Skip to main content

தமிழர் கடவுட் கொள்கை – சி.இலக்குவனார்

 அகரமுதல




(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  16 –  தொடர்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  17

8.கடவுட் கொள்கை

சங்ககாலத் தமிழ் மக்கள் உயர்பண்பாடு உடையவர்கள் என்பதனை அவர்கள் கொண்டிருந்த கடவுட் கொள்கையும் நன்கு நிறுவும். ‘கடவுள்’ என்னும் சொல்லே அவர்கள் கடவுளைப்பற்றிக் கொண்டிருந்த கருத்தினை நன்கு விளக்கும். ‘கடவுள்’ என்றால் “உள்

ளத்தைக் கடந்தது” என்பதாகும்.  உள்ளத்தாலும் உணர இயலாத இயல்பினது ‘கடவுள்’ என்பதுதானே கடவுளைப்

பற்றிய உண்மைக் கொள்கையாகும்.  இதனை நன்கு தெளிந்திருந்தனர் என்பதனைக் கடவுள் எனும் சொல் தெற்றெனப் புலப்படுத்துகின்றதன்றோ?

                ஆகவே, சங்கக்கால மக்கள் அச்சத்தால் பாம்பையும் மின்னலையும் இடியையும் பேயையும் வழிபட்டனர் என்னும் கூற்று உண்மையொடு பொருந்தாதாகின்றது.  கடவுளை அருவப் பொருளாகவே அறிந்து என்றும் கடவுள் உணர்வுடையவர்களாகவே வாழ்ந்தார்கள்.  கடவுட் கொள்கைக்கு மாறான கொள்கையை அவர் அறியார்.

                யாவரும் இவ் வுலகில் உயிர் வாழ்வதற்கு உணவே இன்றியமையாதது என்பதனை அறியாதார் இலர்.  உணவுக்குப் பிறகுதான் ஏனைய. ஆயினும் சங்ககாலத் தமிழ்மக்கள் உணவினும் முதன்மையாகக் கடவுளைக் கருதி வாழ்ந்தனர்.  ஒல்காப் பெரும்புகழ்த் தொல்

காப்பியத்தில் பாடற்பொருள். முதல், கரு,உரி என வகுக்கப்பட்டுள்ளது. 

கருப்பொருள் பற்றிய நூற்பா :

“ தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை

 செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

 இவ்வகை பிறவும் கருவென மொழிப” 1

என அமைந்துள்ளது.  இதில் உணவுக்கு முன்பு தெய்வத்தை வைத்துள்ள சீர்மையை ஓர்ந்து ‘உணவினும் தெய்வமே முதன்மையாகப் போற்ற வேண்டிய ஒன்று’ என்று அன்று கருதியிருந்தனர் என்பதனைத் தெளியலாம்.

இன்னும் முதற் பொருளாம் நிலம்பற்றிக் கூறவந்தவிடத்து நிலத்துக்குரிய பிற சிறப்புகளை விடுத்துக் கடவுட் சிறப்பையே தொடர்புபடுத்திக் கூறியுள்ளமையாலும் கடவுள் கொள்கைக்கு அக்கால மக்கள் வைத்திருந்த ஏற்றத்தை எளிதே அறியலாம்.  கடவுளை வாழ்த்தியும் வணங்கியும் வழிபட்டார்கள்.

++++

தொல்காப்பியம், பொருளதிகாரம் -18.

++++

கடவுளை உள்ளங்கடந்த உரைக்கு அப்பாற்பட்ட அருவப் பொருளாகக் கருதிய போதினும், அதற்குப் பல்வேறு உருவங்களைக் கற்பித்துப் பல்வேறு வடிவங்களில் பல்வேறு முறைகளில் வழிபட்டனர்.  தம் குறை அகலவும் பிறர் குறை நீங்கவும் கடவுளைப் போற்றியுள்ளனர்;  பூவும் நெல்லும் படைத்தும் பரவியுள்ளனர்.  மக்களின் அறிவுநிலை பண்புநிலை முதலியவற்றிற்கு ஏற்பக் கடவுள் வழிபாட்டு முறையும் அமைந்துள்ளது.

தொல்காப்பியர் காலத்தில் கடவுளைக் குறிஞ்சிநில மக்கள் ‘சேயோன்’  என்றும், முல்லைநில மக்கள் ‘மாயோன்’ என்றும், மருதநில மக்கள் `வேந்தன்’ என்றும் நெய்தல் நில மக்கள் ‘வண்ணன்’அல்லது ‘வருணன்’ என்றும் அழைத்துள்ளனர் என்று முன்பு சுட்டிக் காட்டினோம்.  வெற்றி பெறுவதற்குத் துணை புரியும் கடவுள் ‘கொற்றவை’  என்று கூறப்பட்டுள்ளது.  ‘கொற்றம்’ என்றால் ‘வெற்றி’ – கொற்றத்திற்குரியள் கொற்றவையானாள்.  கடவுளைப் பெண்ணாக வழிபடும் முறை தமிழகத்திற்கே உரித்து என்பர்.

தொல்காப்பியம் தோன்றி ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்குப் பின்னர் வந்த உரையாசிரியர்கள் வடமொழி நூல்களைக் கற்றதன் பயனால் மாயோனைத் திருமால் என்றும், வேந்தனை இந்திரன் என்றும், வண்ணனை மழைக் கடவுளாம் வருணன் என்றும், கொற்றவையைத் துர்க்கை என்றும் அறிவித்தனர்.  ஆனால், பழந்தமிழர்கள் கடவுள் ஒருவரே என்றும் அவருக்குப் பல்வேறு பெயர்கள் உண்டு என்றும் அறிந்திருந்தனர்.  காடு இடையிட்டும் மலை இடையிட்டும் கடலிடையிட்டும் பிரிக்கப்பட்டு வாழ்ந்த மக்கள்  அவரவர் உணர்ச்சி நுகர்ச்சிகட்கேற்பக் கடவுளுக்குப் பெயரிட்டனர்.  பின்னர் வடமொழிப் புராணங்களும் சமய வெறியும் ஏற்பட்டு ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு கடவுளைக் குறித்ததாகக் கொண்டு தத்தம் கடவுள் பெயரால் போரிட்டுக் கொண்டனர்.  சங்க காலத்தில் இந்த அவல நிலை இல்லை.  ஒரு குறிப்பிட்ட சமயமும் அதற்குரிய தனி அடையாளங்களும் வழிபாட்டு முறைகளும் இருந்தன என்று கூறுவதற்குரிய சான்றுகள் இல.

தொல்காப்பியத்தில் கூறப்படாத பெயர்கள் அதற்குப் பின்னர்த் தோன்றிய சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுகின்றன.

திருக்குறளில் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் முதலிய பெயர்கள் கடவுளைக் குறிக்க வந்துள்ளன.  இவையெல்லாம் கடவுளின் இயல்பு, பண்பு, ஆற்றல் அடிப்படையில் தோன்றியுள்ளன.  இப் பெயர்களுட் சில புத்தமதத் தலைவரையும் சமண மதத் தலைவரையும் குறிக்கும் பெயர்களோடு ஒப்புமையுடையனவாய்க் காணப்படுவதனால் “ சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள்இது வென்ற” திருவள்ளுவரை இச்சமயங்களுக்கு உரியவராக்கி இப் பெயர்கள் தம் சமயக் கடவுளையே குறிக்கும் என்று  முழங்குவர். தொல்காப்பியரையும் பௌத்தர் அல்லது சமணராக்குவர் சிலர்.

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் புத்த சமண சமயங்களுக்கு உரியவர் அல்லர் என்பதனை அவர்கள் நூல்களே தெளிவுற அறிவுறுத்துகின்றன.  தொல்காப்பியர் அவ் விரண்டு சமயங்களும் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றியவர்.  திருவள்ளுவரோ சமயச் சார்பற்ற கடவு

ளுணர்வோடு கூடிய ஒழுக்கமுறை வாழ்க்கையை உலகுக்குக் காட்டியவர்.  பௌத்தராகவோ சமணராகவோ இருந்திருப்பின் தம் நூலை இவ்வாறு சமயச் சார்பற்றதாய் இயற்றியிருக்கமாட்டார். ஆகவே, திருவள்ளுவர் காலம் வரை தமிழர் சமயம், கடவுட்கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறையாகவே இருந்துள்ளது.  பின்னரும் கி.பி. முதல் நூற்றாண்டு வரையும் அவ்வாறே இருந்தபோதிலும் கடவுள்பற்றிய கதைகளில்  பயின்றுள்ள பெயர்களும் வழக்கில் இருந்துள்ளன.  அருவமாய், உள்ளத்திற்கும் எட்டாது உரை கடந்து நின்ற ஒரே கடவுள் நால்வராக உலகம் காப்பதாகக் கருதப்படும் நிலை உருவாகிவிட்டது. 

“ஏற்றுவல னுயரிய எரிமருள் அவிர்சடை

 மாற்றரும் கணிச்சி மணிமிடற் றோனும்

 கடல்வளர் புரிவளை புரையும் மேனி

 அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்

 மண்ணுறு திருமணி புரையும் மேனி        

 விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்

 மணிமயில் உயரிய மாறா வென்றிப்

 பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என

 ஞாலங் காக்கும் கால முன்பில்

 தோலா நல்லிசை நால்வர்”        (புறநானூறு-56)

என நக்கீரனார் கூறியுள்ளார்.

இக் கூற்றில் உருவம் பெற்றுள்ள நான்கு கடவுளர்களும் அவரவர்க்குத் தனித்தனி நிறம், ஊர்தி, கருவி, கொடி முதலியனவும் காண்கின்றோம்.

மணிமிடற்றோனை நீலகண்டன் என்றும், பனைக்கொடியோனைப் பலராமன் என்றும், விறல்வெய்யோனைத் திருமால் என்றும், ஒண்செய்யோனை முருகன் என்றும் மக்கள் அழைத்தள்ளனர் என்று உய்த்துணரலாம்.

தொல்காப்பியத்தில்  (எழுத்து-உயிர்மயங்கியல் நூற்பா-83) பனையும் கொடியும் சேருங்கால் உண்டாகும் ஒலி மாறுதல்பற்றிக் கூறப்பட்டுள்ளது. ‘ பனைக்கொடி’ என்பது தொல்காப்பியர் கால வழக்காயின் பனைக்கொடியோன் எனக் கடவுள் அழைக்கப்பட்ட வழக்கும் அன்று முதலாக இருந்திருக்க வேண்டும்.  ஆகவே, கடவுளை அருவப் பொருளாகவே கருதிக் கற்றோர் வழிபட்ட போதிலும் பொதுமக்களிடையே உருவக் கடவுட் கொள்கையே உரம் பெற்றிருந்தது என்று உணரலாம்.  உருவக் கடவுட்கொள்கையே அருவக் கடவுட் கொள்கையினும் தொன்மை வாய்ந்ததாகும். 

தொடக்க காலத்தில் உருவக் கடவுட்கொள்கையைக் கொண்டிருந்த மக்கள் படிப்படியாகப் பண்பட்டு உணர்ச்சியால்தான் கடவுளின் அருவ இயல்பை அறிந்திருக்க வேண்டும். எனவே, இருவகை வழிபாட்டு முறையும் நிலவியதில் வியப்பில்லை.  “ கடவுள் ஓருருவம்  ஒரு நாமம் ஒன்றுமிலார்” ஆயிடினும் அவர்க்கு உருவமும் பெயரும் கொடுத்து மக்கள் நிலைக்குக் கொண்டுவந்து வழிபடுதலே இனியதும் எளியதும் ஆகுமெனப், பழந்தமிழர் கண்டனர்.  அதனாலேயே கோயில்கள் தோன்றின.

முருகனுக்குரிய முதன்மையான கோயில்கள் ஆறு பற்றித் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் அழகுறக் கூறியுள்ளார்;  முருகனைப் பல்வேறு முறைகளில் வழிபட்ட நெறியையும் ஆங்காங்கு இயம்பியுள்ளார்.  பிறவடிவுகளில் வழிபட்ட செயல்முறை பற்றிப் பிற்கால இலக்கியங்களில் பெரிதும் காணலாம்.  ஆனால், முருகனை வழிபட்ட முறைபற்றித்தான் சங்க இலக்கியமாம் திருமுருகாற்றுப்படையில் விரித்துக் கூறப்பட்டிருப்பதால் கடவுளுக்கு முதலில் இடப்பட்ட பெயர் முருகன் என்றும் அவனை வழிபட்ட முறையே தொன்மையான தென்றும் உணரலாகும்.  முருகனை மலைப்பகுதிக்குரிய கடவுள் என்பர்.  கடலால் சூழப்பட்டிருந்த உலகில் முதலில் வெளிப்பட்டது மலைப்பகுதியே யாகும் என்பர்.  ஆதலின், ஏனைய முல்லை (காடு), மருதம் (வயல்), நெய்தல் (கடற்கரை) பகுதிகளிலும் குறிஞ்சி (மலை)ப் பகுதியே மக்கள் தோற்றத்தின் முதலிடமாகும்.  அங்குத் தோன்றிய முதற்கடவுளே முருகன்.

‘முருகு’ என்னும் சொல்லுக்கு இளமை, அழகு, மணம் முதலிய பல பொருள்கள் உள. ‘முருகன்’ எனில் இளைஞன், அழகன், மணமுடையோன் எனும் பொருள் தரும்.  இளமை, அழகு, மணம் இவற்றை விரும்பாதார் யார்? பழந்தமிழர் இவற்றில் பெருவிருப்புடையோராய் இருந்தமையால் தாம் வழிபட எண்ணிய கடவுளுக்கும் இவை இருத்தல் வேண்டும் என்று கருதினர் போலும். மக்களின் கருத்துக் கேற்பவே கடவுள் வடிவம் அமைவது இயல்பு.

கடவுளை ஆண்பால் முருகனாக அமைத்துக் கொண்டதிலிருந்து அக்காலத்தில் ஆண்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது என்பதும், ஆணினமே தலைமை தாங்கி மன்பதையை நடத்திச் சென்றது என்பதும் அறியப்படும்.  பெண்களின் மதிப்பு உயர்ந்து அவர்களை நாடு கொண்டாடத் தொடங்கிய காலத்தில்தான் பெண்வடிவிலும் கடவுளை வழிபடத் தொடங்கி இருப்பர்.  தொல்காப்பியர் காலத்தில் இருவகை வடிவிலும் கடவுளைப் போற்றினர்.  ஆனால், ஒரே வடிவில் இருபால்களையும் (ஆண், பெண்) கொண்ட உமையொருபாகர் வழிபாடு அவர் காலத்தில் இருந்திலது போலும்.  பின்னர்க் கடவுளுக்கும் கணவன் மனைவி மக்கள் முதலிய உறவு முறைகளைக் கற்பித்தனர்.  கற்பித்துச் சொல்லும் ஆற்றல் மிக மிகக் கடவுளைப்பற்றிய பல கதைகளைக் கற்பித்து மக்களிடையே பரப்பினர்.  சங்க காலத்தில் இக் கதைகளும் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன.  பண்புகளைப் பண்பிகளாக உருவகப்படுத்திச் சொல்லும் முறையாலும் கடவுட் கதைகள் வளரலாயின. ஆயினும் “கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண் டாடும் கண்மூடி வழக்கம்” காழ்கொண்டிலது.  கோயில்களும் விழாவும் பூசைமுறைகளும் மிகுந்திருந்த போதிலும் புரோகித முறையும் வேற்று மொழி மந்திரமும் தலைகாட்டவில்லை.  கடவுளின் அருவ இயல்பில் ஆழ்ந்து உருவ இயல்பைக் கொண்டாடிச் சங்க கால மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தனர்.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்