Skip to main content

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு! – பெ.அ. இளஞ்செழியன்



தமிழியக்கத் தலைமைப் போராளி பேராசிரியர் இலக்குவனாருடன்  என் முதல் சந்திப்பு!

05.02.1967

1.மீசைவைத்த இலக்குவனார்
அடடா,அந்த
மேதையின்மேல் எனதுள்ளம்
வைத்த அன்போ,

ஓசைவைத்த கடலினும்
பெரிய தாகும்!
உண்மைவைத்த நெஞ்சுடையார்
தமிழ்மேல் அன்னார்

ஆசைவைத்த தைப்போலே
வைத்த வர்,யார்?
ஆவியையே தமிழ்மேலே
வைத்த செம்மல்!

மாசைவைத்த மனமுடையோர்
அவர்மேல் இங்கே
மாறிமாறி வைத்ததுன்பம்
மலைநி கர்க்கும்!

2.நாடகப்பே ராசிரியர்
என்றன் ஆசான்
நடராச னார்க்கே, யாம்
விழாஎ டுத்தோம்!

பாடுபுகழ் கல்லக்குடி
என்னும் ஊரில்!
பாராட்டிப் பேசுதற்கே
கி.ஆ. பெ.வி.

நாடுபுகழ் இலக்குவனார்
இருவ ரையும்
நல்லதொரு மகிழுந்தில்
அழைத்துச் சென்றேன்!

ஓடுமணிப் பொழுதெனக்குத்
தெரிய வில்லை!
உரையின்பப் படகினிலே
பயணம் செய்தோம்!

3.இலக்குவனார் சந்திப்பும்
திருச்சி யில்தான்!
எனதழைப்பை ஏற்றந்த
மான வேங்கை,

கலக்கவந்த மேடையினை
என்ன சொல்வேன்?
கருத்துமணிச் சொற்பொழிவைப்
படைத்தார் அங்கே!

‘இலக்கியனார்’ என்றவரை
அழைத்தால் என்ன?
எழுச்சியுரை ஆற்றுவதில்
இமயம் ஆவார்!

இலக்கணமாய் வாழ்ந்திருந்தார்!
அவர்என் றைக்கும்
இலக்கியமாய் வாழ்ந்திருப்பார்
தமிழர் நெஞ்சில்!

4.மடல்தொடர்பும் அவருடன்நான்
வைத்தி ருந்தேன்!
மடைதிறந்த வெள்ளமவர்
கவிதை ஓட்டம்!

கடல்நிகர்த்த பேரறிஞர்
அண்ணா மீது,
கவிதைவரைந் தனுப்பிவைத்தார்
என்’மு கில்’க்கே!

அடலேறாய் அவரைத்தான்
பார்த்தோம் நாமே!
அனல்காற்றாய் எழுதியவர்
தமிழைக் காத்தார்!

தொடமுடியா அறிவு வானம்
அவர்என் பேன்நான்!
தூயவர்என் மனவானில்
நிலவாய் ஆனார்!

0+0+0

நண்பர்களுக்கு, நன்றியுடன்
நல்வணக்கம்.
இராம.நடராசனார், கல்லக்குடி உயர்நிலைப் பள்ளியில் அன்பால் அறிவால் ஆற்றலால் நாடகப் படைப்புத் திறனால் ஆசிரியர் மாணவர் அனைவர் உள்ளங்களிலும் அரியணை போட்டு வீற்றிருந்தவர். சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள் எழுதி, அனைத்தையும் மேடையேற்றியவர். நடிகை மனோரமா போன்றவர்கள் கல்லக்குடி வந்து, அவர் நாடகங்களில் நடித்திருக்கிறார்கள். எனவே  கல்லக்குடி   பள்ளியில் படித்த பழைய மாணவர்களாகிய நாங்கள்  கல்லக்குடியில் ஆசிரியர்  நடராசனார்க்குப் பாராட்டுவிழா நடத்தி,”நாடகப் பேராசிரியர்”என்ற விருதினை முத்தமிழ்க்காவலர் திருக்கரத்தால் அவருக்கு  வழங்க வைத்தோம்.
அப்போது திருச்சியில் நான் இருந்தேன். நானும் என்னுடன் படித்த என் கெழுதகை நண்பர் வெ.இராமுலு அவர்களும் பெருமுயற்சி மேற்கொண்டு, நடராசனார் பாராட்டுவிழாவைப் பலரும் பாராட்டும்படி நடத்தினோம். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களுடன்  நான் நன்கு பழகிக் கொண்டிருந்தவன் என்ற முறையில், அவரிடம் நேரில் சென்று விழாவிற்கு அவர் இசைவைப்  பெற்றேன். திருச்சியில்  அவர்  வீட்டுக்கும் நான் குடியிருந்த வீட்டுக்கும் இடையில் இருந்த தூரம் 200 அடிகள்தாம்! நான் குடும்பத்துடன் இருந்த இடம், திருச்சி பெரிய தெருவிலிருந்து பிரியும் பெரிய செளராட்டிரா தெரு! முத்தமிழ்க் காவலரின் இல்லம், அங்கிருந்து தொடரும் தையல்காரத் தெரு! அடிக்கடி அவரைப் பார்க்கச் சென்று, அமர்ந்து உரையாடி, அவரிடமிருந்து நிறையக் கற்றுத் திரும்புவேன்! அவர்தான் தமிழ்! தமிழ்தான் அவர்!
அப்போது ‘இந்தி எதிர்ப்புப் போரின் தந்தை’ எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்று வந்த பேராசிரியர் சி.இலக்குவனார், மீண்டும் இந்தியப்பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு விடுவிப்பிற்குப் பின்னர் மதுரையில் இருந்து குறள்நெறி இதழை நடத்திக் கொண்டிருந்தார். பேராசிரியர் இலக்குவனார் அவர்களிடம் மடல்வழியாக இசைவு பெற்றேன். இலக்குவனார் முதல்நாள்  இரவே திருச்சி வந்து விடுதியில் தங்கியிருந்தார்.
பெருமகனார் இருவரையும் திருச்சியிலிருந்து மகிழுந்தில் கல்லக்குடிக்கு அழைத்துச் சென்ற  அனுபவமே    ஒரு  தனிச்சுவை! புதுச்சுவை! சிறப்பான அந்த விழாவிற்குச் சிகரம் வைத்ததுபோல், எனது கைவண்ணத்தில் தாள்மலர் ஒன்றையும் தவழவிட்டேன். நான் முதன்முதல் உருவாக்கிய முத்துமணி மலர் அதுதான்.
நடராசனாரின் நாவிலும் நெஞ்சிலும் நான் நடமாடும் உருவமாக இருந்தேன். அப்படி என்னை நேசித்தார்! என் எழுத்துகளை வாசித்தார். சென்னையில் எனது வீட்டிற்கு வந்து, என்னுடன் தங்கியிருந்து ஆசிரியர் மாணவருக்கான இடைவெளிக்கப்பால் என்னைப் பெரிதும் மதித்துப் பழகிய ஏந்தல் அவர்!
நான் மறக்கவே முடியாத மலை மாணிக்கம் அவர்!
ஆசிரியரானால் அவர்போல் ஆசிரியர் ஆகவேண்டும்! வாழ்க அவர் புகழ்!
ஆசிரியப்பெருந்தைகயைச் சிறப்பிக்கும் வாய்ப்பில் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரைச்சந்திக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது நான் பெற்ற பெரும்பேறு. அவரது புகழ் நினைவில்     மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்