Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 28 : அடிகள் அடைக்கலம் அருளல்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 27 :  குறளகம் புகுதல் – தொடர்ச்சி)

அடிகள் அடைக்கலம் அருளல்

     நல்லறம் எவைஅவை நயந்திடும் அவர்எம்

அல்லல் கண்டதும் அரும்பினர் கண்ணீர்  

     துடைப்பேன் துயர்எனத் துடைத்தனர் அந்நீர்; 110

உடைப்பெருஞ் செல்வம் உற்றேன் போலக்

களித்தேன் தாயின் கருணையைக் கண்டேன்;

உளத்தே நிறையும் உவப்புடன் குறளகத்

தொண்டுகள் புரியும் தோகை இவளிடம்   

     விண்டுளம் நண்பு கொண்டுளேன் யான்’ என;     115

கோமகன் அகலுதல்

     `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன்

மெல்லியல் இவளை வஞ்சியின் துணையால்

அடைவென்’ எனவுரைத் தகன்றனன் கோமகன்; 

—————————————————————

     நத்தினர் – விரும்பினர், தம்பினும் – தம்தம்பி, வகித்துளோர் – அடைந்துள்ளவர், கசடு – குற்றம், அதாஅன்று – அதுமட்டுமன்றி, தோகை – மயில் போன்ற பூங்கொடி, நண்பு – நட்பு.

————————————————————-

பூங்கொடியின் கடுமொழி

     படிப்பகம் விடுத்துப் பாவை போந்து  

     `தடித்திடும் உளத்தன், தகவிலா நெறியன், 120

காவா நாவினன், காமுகன், நல்லன

மேவா வாழ்வினன், மெல்லியல் தம்பால்

நிறையெனும் காவல் நிலைப்பதை அறியான்,

குறைமதி யாளன், கொடியன் ஒழிந்தனன்; 

இத்தகு காமம் இல்லா தொழிக!     125

இத்தகும் ஆடவன் இருந்திடப் பெறுமேல்

பொல்லா நாடெனப் புகலுவர் மேலோர்

நல்லாய் உணர்’எனப் பூங்கொடி நவில்வுழித்                

தாமரைக்கண்ணி வருகை

     தாமரைக் கண்ணி தண்மலர்க் காவுள்

     வருவோள் `தமிழ்மொழி வாழ்க! வாழ்க!  130

வருவோர் எவர்க்கும் வணங்காத் தமிழே!

உலக மொழியுள் உயர்ந்தாய் என்கோ!

அலகிலாக் காலங் கண்டாய் என்கோ!

சங்கம் வளர்த்தாய் சான்றோர் பலரால்    

பொங்கும் புகழ்நூல் பூண்டாய் என்கோ!   135

ஆயிரம் பகைதாம் ஆர்ப்பரித் துறினும்

தூவென இகழ்ந்து தோள்வலி காட்டி

எழிலர சோச்சும் தமிழே என்கோ!

கடல்பொங் கலையில் கறையான் வாயில 

     சுடர்எரி நாவில் சுழிபடும் ஆற்றில்  140

தப்பிப் பிழைத்த தமிழே என்கோ!    

     உன்னுயர் பெருமை உரைத்திட ஒருநா

 தன்னால் இயலேன்’ என அத் தையல்

      அந்தி வந்தது

     பாடின ளாகப் பையென மாலை

     கூடிவந் துற்றது; கூடடை பறவை, 145

மணியொலி கேளா மாணவச் சிறுவர்

அணியணி யாக ஆர்ப்பது போலப்

பலபட இரைந்தன பசுமரந் தோறும்;

குலவிய தம்பணி ஆற்றிய கொழுநர் 

     அயர்வொடு வருவரென் றதனை ஆற்றிட 150

நகைமுக மாதரார் வழிவழி நோக்கினர்;

நாடொறும் பயிலும் நங்கையர் பாட்டொலி

மாட மிசைதொறும் மலர்ந்து பரந்தன;

கால்விரல் சதிசொலக் கைவிரல் மொழிசொல  

     நூலிடை நுடங்க நுதல்வியர் வரும்ப    155

நீள்சடைப் பின்னல் நெளிந்துபின் துவளப்

பாவையர் ஆடல் பயிலும் அரங்கில்

மேவிய ஒலியும் மிடைந்து பரந்தன;

முழவொலி யாழொலி முடுகி எழுந்தன;   

     குழலியர் முன்றில் கோலஞ் செய்தனர்;   160

ஆவலொடு திரும்பும் ஆவினங் கண்டு

தாவின கன்றுகள்; தளிர்விரல் மாதரார்

வீடுகள் தோறும் விளக்கெடுத் தனரால்;

ஆடிடுஞ் சிறுவர் ஆசாற் காண்டலும் 

     பாடொலி அடங்கிப் பதுங்குதல் என்ன  165

வகைவகைப் புள்ளினம் வாயொலி ஒடுங்கிப்    

     புகுந்திட அந்திப் பொழுதுவந் ததுவே. 167

***

(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்