Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 26 : அல்லியின் வரலாறு

 




(பூங்கொடி 25 : அல்லியின் மறுமொழி – தொடர்ச்சி)

பூங்கொடி

அல்லியின் வரலாறு

     `வளர்பெரு நிதியோய்! வாழ்கநீ பெரும!

தளர்வுறும் நின்மனம் தகாநெறி ஒரீஇ

நல்வழிப் படர்க! நானிவண் உற்றது

செல்வக் கோவே செப்புவென் கேண்மோ!  

     மகப்புனல் ஆட மயில்நகர் விடுத்துத்

தகப்பன் தடையைப் பொருட்படுத் தேனாய் 45

வருமெனை மறித்து வஞ்சகஞ் செய்தனன்;

வெருகன் தன்னுரை முழுதும் மெய்யென

நம்பிய என்பால் நலம்நுகர்ந் ததற்பின்

     வெம்பி அழிந்திட வீதியில் விடுத்துக்

காணா தேகினன்; கலங்கஞர் எய்தி

நாணி என்னூர் நண்ணே னாக,  50

அல்லி தந்தையின் அன்பு

     அழலோம் பாளன் அறநெறிச் செல்வன்

பழமறை வல்லான் பார்ப்பன முதுமகன்   

     தாயிலாக் குறையைத் தவிர்க்குந் தந்தை

என்னைக் காணான் இரங்கிப் புலம்பித்

தென்றிசைக் கடல்வரை தேடித் திரும்பி

வருவோன் இங்கே உறுமெனைக் கண்`டிவண்

எங்ஙனம் வந்தனை என்மகள்?’ என்றே     55

     பொங்கிய கண்ணீர் என்றலைப் பொழிந்து,

பிழைமணம் பட்டுப் பெருநெறி பிழைத்து

வழுவினேன் ஆயினும் வளர்மகப் பற்று

நிறைந்தவன் ஆதலின் நீங்கி நடவான்

புரந்திட எண்ணிப் பூசுரர் மனைதொறும்     60

     இரந்துண வெடுத்தும் என்னைப் பேணினன்; 65

வைதிகக் கொடுமை

     ஆறாக் கவலை அரித்திட வருநோய்

தீராத் துயரால் திரிவோன் ஒருநாள்

அந்த ணாளர் மனைதனை அணுகிச்

செந்தண்மை வேண்டிச் செயலிலான் நிற்கஅச்  

     சேரி வாழுநர் சீறி `வைதிகம்    70

—————————————————————

     கலங்கஞர் – மிகுந்ததுன்பம், நண்ணேன் – பொருந்தேன், அழலோம்பாளன் – வேள்விசெய்வோன், பிழைமணம் – பிழைபட்ட திருமணம், புரந்திட – காத்திட, பூசுரர் – பார்ப்பனர், செந்தண்மை – கருணை.

———————————————————–

மாறி நடந்த மங்கை எம்அகம்

குலவுதல் ஒவ்வோம் குலம்பழு தாயினள்

விலைமகள் தந்தைநீர் வேதியர் தாமோ?’

என்றெமை ஏசி இகழ்ந்தனர்; அதனால்  

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்