தமிழர் மெய்யுணர்வுக்கொள்கை (தொடர்ச்சி)-சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 18 – தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 19
9. மெய்யுணர்வுக் கொள்கை (தொடர்ச்சி)
“பொருள்நிலை சீருறின் உலகப் பொல்லாங்கு எல்லாம் ஒழியும்” எனும் பொருளுரையைப் போற்றாதார் தம்மைப் போற்றாதாரே. எனவே, இதனை நன்கு வற்புறுத்தினர் சங்க காலப் பெரியோர்கள்.
“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினைக் கைம்மிக எண்ணுதி”
(குறுந்தொகை-63)
“இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும்புணர்வு இல்”
(நற்றிணை-214)
என உழைத்துப் பொருளீட்டாதார்க்கு ஒன்றுமே இல்லென உணர்ந்திருந்தனர்.
தம் வாழ்வுநலங்களைப் பெருக்கவே பொருளினை ஈட்டினும், பொருளின் பயன் அது மட்டுமன்று. அவ்வாறு கருதுவோர் வாழ்வின் பயனை அறியாதோரே.
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு” (குறள்-231)
என்றார் பொய்யாமொழியார். பொருளை ஈட்டிப் பெட்டியில் வைத்துப் பூட்டி மகிழ்வோர் இழப்பன பலவாகும். இவ் வுலகு முழுவதும ஆளும் அரசரே யாயினும், காட்டில் வேட்டையாடி வயிறு வளர்க்கும் வேடரேயாயினும் உண்ணல், உடுத்தல், பிற நலங்களைத் துய்த்தல் என்பனவற்றுள் ஒரே நிலையினரே. அக்கால வாழ்வு முறையின்படி – ஏன் இக்காலத்திற்கூட – உலகையாளும் அரசர் என்பதனால் ஒரு மூட்டை அரிசியை ஒரே வேளையில் உண்டல் இயலாது. யாவர்க்கும் அளவு நாழி அரிசிதான். உடுப்பதற்குக் கீழ் ஒர் ஆடை; மேல் ஓர் ஆடை. மணத்தலும் மக்களைப் பெறுதலும் பிறரைப் போன்றுதான் அரசனுக்கும். ஆகவே, எல்லோரும் ஓர் நிலை என்பதனை உணர்ந்து, பெற்ற செல்வத்தைப் பிறர்க்கு ஈதல் வேண்டும் என்ற மெய்யுணர்வைப் புலவர்கள் பரப்பி வந்தனர்.
“தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே” (புறநானூறு -189)
இவ்வாறு ஈதற்குப் பயன்படும் செல்வத்தை உழைத்து ஈட்டாது பிறரை இரந்து வாழ்வோர் அன்று
மிருந்தனர். ஈதல் வேண்டுமென்றால் இரப்போர் இருந்துதானே ஆகவேண்டும். ஈதலறம் செய்வதற்காக இரந்து வாழுங் கூட்டத்தை உருவாக்குதல் நன்றாகுமோ? ஈதல் சிறப்பிக்கப்படும் பொழுது இரத்தலும் சிறப்பிக்கப்பட்டுத்தானே ஆகவேண்டும். இரத்தலை ஊக்குவிக்கும் மெய்யுணர்வு ஏற்றமுடைத்தன்றே. ஆதலின் திருவள்ளுவர்,
“நல்லா றெனினும் கொளல்தீது; மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று,” (குறள்-222)
என இரத்தலின் தீமையையும் ஈதலின் நன்மையையும் எடுத்து மொழிந்தார்.
“ஈதலும் வேண்டும்; இரத்தலும் கூடாது என்பது முரண்படுகின்றதே. இரப்போரின்றி ஈதல் நிகழ்தல் எவ்வாறு?” என வினவலாம். ஆம்; ஈதலுக்கு இரப்போர் வேண்டும்தான். இழித்துக் கூறப்படும் இரத்தலைச் செய்து வாழ வேண்டியவர்களும் உளர். அவர்கள் “காணார், கேளார், கால் கை முடப்பட்டோர், பிணி நடுக்குற்றோர்” முதலியோர் ஆவார்கள், தம்மால் உழைத்து வாழ முடியாதவர்க்கு உதவ வேண்டியது உடையோர் கடனன்றோ? ஆதலின், அவரை நாடி ஈதல் வேண்டும்.
இரத்தல் இழிவுதான்; ஆனால் ஒருவர் இரக்குங்கால் ஈயாமல் இருத்தல் அதனினும் இழிவாகும். கொடுத்தல் உயர்வுதான்; ஆனால், ஒருவர் வலியவந்து கொடுக்குங்காலும் கொள்ளேன் என்றல் கொடுத்தலினும் உயர்வாகும். இவை வாழ்வியலில் உயர்வுபெற விரும்புவோர் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள். இரத்தல் கூடாது என்பதனை இரப்போன் அறிதல் வேண்டுமேயன்றி, ஈயும் நிலையில் உள்ளோர் ஈயாது இருத்தல் கூடாது. கொடுப்பதன் உயர்வையறிந்து உடையோர் கொடுக்க வருங்கால் கொள்வதன் இழிவை யறிந்து வேண்டா என மறுத்தல் கொடுத்தலினும் உயர்வுடையதாய் விடும். இவ் வுண்மைகளைக் கழைதின்யானையார் எனும் பெரும் புலவர் அழகுறக் கூறியுள்ளார்.
“ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” (புறநானூறு -204)
உடைமையும் இன்மையும் உலகில் உள்ளவரை ஈதலும் இரத்தலும் இருந்துதான் ஆகும். ஆயினும் என்றும் ஈதல் நன்றுதான்; இரத்தல் தீதுதான். இன்று நாட்டுக்கு நாடு ஈதலும் இரத்தலும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. இரத்தல் கூடாது என்று சட்டமியற்றிய நாடுகள்கூடப் பிற நாட்டுக்கு ஈதலும் பிற நாடுகளிலிருந்து (இரத்தலும்) கொள்ளலும்ஆற்றிக்கொண்டுதான் உள்ளன. ஈயும் நாடு உயர்வாகவும் இரக்கும் நாடு தாழ்வாகவும் மதிக்கப்படும் நிலை இல்லாமலும் இல்லை.
“பொருளல்ல வரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்” (குறள்-751)
எனப் பொருளின் இன்றியமையாமையை யறிந்து பொருளீட்டலைச் செய்தனராயினும் காதல் வாழ்வில் பொருளுக்கு முதன்மையளித்திலர். பொருளீட்டலும் காதல் துய்த்தலும் ஒருங்கே நிகழ முடியாத காலத்தில் காதலே பெரிது என்று கருதிப் பொருளீட்டலைப் புறத்தே தள்ளும் கொள்கையும் உருவாகியுள்ளது.
“நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இழிவும் உடைய துயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சிய தருமையும்“
(தொல்காப்பியம் : பொரு.41)
அறிந்திருந்த காதலர் பின்வருமாறு எண்ணினர்:
“சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உளநாள்
ஒரோஒ கைதம்முள் தழீஇ ஒரோஒகை
ஒன்றன்கூ றாடை உடுப்பவரே யாயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ
சென்ற இளமை தரற்கு.” (பாலைக்கலி-17)
காதலின் முன் செல்வம் மதிப்பிழந்துவிட்டது. இளமை
யின் முதன்மையும் அதன் நிலையற்ற தன்மையும் இவ்வாறு எண்ணுமாறு செய்துவிட்டது. ஆயினும், தம் முன்னோர் ஈட்டிய பொருளே துணையாக வாழ்ந்து மேலும் பொருளீட்டாது வறுமைப்படும் இளிவரல் வாழ்க்கையை வெறுத்தனர். இருக்கும் பொருளைச் செலவழித்துக் கொண்டிருப்போரை இறந்தோராகவே கருதினர். “வினையே ஆடவர்க்கு உயிர்” என்று எண்ணி வாழ்ந்த மக்கள் அவ்வாறு கருதியதும் இயல்புதானே? ஆதலின்,
“உள்ளது சிதைப்போர் உளர்எனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு”
எனும் மெய்யுணர்வு மேலோங்கி நின்றது. பொருளின் சிறப்பறிந்து வாழ்ந்து அதனை ஈட்டி வாழ்ந்த மக்கள்,
“நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு“ (குறள்-336)
என்னும் உண்மையையும் அறிந்திருந்தார்கள். ஆதலின் என்றும் நிலைத்து இருக்க முடியாத உலகில் நிலைத்த ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற கொள்கை பலராலும் வற்புறுத்தப்பட்டது. உலகம் முழுதும் ஒரு குடைக்கீழ் ஆண்ட பெருமன்னரும் ஒரு நாள் இறப்பது உறுதி என்னும் பேருண்மையை நன்கு அறிந்திருந்தனர்.
“இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடையிலை நடுவணது இடைபிறர்க் கின்றித்
தாமே யாண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடு பதியாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
……… ………. ………. ……..
உடம்பொடு நின்ற உயிரு மில்லை.” (புறநானூறு -363)
என்ற உணர்வு வாணாளை வீணாளாக்காது உரையும் பாட்டும் பெறும் புகழொடுபட்ட செயற்கரும் செயல்களைச் செய்யத் தூண்டியது. எவ்வளவு சிறக்க வாழ்ந்தாலும் அவ் வாழ்வு தாம் வகுத்துக் கொள்ளும் சீர்பட்ட முறையால் உண்டாகும்.
“நல்லா றெனினும் கொளல்தீது; மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று,” (குறள். 505)
ஆக இருப்பதனால் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என அறிந்து, பிறரை “நோதலும் தணிதலும்” இன்றிச் “சிறியோர் என இகழ்தலும் பெரியோர் என வியத்தலும்” இலராய்த் “தமக்கென வாழாப் பிறர்க்குரி யாளர் உண்மையான்” உலகம் என்றும் உண்டு என்ற மெய்யுணர்வை நன்கு பெற்றிருந்தனர். மெய்யுணர்வு பெற்ற ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் ஒவ்வோர் ஊரிலும் இருந்தனர்.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
Comments
Post a Comment