அகல் விளக்கு – மு.வரதராசனார்: 23
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 22. தொடர்ச்சி)
அகல் விளக்கு
இரண்டு வாரம் கழித்துச் சந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சந்திரனுடைய கையெழுத்தைக் கண்டதும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. அதில் தான் சொல்லாமல் சென்னைக்குப் போனது பற்றியும், நான் தேர்வில் தவறிவிட்டது பற்றியும் வருத்தம் தெரிவித்திருந்தான். தனக்கு மனம் நன்றாக இல்லை என்றும், முன்போல் ஊக்கமாகப் படிக்க முடியவில்லை என்றும் சுருக்கமாக எழுதியிருந்தான், அவன் மனநிலையில் அப்படி மாறுதல் நேர்ந்ததற்குக் காரணம், எசு. எசு. எல். சி. யில் எண்ணியபடி வெற்றிபெற முடியாமற் போனதுதான் என்று வருந்தினேன். உடனே அந்தப் பழைய குறையை மறந்துவிட்டுப் புதிய ஊக்கத்தோடு முயலும்படியாக எழுதினேன், அந்தக் கடிதத்தைப் பற்றி அம்மாவுக்குச் சொன்னேன். என்ன காரணமோ, புதிய ஊர் பிடித்திருக்காது என்று அம்மாவும் வருந்தினார்.
அதற்குப் பிறகு அவன் பதில் எழுதவில்லை. மறுபடியும் நானே ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு எழுதிய பதிலும் சுருக்கமாகவே எழுதியிருந்தான். விடுமுறையில் ஊர்க்கு வரப்போவதாகவும் அங்கு வந்தால் தோப்பில் பேசிக் கொண்டிருக்கலாம் என்றும் குறித்திருந்தான். ஆனால், விடுமுறை எப்போது என்பதைத் தெரிவிக்கவில்லை.
எனக்கு கால் தேர்வு வந்தது. அவனுக்கும் அப்போது தேர்வு நடக்கும் என்றும், அதன் பிறகு தான் விடுமுறைக்கு வருவான் என்றும் எண்ணியிருந்தேன். என் தேர்வு முடிந்த பிறகு பெருங்காஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்குச் சென்று சேர்ந்ததும் ஏமாற்றம் அடைந்தேன். அவனுடைய விடுமுறைக் காலம் முடிந்து அதற்கு முந்திய நாள் தான் சென்னைக்குப் போய்விட்டதாகக் கூறினார்கள். உடனே திரும்பிவிடலாம் போல் தோன்றியது. சந்திரனுடைய அம்மா, அப்பா, அத்தை மூன்று பேரும் வற்புறுத்தவே சோர்வோடு மூன்று நாள் தங்கியிருந்தேன். அந்தச் சோர்வுக்கு இடையே நான் பெற்ற மகிழ்ச்சி ஒன்று இருந்தது என்றால், அது கற்பகத்தின் முகத்தை இடையிடையே கண்டதில்தான். அவளோ, படிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, சமையலறையில் பயின்று கொண்டிருந்தாள். என் முன் அடிக்கடி வர நாணினாள். அந்த நாணம் எப்படித்தான் அவளிடம் வந்து சேர்ந்ததோ தெரியவில்லை. ஆறு மாத காலத்தில் அவ்வளவு வேறுபாட்டோடு பழகுவாள் என்று நான் எண்ணவில்லை. ஆனாலும், யாரும் இல்லாதபோது, நடைவழியாகப் போனவள், இரண்டு மூன்று முறை புன்முறுவலும் கடைக்கண் பார்வையும் காட்டிவிட்டுச் சென்றாள்.
வழக்கம் போல் மாசன் இளநீர் வெட்டிக் கொண்டு வந்தான். “நுங்கு இல்லையா?” என்று நான் கேட்ட போது, “அதற்கு இப்போது காலம் இல்லை. வேண்டுமானால், பனம் பழம் இருக்குமா என்று பார்த்து வருவேன்” என்றான்.
தென்னந் தோப்புக்குத் தனியே சென்றேன். காவலாள் சொக்கான் என்னை வரவேற்றான். “சுரைப்புருடை வேண்டுமா சாமி!” என்றான்.
“வேண்டா, நீ பக்கத்தில் இரு. நானே நீந்திப் பார்க்கிறேன்” என்று சொல்லிக் கிணற்றினுள் இறங்கினேன். படித்த வாய்பாடு தவறாமல் நினைவுக்கு வருவது போல், நீரில் இறங்கியவுடன் நீந்தும் திறமை தானே வந்தது. ஒருவகைப் பெருமிதத்தோடு திரும்பத் திரும்பச் சுற்றிச் சுற்றி நீந்தினேன். “சொக்கான்! உன் துணை வேண்டா. இனிமேல் நானே தனியே நீந்துவேன். தண்ணீரும் எனக்குத் தரைபோல் ஆகிவிட்டது. நீ போகலாம்” என்றேன்.
“என்ன சாமி! இது ஒரு வித்தையா? நாய்க்குட்டி பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி எல்லாம் பிறந்த மூன்றாம் நாளில் போட்டாலும் நீந்திக் கரைக்கு வந்து சேருது. மனிதக் குட்டிக்கு இது ஒரு வித்தையா?” என்றான் சொக்கான்.
“நாயும் பூனையும் ஆடும் மாடும் யாரும் கற்றுக் கொடுக்காமலே நீந்துகின்றனவே. மனிதன்தான் கற்றுக் கொடுத்து நீந்த வேண்டியிருக்கிறது” என்றேன்.
வழக்கம்போல் அத்தை வெந்நீர் வைத்துக் காத்திருந்தார். முன் சந்திரன் சொல்லிக் கொடுத்தது போல் பொய் சொல்லி நடிக்க முடியவில்லை. “வேண்டா அத்தை! தண்ணீரிலே குளித்தேன். நன்றாக நீந்துகிறேன். பயமே இல்லை” என்றேன்.
“உடம்புக்கு ஆகுமா? சளி பிடித்துவிட்டால்?”
“ஒன்றும் பிடிக்காது. பூச்சி பூச்சி என்று பயந்து இருந்தால் பயன் இல்லை. துணிந்துவிட்டேன்” என்று சொல்லி முடிப்பதற்குள், கற்பகத்தின் சிரிப்பின் ஒலி கேட்டது.
“தண்ணீரிலே குளிப்பதற்குக்கூட ஒரு பெரிய துணிச்சல் வேண்டுமா என்று சிரிக்கிறாள்” என்று அத்தை விளக்கம் தந்தார்.
நானும் மெல்லச் சிரித்து எட்டிப் பார்த்தேன். புன்முறுவலோடு கற்பகம் போய்க் கொண்டிருந்தாள்.
மூன்று நாள் இருந்துவிட்டுப் புறப்பட்டபோது கற்பகத்தின் முகத்தில் மலர்ச்சி இல்லை. கண்களும் கலங்கியிருந்தன. அந்த நேரத்தில் தபால்காரன் ஒரு கவர் கொண்டு வந்து சாமண்ணாவிடம் கொடுத்தான். அதைப் பிரித்துப் பார்த்த அவர், “தமிழில் எழுதக் கூடாதா? எல்லாரும் சீமையில் பிறந்து வளர்ந்ததாக எண்ணிக் கொள்கிறார்கள். வேலு! இது என்ன, பார்த்துச் சொல்” என்று என்னிடம் கொடுத்தார்.
சந்திரனுடைய கல்லூரித் தலைவரிடமிருந்து வந்த கடிதம் அது. அவன் கால் தேர்வில் பெற்ற எண்களை எழுதி, படிப்புப் போதாது. அக்கறை கொள்ள வேண்டும் என்ற குறிப்பும் சேர்க்கப்பட்டிருந்தது. சாமண்ணாவிடம் சொன்னேன்.
அவர் ஒரு பெருமூச்சு விட்டார். என்னைப் பார்த்தார் “சரி, உனக்கு நேரம் ஆகுது. பணம்தான் தண்ணீர் போல் செலவு ஆகிறது; பயன் ஒன்றும் காணோம். அவனைப் பட்டணத்துக்கு அனுப்பிப் படிக்க வைத்ததே தப்பு. என்னவோ, இவ்வளவு படித்தானே, இன்னும் கொஞ்சம் படித்து முடிக்கட்டும் என்று அனுப்பினேன்” என்று சிறிது நேரம் தரையைப் பார்த்தார். மறுபடியும் என்னைப் பார்த்து, “நீயும் அவனோடு போய்ப் படித்துக் கொண்டிருந்தால் அவன் இப்படிக் கெட்டுப் போயிருக்கமாட்டான். மதிப்பெண்(மார்க்கு) இவ்வளவு குறைந்திருக்காது. எங்களுடைய போதாக் காலம், உனக்கு நோய்வர, நீ பரீட்சையில் தவறி விட்டாய். என் செய்வது? இந்த வருசம் நீ பரீட்சையில் தேறி, அடுத்த ஆனியில் நீயும் பட்டணத்துக்குப் போய்ப் படிப்பதாக இருந்தால்தான் அவனை அனுப்பிப் படிக்க வைக்கப் போகிறேன். இல்லையானால் நிறுத்திவிடப் போகிறேன்” என்றார்.
அதைக் கேட்டு என் மனம் உருகியது. என்ன சொல்வது என்று தெரியாமல் விடை பெற்றுப் புறப்பட்டேன்.
Comments
Post a Comment