தமிழர் இல்லறம் (தொடர்ச்சி) – சி.இலக்குவனார்
தமிழர் இல்லறம் (தொடர்ச்சி) – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 15 – தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 16
7. இல்லறம் தொடர்ச்சி
திருமணத்தில் பெண்ணுக்குத் தாலியணிதல்பற்றி ஒன்றும் கூறப்பட்டிலது. பெண்ணுக்குத் தாலி எனும் அணி உண்டு என்பது கணவனோடு வாழுகின்றவர்களை “வாலிழை மகளிர்” என்று அப் பாடலில் குறிப்பிட்டுள்ளமையால் தெரியலாம். `வாலிழை’- உயர்ந்த அணி- என்பது தாலிiயைத்தான் குறிக்கும்.
திருமணத்தில் மணமகளுக்குத் தாலி கட்டுதல் தமிழரிடையே மட்டும் காணப்படும் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும். திருமணத்தோடு தொடர்புடைய இன்னொரு சடங்கும் இருந்துளது. அது `சிலம்புகழி நோன்பு’ என்று கூறப்படும். திருமணம் ஆவதற்கு முன்னர் மகளிர் கால்களில் சிலம்புகள் அணிந்திருப்பர். திருமணம் நடைபெறுங்கால் சிலம்புகளைக் கழற்றும் சடங்கொன்று மணமகள் வீட்டிலேயோ, மணமகன் வீட்டிலேயோ நடைபெறும் என்று இலக்கியங்களால் புலனாகின்றது.
கால்களில் அணிந்துள்ள சிலம்புகளைக் கழற்றுதலும் தாலி அணிந்து கொள்ளுதலும் மகளிர்க்குரிய திருமண நிகழ்ச்சிகளாகும்.
காதலித்து மணம்புரியும் வழக்கத்தைப் போற்றும் நாட்டில் இவை இன்றியமையாதனவே.
தமிழகத்தில் மணமானவளைக் காதலித்தல் என்பது பிறர்மனை விழைதல் என்னும் பெருங் குற்றத்தின் பாற்படும். மங்கை நல்லாள் மணம் ஆனவளா ஆகாதவளா என்று ஆடவர் அறிதற்கு ஏதேனும் அடையாளம் வேண்டுமன்றோ? அவ் வடையாளங்களே இவை. சிலம்பு அணிந்திருந்தால் மணமாகாதவள் என்றும், தாலியணிந்திருந்தால் மணம் ஆனவள் என்றும் தெள்ளிதிற் புலனாகும்.
ஏன் இவ் வடையாளங்கள் ஆடவர்க்கு வேண்டாவோ என்று சிலர் வினவலாம். பண்டைத் தமிழகத்தில் ஆடவர் ஒருவர் ஒருத்திக்கு மேற்பட்டும் மணம் புரிந்து கொள்ளலாம் என்ற நிலையிருந்தது. ஆதலின், ஆடவர் மணமானவரா ஆகாதவரா என்று அறியவேண்டிய கடப்பாடு இருந்திலது.
இக்காலத்தில் ஆடவர் ஒருத்திக்குமேல் மணந்து கொள்ளக்கூடாது என்று இருத்தலினால் காதல் மணத்தைப் போற்றுவோர் ஆடவர்க்கும் ஏதேனும் அடையாளங்களை ஏற்படுத்தலாம். காதல் மணம் நிகழ்வது அரிதாக இருத்தலின் இதுபற்றி யாரும் இன்று கவலைகொள்வாரிலர்.
சங்ககாலத் தமிழகத்தில் காதலின்பம் துணையாகத் திருமணம் செய்துகொண்டாலும், காதலின்பத்திற்காக மட்டும் வாழ்வதே தம் குறிக்கோள் என்று கொண்டிலர். பழிக்கு அஞ்சிப் பொருளை யீட்டித் தாமும் துய்த்துப் பிறர்க்கும் அளித்து வாழ்தலே இல்லறத்தின் சிறப்பு என்று கருதினர்.
கல்வி பயிலும் மாணவர், மொழிவளம் படுத்தும் புலவர், கலை வளர்க்கும் கலைஞர் முதலியோரையும், பிறர்க்கென வாழ்வதற்குத் தம் வாழ்வைத் துறந்தோர், உழைக்கும் ஆற்றலின்றி வறியரானோர், தம் வீட்டைவிட்டு வெளியேறியோர் முதலியோரையும், தென்புலத்தார், தெய்வ அருள்பெற்ற பெரியோர், விருந்து, ஒக்கல் என்போரையும் போற்றிப் புரக்கவேண்டியவர் இல்லறத்தினரே என்பது,
“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை” (குறள்-41)
“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை” (குறள்-42)
“தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல்
தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள்-43)
எனும் வள்ளுவர் மொழிகளால் தெளியலாம். இல்லறத்தின் பண்பாக அன்பும், பயனாக அறனும் இருத்தல் வேண்டும் என்பது வள்ளுவர் வாய்மொழி.
தலைவன் ஒருவன் தான் விரும்பிய தலைவியைத் தவறாது மணப்பதாக உறுதிமொழி கூறுங்கால்,
“சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலருணப்
பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி யடிசில்
வசைவில் வான்திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்றுஆங்கு
அறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது” (வரி, 201-9)
என்று குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. வருவோர்க் கெல்லாம் வரையாது நல்லுணவு அளித்தல் இல்லறத்தின் கடமைகளுள் தலையாய ஒன்று என்று அன்று கருதியிருந்தனர் என்பதனை இவ் வுறுதிமொழி புலப்படுத்துகிறதன்றோ?
கணவன் வெளியிற் சென்று அயராது உழைத்துப் பொருளீட்டலும் மனைவி வீட்டிலிருந்து இல்லறம் ஓம்பலும் அற்றைநாட் பணிமுறைகளாகும்.
“வினையே ஆடவர்க்கு உயிர்; மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” எனக் கருதி ஒழுகினர். மனைவி அடுப்பூதிச் சமைக்கும் அடிமைப்பெண்ணாகக் கருதப்பட்டிலள். அதனாலேயே, திருவள்ளுவர் மனைவியை வாழ்க்கைத் துணை என அழைத்து அவர்தம் மாட்சிமையை வகையுறப் புகலுகின்றார்.
“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்” (குறள்-52)
“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை” (குறள்-53)
என்னும் குறட்பாக்களை நோக்குமின்! மனைவியின் பெருமையை இதனினும் சிறப்பாக எவர்தாம் கூற இயலும்? சங்க காலத்தில் பெண்ணின் பெருமை இருந்தவாறென்னே !
இங்ஙனம் கணவனும் மனைவியும் இருதலைப்புள்ளின் ஓருயிராய் இல்லறம் நடத்துங்கால், ஈதலும் இசைபட வாழ்தலுமே யன்றி மக்கட் பேற்றாலும் இன்பம் துய்த்தனர். மக்கட்பேற்றை, மனைமாட்சியை மங்கலமாகப் பெற்ற இல்லறத்தின் நன்கலமாக நன்கு போற்றினர்.
“அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்” (குறள்-64)
“மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (குறள்-65)
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்” (குறள்-66)
எனப் பல்வேறு இன்பங்களைக் குழந்தைகள்பால் கொண்டனர்.
“படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே”
(புறநானூறு-188)
என முழங்கினர்; மக்கட்பேறில்லார் மாழ்கினர். “மக்கள் வேண்டா; வேண்டா” என்று அன்று உரைத்தாரிலர். மாறாக “மக்களைப் பெறுக ; பெறுக” என வாழ்த்தினர். அதற்குரிய வழிமுறைகளையும் காட்டினர். ஆகவே, மக்களைப் பெற்று மனையறம் காத்துச் சுற்றம் தழுவிச் சோர்விலாது சிறந்தன செய்து வாழ்தலே இல்லறம் என்று கொண்டிருந்தனர்.
“காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”
(தொல்காப்பியம், பொருளதிகாரம்,192)
என ஆசிரியர் தொல்காப்பியர் அழகுற இல்லறத்தின் பயனை எடுத்துரைத்தார். அதனாலேயே தெய்வப் புலவர் திருவள்ளுவர்,
“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்” (குறள்-46)
என உலகத்தாரை நோக்கி உரத்த குரலில் வினாவினர்.
பிறரையும் நன்னெறியில் ஒழுகச் செய்து தாமும் அறநெறி பிறழாது வாழ வகைசெய்யும் இல்லறம் துறவறத்தினும் பெருமை யுடையது; நோன்மையுடையது. ஆதலின், இல்லற நெறியே பிற எந்நெறியினும் மேம்பட்டதாகும். இல்லற நெறியின் இயல்நெறி வழாது வாழ்பவர் இவ் வுலகின்கண்ணிற் காணும் கடவுளெனக் கருதப்பட்டுப் போற்றப்படுவர்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள்-50)
இல்லறச் சிறப்பே நாட்டின் ஏற்றத்திற்குரிய நல்லறச் சிறப்பாகும். இதனைத் தெளிந்த சங்க காலத் தமிழர் இல்லறத்தை இனிது போற்றி எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்ந்தனர்.
“இல்லற மல்லது நல்லற மில்லை.”
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
Comments
Post a Comment