இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு-தொடர்ச்சி)
தமிழர் வீரம்
வீர மாதர்
வீரத் தாய்
தமிழ் நாட்டில் பெண்களும் மனத்திண்மை உடைய வராய் விளங்கினார்கள்; தன் மக்கள் வீரப்புகழ் பெறல் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத் தாயர் பலர் தமிழ் நாட்டில் இருந்தனர்.
வாளெடுத்த தாய்
வயது முதிர்ந்து, வற்றி உலர்ந்து, தள்ளாத நிலையில் இருந்தாள் ஒரு தாய். அவள் மகன் போர் புரியச் சென்றான். அவன் வெற்றி பெற்று வருவான் என்று எண்ணி எண்ணி, அவள் உள்ளம் தழைத்திருந்தாள். நாள்தோறும் மாலைப் பொழுதில் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ஒளியிழந்த கண்களால் அவன் வரும் வழியை நோக்கியிருந்தாள். ஒரு நாள் அவள் அடிவயிற்றில் இடி விழுந்தாற்போல், “உன் மகன் பகைவருக்குப் புறங்கொடுத்து ஓடினான்” என்று சிலர் சொல்லக் கேட்டாள்; உடனே வீராவேசமுற்று எழுந்தாள்; வீட்டினுள்ளே ஓடினாள்; ஓர் அரிவாளை எடுத்தாள்; அதனைக் கையிற் பிடித்துக்கொண்டு போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள்; “என் மகன் பேடியாய்ப் புறங்காட்டி ஓடியது உண்மையாயின் அவனுக்குப் பாலூட்டிய மார்பை இவ்வாளால் அறுத்திடுவேன்” என்று மனங்கொதித்துக் கூறினாள்; போர்க்களத்தில் பிணங் களினூடே செல்லும்பொழுது தலை வேறு, உடல் வேறாய்க் கிடந்த தன் மைந்தனைக் கண்டாள்; அவ்வுருவத்தைச் சேர்த்தெடுத்து அணைத்தாள்; ஆனந்தம் உற்றாள்; மகனைப் பெற்றபோது அடைந்த இன்பத்தினும் அப்போது பெரியதோர் இன்பமுற்றாள். [1]
ஆடவரும் ஆண்மையும்
ஆடவர் என்று பெயர் படைத்தார் எல்லாம் ஆண்மை யுடையரா யிருத்தல் வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கருத்து. ‘பிள்ளையைப் பெற்று வளர்த்தல் நற்றாயின் கடமை; சீலனாக்குதல் தந்தையின் கடமை. வாள் எடுத்து வீசி, வலிய யானையைக் கொன்று வருதல் அப் பிள்ளையின் கடமை’ என்று பாடினார் பொன்முடியார் என்னும் புலமை சான்ற தமிழ் வீரத்தாய்.[2]
களிறெறிந்த காளை
நால்வகைப் படையும் உருத்துநின்று போர் புரியும் செருக்களத்தில் ஆண் யானைகளை அடித்து வீழ்த்துதல் வீரத்துள் வீரமாக மதிக்கப்பட்டது. “கைவேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்” என்றார் திருவள்ளுவர்.[3] ஒரு வீரன் வீறிட்ட ஆனையின்மீது தன் வேலை விட்டெறிந்தான். அஃது அடிபட்டு விழுந்தது. அப்பொழுது மற்றொரு யானை அவனைத் தாக்க வந்தது. இன்னொரு வேல் கிடைத்தால் இந்த யானையையும் முடித்திடலாமே என்று அங்குமிங்கும் பார்த்தான். அந் நிலையில் அவன் மார்பில் தைத்திருந்த வேல் ஒன்றைக் கண்டான். அதுவரையும் போர் வெறியில் தன் மேனியிற் பாய்ந்திருந்த வேலையும் அறியாதிருந்த வீரன், அதை ஆர்வத்தோடு பறித்து இழுத்தான்; வேழத்தைக் கொல்ல ஒரு வேல் கிடைத்ததே என்ற மகிழ்ந்தான்.
ஒரு தாய் பெற்ற இன்பம்
போர்க்களத்தில் யானையுடன் பொருது உயிரிழந்த வீரரும் பெரும் புகழ் பெற்றார்கள். நெடுங்காலம் பிள்ளையில்லா ஒரு மாது முதுமைப் பருவத்தில் ஒரு புதல்வனைப் பெற்றாள். மலடி பெற்ற மகன் என்று ஊரார் மறைவாகப் பேசினர். அம் மகன் காளைப்பருவம் எய்தியபோது தாயின் தலை கொக்கிறகு போல் வெளுத்தது. அந் நிலையில் நாட்டிலே ஒரு போர் மூண்டது. போர்க்களம் செல்ல ஆசைப்பட்டான் மைந்தன். தன் முதுமையும் கருதாது, அவன் அருமையும் பாராது உடனே ஆசி கூறி அனுப்பினாள் அத் தாய். அமர்க்களத்தில் ஒரு யானையோடு போர் செய்தான் அவ் வீரன்; அவ் விலங்கைக் குத்திக் கொன்றான்; அந்தக் களத்தில் தானும் விழுந்து மடிந்தான். அச் செய்தியைக் கேட்டாள் தாய்; பிறவிப் பயனைப் பெற்றவள்போல் பேரின்பம் உற்றாள்.
“களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே”4
என்று அவ் வீரத் தாயைப் புகழ்ந்தார் ஒரு புலவர்.
வயிற்றை அறுத்த வீரத்தாய்
இத்தகைய இன்பம் கிட்டாதவள் மற்றொரு தாய். அவள் மகனும் போர்க்களம் போந்தான். ஆனால், பகைவரை வென்றானல்லன். ஒரு யானையின் மீது வேற்படையை வீசினான். அவ் யானை விழுந்து படவில்லை; வேலோடு ஓடிவிட்டது. அப்போது வெறுங் கையனாய்த் திரும்பினான் மைந்தன்; வீடு வந்து சேர்ந்தான். போர்க்களத்தில் நிகழ்ந்ததை அறிந்தாள் அவன் தாய்; மிக வருந்தினாள்; ‘இதுவரை இவ்வாறு யானையைப் போகவிட்டுப் புறங்காட்டித் திரும்பியவன் என் குடியில் யாருமில்லை. என்றுமில்லாத வசை இன்று உன்னால் வந்தடைந்ததே!’
“எம் இல் செய்யாப் பெரும்பழி செய்த எல்லாக் காளையை ஈன்ற வயிறே” [5]
என்று மனம் நொந்து,”இவனைப் பெற்ற பாழும் வயிற்றைப் பீறி எறிவேன்” என்று சீறி எழுந்தாள். மான வீரம் அவள் பேச்சில் மணக்கின்றதன்றோ?
வீரப் புலி
ஒரு சிற்றூரில் குடிசையில் வாழ்ந்தாள் மற்றொரு மாது. அவளைக் காண வந்தாள் ஓர் இள நங்கை. “தாயே! தள்ளாத வயதில் இக்குடிசையில் தன்னந்தனியாக இருக்கின்றாயே. உன் மகன் எங்கே?” என்று கேட்டாள். “அம்மா, என் மகன் எங்கே போனானோ நான் அறியேன். புலியிருந்த குகை போல் அவனைப் பெற்ற வயிறு இது. இங்குக் காணாவிட்டாலும் அவனைப் போர்க்களத்திலே காணலாம்” என்றாள் வீரத் தாய்.[6]
வீர உள்ளம்
ஓர் ஊரிலே கடும்போர் நடந்தது. வீட்டுக்கொரு வீரன் போர்க்களம் போந்தான். மாதர், விருப்புடன் ஆடவரை வழி அனுப்பினர். ஒரு மாது, முதல் நாள் நடந்த போரில் தமையனை இழந்தாள்; மறுநாள் நடந்த போரில் கணவனை இழந்தாள். பின்னும் போர் நின்ற பாடில்லை. குடும்பத்தில் சிறு பையன் ஒருவனே எஞ்சி நின்றான். காலையில் போர்ப் பறை முழங்கிற்று; வீரரைப் போர்க்களத்திற்கு அழைத்தது; அது கேட்டு எழுந்தாள் அம் மாது. இரு நாளிலும் போர் புரிந்து இறந்து பட்ட தமையனையும் தலைவனையும் நினைந்து அவள் தயங்கவில்லை. அருமைப் பிள்ளையை அன்போடு அழைத்தாள்; வெண்மையான ஆடையை உடுத்தாள்; தலையைச் சீவி முடித்தாள்; வேலை எடுத்துக் கையிலே கொடுத்தாள்; போர்க்களத்தை நோக்கி அவனை விடுத்தாள்.7]
“என்னே அவள் வீர நெஞ்சம்!” என்று தமிழகம் வியந்து நின்றது.
வீர மாபத்தினி
இல்லறமே நல்லறம் எனக்கொண்ட தமிழ்நாட்டில் எண்ணிறந்த பத்தினிப் பெண்டிர் வாழ்ந்தனர். ஆயினும் கற்பென்னும் திண்மையால் வீரம் விளைத்த மாதர் ஒரு சிலரே. அனைவருள் தலைமை சான்றவள் கண்ணகி.
கண்ணகியின் பெருமை
சோழவள நாட்டிலே பிறந்தாள் அம் மங்கை! பாண்டி நாட்டிலே கற்பின் ஆற்றலைக் காட்டினாள்; சேர நாட்டிலே தெய்வீகமுற்றாள். எனவே, அவள் மூன்று தமிழ் நாட்டிற்கும் உரியவள். அவள் பிறந்தமையால் தமிழகம் பெருமையுற்றது.
மதுரையிற் கொடுமை
மதுரை மாநகரில் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் அரசு வீற்றிருந்தான். கண்ணகியும் அவள் கணவனாகிய கோவலனும் அந் நகரை அடைந்தார்கள். மனையாளது மணிச் சிலம்பை விற்றுவரக் கடைத்தெருவிற் சென்றான் கோவலன். அரண்மனைச் சிலம்பைக் களவாடினான் என்று குற்றம் சாற்றிக் காவலாளர் அவனைக் கொன்றுவிட்டார்கள்.
கண்ணகியின் சீற்றம்
அச் செய்தியை அறிந்தாள் கண்ணகி; பொறுக்க லாற்றாது பொங்கி எழுந்தாள்; விழுந்தாள்; பொருமி அழுதாள். அப்போது அவள் உள்ளத்தில் ஓர் ஊக்கம் பிறந்தது; கற்பின் வீரம் கனன்று எழுந்தது; விண்ணிலே விளங்கிய கதிரவனை நோக்கி,”ஏ, காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?” என்று அவள் கதறினாள்; கோவலன் கொலையுண்ட இடத்தை நோக்கி ஓடினாள்; குருதி வெள்ளத்திற் கிடந்த கணவனைக் கண்டாள்; அவன் மேனியில் விழுந்து கல்லும் கரையக் கண்ணீர் சொரிந்து அழுதாள்.
கண்ணகியும் பாண்டியனும்
“கொடுங்கோல் மன்னன் ஆளும் இந் நாட்டில் அறம் உண்டா? முறையுண்டோ? ஆண்டவன் உண்டா?” என்று அவள் அலறினாள்; தன் கணவன் குற்றமற்றவன் என்பதை உலகறியக் காட்ட விரும்பினாள்; மன்னன் மாளிகையை நோக்கி நடந்தாள். அரியாசனத்தில் தன் அரசியோடு அமர்ந்திருந்தான் பாண்டியன். அவன் முன்னே மாசடைந்த மெய்யளாய், மணிச் சிலம்பேந்திய கையளாய் நின்று கண்ணீர் வடித்தாள் கண்ணகி. அக் கோலத்தைக் கண்டு திடுக்கிட்டான் பாண்டியன். அவள் வடித்த கண்ணீர் அவனுள்ளத்தை அறுத்தது.
கலக்கமுற்ற காவலன் முன்னின்று கண்ணகி வழக்குரைத்தாள்; கோவலன் கள்வனல்லன் என்று ஐயந்திரிபற நிறுவினாள். அவள் சொல்லைக் கேட்ட பாண்டியன் சோர்வுற்றான். அவன் வெண்குடை தாழ்ந்தது; செங்கோல் தளர்ந்தது. அவன் அரியணையினின்று மயங்கி விழுந்தான்; உயிர் துறந்தான். இவற்றையெல்லாம் கண்ணுற்ற பாண்டிமாதேவி நடுங்கினாள்; கண்ணகியின் துயரத்தைக் கண்டு துடித்தாள்; அவளடிகளில் விழுந்து தொழுதாள்; ஆவி துறந்தாள்.
வீரக் கற்பு
மன்னனும் மாதேவியும் மடிந்த பின்னரும் கண்ணகியின் சீற்றம் மாறவில்லை. கெட்டவர் நிறைந்த மதுரை மாநகரையும் சுட்டெரிக்கக் கருதினாள் கண்ணகி; அந் நகரின் நடுவே நின்று,
“பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்” என்று வஞ்சினம் கூறினாள். மதுரையம்பதியிலே தீப்பற்றிக் கொண்டது. தீயவர் உறைந்த இடமெல்லாம் தீப்பட்டு ஒழிந்தது. வருந்திய மனத்தளாய்க் கண்ணகி அவ்விடத்தை விட்டகன்றாள்.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்
++++++++++++++++++++++++
குறிப்பு
[1]. புறநானூறு, 278.
[2]. புறநானூறு, 312.
[3]. திருக்குறள், 774.
[4]. புறநானூறு, 277.
[5]. புறத்திரட்டு, 1460 (சென்னைப் பலகலைக் கழகப் பதிப்பு)
[6]. புறநானூறு, 86.
[7]. புறநானூறு, 279.
Comments
Post a Comment