எள்ளளவு நன்மையேனும் இதுவரையில் பெற்ற துண்டா? எட்டாத மரத்தில் எட்டிக்காய் பழுத்தாற் போன்றது உம்மிடம் உள்ள செல்வம்” என்று வசைபாடி அவ்விடம் விட்டு அகன்றார். செல்வர் இருவரும் தருக்கிழந்து தாழ்வுற்றனர்.
ஔவையாரும் அதிகமானும்
இத்தன்மை வாய்ந்த ஔவையார் ஆண்மையாளரை வாயார வியந்து பாடியுள்ளார். அதிகமான் என்ற தலைவன் அப்பேறு பெற்றவன். அவ் வீரனுக்காகத் தொண்டை மானிடம் தூது செல்லவும் இசைந்தார் ஔவையார்.
தகடூர் யாத்திரை
அதிகமானும் சேரமானும்
அதிகமானும் சேரமானும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சேரமான் மலைநாட்டை யாண்டான். அதிகமான் கொங்கு நாட்டில் அரசு புரிந்தான். இருவரும் படைத்திறம் வாய்ந்தவர்; வீரப்புகழை விரும்பியவர்; ஆதலால் போர் தொடுத்தனர்.
தகடூர்ப் போர்
அதிகமானுக்குரிய நாட்டின்மேற் படையெடுத்தான் சேரன்; வலிமைசான்ற தகடூர்க் கோட்டையை முற்றுகை யிட்டான்; தாக்கித் தகர்த்தான்; வெற்றி பெற்றான். பொன் முடியார் என்பவர் அக்காலத்திலிருந்த கவிஞர்; நிகழ்ந்த போரை நேரில் கண்டவர். தகடூர்க் கோட்டையின் திண்மையும், அதிலமைந்த பலவகைப் பொறிகளும், படையின் பெருக்கமும் அவர் பாட்டால் அறியலாகும். போர்க்களத்தில் வீரம் விளைத்த பெரும் பாக்கன் என்ற படைத் தலைவனும் அவரது பாட்டில் அமையும் பேறு பெற்றான்.
தகடூர் யாத்திரை
தகடூர் யாத்திரை என்னும் தமிழ் நூல் அப்படை யெடுப்பின் தன்மையையும், போரின் வெம்மையையும் எடுத்துரைக்கின்றது. பெரும்பான்மை உரை நடையாகவும், சிறுபான்மை செய்யுளாகவும் அமைந்தது அந் நூல்.
அதிகமான் பெருமை
தகடூர் என்னும் மூதூர் இக்காலத்தில் தருமபுரி என்ற பெயர் கொண்டு வழங்குகின்றது. அதனருகே அதமன் கோட்டை என்ற சிற்றூர் உண்டு. அதிகமான் பெயரால் அமைந்தது அக்கோட்டை; அதிகமான் கோட்டை என்பது அதமன் கோட்டை என மருவிற்று. அக் கோட்டை இடிந்தது; கொற்றவன் மடிந்தான். ஆயினும் அதிகமான் பெயர் இன்னும் அழியாது நின்று நிலவுகின்றது.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்
Comments
Post a Comment