Skip to main content

தமிழ் வளர்த்த நகரங்கள் 18 – அ. க. நவநீத கிருட்டிணன்: புராணம் போற்றும் தில்லை

 




(தமிழ் வளர்த்த நகரங்கள் 17 – அ. க. நவநீத கிருட்டிணன்: தில்லையின் சிறப்பு-தொடர்ச்சி)

  1. புராணம் போற்றும் தில்லை
    தில்லைத் தலத்தின் பழமையையும் பெருமையையும் சொல்லும் புராணங்கள் பல. அவற்றுள் கோயிற் புராணம், சிதம்பர புராணம், புலியூர்ப் புராணம் முதலியவை சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும். இவற்றுள் உமாபதி சிவனரால் பாடப்பெற்ற கோயிற் புராணம் தனிச் சிறப்புடையதாகும்.

புராணம் பாடிய புனிதர்

உமாபதிசிவனர் சைவ சமய சந்தான குரவர் நால்வருள் ஒருவர். அவர் தில்லைவாழ் அந்தணருள்ளும் ஒருவர் ; சைவ சமய சாத்திரங்கள் பதினான்கனுள் எட்டு நூல்களைத் தந்தருளிய செந்தமிழ்ச் சிவஞானச் செல்வர் ; மற்றாெரு சந்தான குரவராகிய மறைஞான சம்பந்தரின் மாணாக்கர். தில்லைக் கூத்தன் அருளைப் பெற்றுப் பெத்தான் சாம்பான் என்னும் புலைக்குலத் தொண்டர்க்கு முத்திப்பேறு கிடைக்கச்செய்த சித்தர். முள்ளிச்செடிக்கும் முன்னவன் இன்னருள் வாய்க்கு மாறு செய்த வள்ளலாவர். அவர் இயற்றிய கோயிற் புராணம் கூறும் தல வரலாற்றை நோக்கலாம்.

புராணம் புகலும் கதை

ஒரு காலத்தில் இறைவன் விண்ணவரின் வேண்டு கோளுக்கிணங்கித் தாருக வன முனிவர்களின் செருக்கை யடக்குவதற்காகக் காதாந்த நடனம் ஆடினர். அவ் ஆட்டத்தில் இறைவனது இயக்கமாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களும் அமைந்திருந்தன. இத்தகைய திருக் கூத்தினை அடியார்கள் பொருட்டுத் தில்லையில் ஆடியருளினார். இத் தலத்தில் புலிக்கால் முனிவரும் பாம்புக்கால் முனிவரும் கண்டுகளிக்குமாறே ஆடினார் என்று உமாபதி சிவனார் உரைப்பர்.

காசிமாநகரில் தோன்றிய முனிவராகிய புலிக்கால் முனிவர் ஒருகால் தில்லையின் பெருமையைத் தம் தந்தையாரிடம் கேட்டார். உடனே தில்லையை அடைந்து, ஆங்கு ஆலமர நீழலில் அமர்ந்தருளிய சிவலிங்க வடிவைத் தரிசித்து வழிபட்டார். அதுவே இப்போது திருமூலட்டானேசுவரர் திருக்கோவிலாகும். அச் சிவலிங்கத்தை நாள்தோறும் மலரிட்டு வழிபட வேண்டும் என்று விரும்பினர். வழிபாட்டுக்குரிய மலர்களின் தேனை வண்டுகள் சுவைக்கு முன்னரே அவற்றை எடுத்து இறைவனுக்கு அணியவேண்டும் என்று ஆர்வங்கொண்டார். தம் விருப்பினை இறைவனிடம் முறையிடவே, பொழுது புலர்வதற்குமுன், மரங்களில் ஏறிப் பூப்பறிப்பதற்கு ஏற்ற புலிக்கால், புலிக்கை, புலிக்கண்களைப் பெற்றார். அதனாலேயே இவர் ‘புலிக்கால் முனிவர்’ எனப் பெயர்பெற்று இறை வழிபாட்டில் இன்புற்றிருந்தார்.

அங்நாளில் பதஞ்சலியென்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் ஆதிசேடனின் அவதாரம். திருமாலின் பாயலாகக் கிடந்த அவர், அத்திருமால் இறைவனது ஆனந்தத் தாண்டவச் சிறப்பைப் பலகால் சொல்லக் கேட்டு மகிழ்ந்தவர். அதனால் தாமும் அதனைக் கண்ணுறும் விழைவுடன் தவம்புரிந்தார். இறைவன் அத்திருக்கூத்தினைத் தில்லையில் காணலாமென அவருக்குக் கூறி மறைந்தான். பாம்புக்கால் முனிவராகிய பதஞ்சலியாரும் தில்லையைச் சார்ந்து, புலிக்கால் முனிவருடன் நட்புக்கொண்டு திருமூலட்டானேசுவரரைத் தொழுது வழிபாடு செய்து வந்தார். தில்லையின் மேல்பால் நாகசேரி யென்னும் தீர்த்தத்தை உண்டாக்கி, அதன் க்ரையில் ஒரு சிவலிங்கத்தையும் அமைத்து, இறைவன் திருக்கூத்தைக் காணும் பெரு விருப்புடன் எதிர்நோக்கியிருந்தார்.

தில்லையில் இறைவன் திருக்கூத்தை நிகழ்த்த வந்தான். அங்கிருந்த காளி தடுத்துத் தன்னுடன் போட்டிக்கு இறைவனே அழைத்தாள். இறைவன் ஊர்த்துவத் தாண்டவத்தால் அவளது செருக்கை யடக்கித் ‘தில்லையின் வடபால் அமர்க!’ என அருள் செய்தான். அவள் தில்லைக்காளியாக நகரின் வடக் கெல்லையில் தங்கினாள். இன்றும் தில்லைக்காளியின் கோயில் சிறப்புற்று விளங்குகிறது. இறைவன் காளியுடன் ஆடிய ஊர்த்துவத் தாண்டவத்தைப் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் தரிசித்து இன்புற்றனர். அவ்ர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய இறைவன் தில்லைமாநகரில் கூத்தப்பெருமானாக என்றும் குளிர்ந்த காட்சியருளுகின்றான்.

(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்