Skip to main content

ஊரும் பேரும் 61 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – தானமும் தருமமும்

 



(ஊரும் பேரும் 60 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – இறையும் அறமும்-தொடர்ச்சி)

ஊரும் பேரும்

தானமும் தருமமும்

“பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தருமம் வளர்த்ததும்”

தானம்
தமிழ் நாட்டார் நன்கறிந்து போற்ற வேண்டும் என்று முறையிட்டார் பாரதியார். அம் மன்னர் அளித்த தான தருமங்கள் சில ஊர்ப் பெயர்களால் இன்றும் அறியக் கூடியன. தஞ்சை நாட்டில் உள்ள அன்னதானபுரம், தருமதானபுரம், மகாதானபுரம், உத்தமதானபுரம் முதலிய ஊர்கள் முற்காலத்தில் அற நிலையங்களாக விளங்கின என்பதற்கு அவற்றின் பெயர்களே சான்றாகும்.


தருமம்
இன்னும், அறஞ் செய விரும்பிய அரசரும் செல்வரும் பலவிடங்களில் சத்திரமும், சாவடியும், விடுதியும் அமைத்தார்கள். அவற்றின் பெயர்கள் இப்பொழுது ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. நெல்லை நாட்டிலுள்ள பாவூர்ச் சத்திரமும், திருச்சி நாட்டிலுள்ள செட்டி சத்திரமும்அம்மா சத்திரமும், தருமசாலையால் பெயர் பெற்ற ஊர்கள் என்பது வெளிப்படை. செட்டி சாவடி, குறும்பன் சாவடி, சத்திரச் சாவடி முதலிய ஊர்ப் பெயர்கள் சாவடி யமைந்திருந்த இடங்களைக் காட்டுகின்றன. தஞ்சை நாட்டிலுள்ள சென்னியவிடுதியும், திருச்சி நாட்டிலுள்ள பால விடுதியும், வழிப்போக்கர் தங்குமிடங்களை உடையனவாயிருந்தன என்று கூறலாம். சத்திரம், விடுதி முதலிய அறநிலையங்களைப் பேணி வளர்ப்பதற்கு விடப்பட்ட நிலம் சாலாபோகம் எனப்படும். தஞ்சை நாட்டில் சாலாபோகம் என்பது ஓர் ஊரின் பெயர். இங்ஙனம் அற நிலையங்களை மன்னரும் செல்வரும் ஆதரித்தமையால் தமிழ் நாடு, அறம் வளரும் திரு நாடாய்த் திகழ்ந்தது.

திருமாலும் திருப்பதிகளும்
தொன்று தொட்டுத் தமிழ் நாட்டார் வழிபடும் தெய்வமாகிய திருமாலின் திருக்கோலம், பண்டை இலக்கியங்களிலும் திருப்பாசுரங்களிலும் அழகுற எழுதிக் காட்டப்படுகின்றது. திருவேங்கடம் என்னும் திருப்பதி மலையில்,
நன்னிற மேகம் நின்றது போலச்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணம்

சிலப்பதிகாரத்தில் இலங்குவதாகும். அவர் நின்றருளும் நீர்மையால் அம் மலை “நெடியோன் குன்றம்” என்னும் பெயர் பெற்றது.


இரு திருப்பதிகள்
திரு அரங்கத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகின்றார் திருமால். திருவரங்கம் என்றும், சிரீரங்கம் என்றும் வழங்கும் அப் பதியே வைணவர்களால் கோயில் என்றும், பெரிய கோயில் என்றும் கொண்டாடப்பெறும். திருவேங்கடமும் திருவரங்கமும் வைணவ உலகத்தின் இரு கண்களாக விளங்குகின்றன.
திருமால் நின்றும், இருந்தும், பள்ளிகொண்டும் அடியார்க்குச் சேவை சாதிக்கின்றார். தென்பாண்டி நாட்டில் இம் மூன்று திருக் கோலத்தையும் மூன்று திருப்பதிகளிற் கண்டு போற்றினார் நம்மாழ்வார்.


பாண்டித் திருப்பதிகள்
புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை இருந்து
வைகுந்தத்துள் நின்று

அருள்கின்றார் திருமால் என்பது அவர் திருவாய் மொழி.’

இருந்தையூர்
இத் தகைய திருக்கோலங்களால் எழுந்த ஊர்ப் பெயர்களும் தமிழ் நாட்டில் உண்டு. பாண்டி நாட்டில் வைகை யாற்றின் கரையில் அழகராகிய பெருமாள் இருந்தருளும் கோலம் பரிபாடலால் விளங்குவதாகும்.
மருந்தாகும் தீநீர் மலிதுறை
மேய இருந்தையூர் அமர்ந்த செல்வ

என்று திருமாலின் இருந்த திருக்கோலம் குறிக்கப்படுகின்றது. இவ்வண்ணம் பெருமாள் காட்சியளித்த இடம் “இருந்த வளம்” என்று பெயர் பெற்றது. இருந்தை என்று பாட்டில் வரும் பெயர் இருந்த வளம் என்றதன் குறுக்கம் ஆகும். அப் பெருமாளை இருந்த வளமுடையார் என்று அழைத்தனர் பழந் தமிழ் நாட்டார். இந் நாளில் கூடலழகராக விளங்கும் பெருமாளே இருந்தையூர்ச் செல்வன் என்பர். இருந்தையூர்க் கொற்றன் புலவன் என்பார் பாடிய பாட்டொன்று குறுந்தொகையிலே காணப்படுகின்றது. அப் புலவர் இவ்வூரைச் சேர்ந்தவர் என்று கருதலாகும்.

திரு நின்றவூர்
இன்னும், திருமால் நின்றருளும் கோலத்தைக் காணும் பேறு பெற்ற ஊர் ஒன்று நின்றவூர் என்று பெயர் பெற்றது. பாடல் பெற்ற திருப்பதிகளுள் அதுவும் ஒன்று. “கருமுகிலை எம்மான் தன்னை, நின்றவூர் நித்திலத்தை” என்று அங்குள்ள பெருமாளைப் பாடினார் திருமங்கை யாழ்வார். திரு நின்றவூர் என்னும் அருமைத் திருப் பெயர் இப்பொழுது தின்னனூர் என மருவி வழங்குகின்றது.

சலசயனம்
மகாபலிபுரத்தில் திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் விளங்குகின்றார். அவ்வூர்க் கடற்கரைக் கோவிலிற் கண்ட சாசனம் ‘சலசயனம்’ என்று அக் கோயிலைக் குறிக்கின்றது. சலசயனத்துப் பள்ளி கொண்டருளிய தேவர் என்று அச் சாசனம் கூறுதலால் கடலருகேயிருந்த திருமால் கோவில் அப் பெயரால் வழங்கிற் றென்று தெரியலாம்.


தலசயனம்
இனி, திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் உள்ள மற்றொரு கோயிலும் மகாபலிபுரத்தில் உண்டு. அது நகரினுள்ளே காணப்படுகின்றது. அதன் பழமை அங்குள்ள கல்வெட்டுக்களால் விளங்குவதாகும். தல சயனம் என்பது அதன் பெயர். எனவே, மகாபலிபுரத்தில் சலசயனம், தலசயனம் என்ற கோயில்கள் பழமையாகவே சிறப்புற்றிருந்தன என்பது புலனாகும்.3


திருவலவெந்தை
தலசயனத்தில் பூமி தேவியை வலப்பக்கத்தில் வைத்துத் திருமால் காட்சி தருதலால் திருவல வெந்தை என்னும் பெயர் அவர்க்கு அமைந்தது.
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான்
வானத்தின் அவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடன்மல்லைத் தலசயனத் துறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவார்என் நாயகமே

என்று திருமங்கை யாழ்வார் இத் திருக்கோலத்தைப் பாடியருளினார். திருவிடவெந்தை
தொண்டை நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று திருவிடவெந்தை என்று பெயர் பெற்றது. அங்குள்ள பெருமாள் திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்றவர். எந்தை என்பது அவர் திருநாமம். சிரீ வராக மூர்த்தி வடிவாகவுள்ள அப் பெருமாள் தமது இடப் பக்கத்தில் பூமி தேவியை ஏந்திய கோலமாகக் காட்சி தருதலால் இட எந்தை எனப் பெயர் பெற்றார் என்பர்.


“அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ⁠ஆலயம் மாயனே அருளால் என்னும்இன் தொண்டர்க் கின்னருள் புரியும் ⁠இடவெந்தை எந்தை பிரானை
என்று ஆழ்வார் பாடுதலால் அவர் திருநாமம் இட வெந்தை என்பது இனிது விளங்கும். கொங்கு நாட்டில் அவிநாசி யெனும் ஈசன் பெயர் ஊர்ப் பெயராக வழங்குதல் போன்று, இடவெந்தை என அத் தலத்திற்கு வழங்க லாயிற்று. இப்பொழுது மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்திற்கு அருகே திருவடந்தை என்ற பெயர் கொண்டு விளங்கும் பதி அதுவே. எனவே, தொண்டை நாட்டில் பூதேவியை வலமும் இடமும் வைத்து, வலவெந்தை யெனவும், இடவெந்தை யெனவும் வணங்கப்பெற்ற திருமால் பெருமை இனிது தோன்றும்.


திருக்கண்ணபுரம்
கண்ணனுக்குரிய திருப்பதிகளுள் விதந்தெடுத்துரைக்கப் படுபவன ஐந்து. அவை “பஞ்ச கிருட்டிணசேடத்திரங்கள்” என்று பாராட்டப்படும். தஞ்சை நாட்டு நன்னிலத்துக்குக் கிழக்கே நான்கு கல் தூரத்தில் உள்ள திருக்கண்ணபுரம் அவற்றுள் ஒன்று. “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அரணமைந்த மதில் சூழ் திருக் கண்ணபுரத்து” ள்ளான் என்று நலமுறப் பாடியருளினார் நம்மாழ்வார். திருமங்கை யாழ்வார் நூறு திருப்பாசுரங்களால் அக் கண்ணபுரப் பெருமாளைப் போற்றினார். “கருவரை போல் நின்றானைக் கண்ணபுரத் தம்மானை” என்று அவர் பாடிய பாசுரத்தால் அப்பதியில் நின்று காட்சி தரும் நெடுமாலின் கோலம் நன்கு விளங்கும்.

திருக்கண்ணன்குடி
தஞ்சை நாட்டு நாகை வட்டத்தில் உள்ளது திருக்கண்ணன்குடி. அங்கு நின்றருளும் திருக்கண்ணனை திருமங்கை யாழ்வார் பாடியுள்ளார்.
செழுமையார் பொழில்கள் தழுவும் நன்மாடத்
திருக்கண்ணங் குடியுள் நின்றானே

என்பது அவர் திருவாக்கு.


திருக்கண்ணமங்கை
திருவாரூருக்கு வடமேற்கே நான்கு கல் தூரத்தில் உள்ளது திருக்கண்ணமங்கை என்னும் திருப்பதி.
கன்னலைக் கரும்பி னிடைத்தேறலைக்
கண்ண மங்கையுள் கண்டு கொண் டேனே

என்று இப் பதியில் நின்றிலங்கும் பக்தவத்சலனைத் திருமங்கை யாழ்வார் பாடித் தொழுதார்.


கபித்தலம்
தஞ்சை நாட்டுப் பாபநாசத்துக்கு அண்மையிலுள்ள கவித்தலத்தைக் ‘கண்ணன் கவித்தலம்’ என்பர். கவிக்குல நாயகனாகிய அனுமனுக்கு அருள் புரிந்த இடமாதலால் அவ்வூர் கவித்தலம் கபித்தலம்-என்று பெயர் பெற்றதாகக் கருதப்படுகின்றது.

திருக்கோவலூர்
இனி, ஐந்தாம் கிருட்டிண சேடத்திரம் திருக்கோயிலூர் என வழங்கும் திருக்கோவலூர் ஆகும். வட மொழியில் அவ்வூர் கோபாலபுரம் எனப்படும். கோபாலனாகிய திருமால் எழுந்தருளி யிருக்கும் தலமாதலால் அதற்குக் கோவலூர் என்னும் பெயர் அமைந்த தென்பர். அது கோவல் எனவும் முன்னாளில் வழங்கிற்று.


கண்ணனூர்
இன்னும், கண்ணன் பெயரால் எழுந்த ஊர் திருச்சி நாட்டு முசிரி வட்டத்தில் உண்டு. கண்ணனூர் என வழங்கும் அவ்வூரில் அழகப் பெருமாள் கோயில் விளங்கு கின்றது.

(தொடரும்)

ஊரும் பேரும், இரா.பி.சேது(ப்பிள்ளை)

அடிக் குறிப்பு

1. புளிங்குடி, இப்பொழுது திருப்புளியங்குடி என வழங்கும். வைகுந்தம் சிரீவைகுண்டம் எனப்படும்.

2. ஆராய்ச்சித் தொகுதி, 242.

3. திருமங்கை யாழ்வார் கடல்மல்லையைப்பற்றிப் பாடிய பதிகங்கள் இரண்டனுள் முன் பதிகம், தல சயனத்தைப் பற்றிய தென்றும், கடற்கரைக் கோயிலைப்பற்றிய பின்பதிகம் சலசயனத்தைப் பற்றிய தென்றும் பிற்காலத்தில் இரண்டு பதிகங்களுமே தல சயனத் திருமாலைப் பற்றியனவாகக் கருதப்பட்டுப் பாடமாறலாயின என்றும் ஊகிக்க இடம் ஏற்படுகின்றது என்பர்.

(ஆழ்வார்கள் கால நிலை, ப. 144)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்