Skip to main content

தரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்

அகரமுதல

தரணி ஆளும் தமிழ் 


உலகறியும் மொழிகளிலே தமிழ் மொழிபோல்
உயர்தனிச்  செம்மொழி வேறில்லை !
இலக்கண இலக்கிய வரலாற்றோடு
இலங்கும் தமிழுக்கிணை ஏதுமில்லை !

பொதிகை மலைச் சாரலாய்ப்  புவிமீது
பார்போற்ற வாழும் மொழித் தமிழாகும் !
வாழ்வியலாம் வள்ளுவத்தில் நிலைபெற்று
வான் போற்றும் தமிழெங்கள் அமுதாகும் !

சங்கம் வளர்த்த மாமதுரை வீதியெங்கும்
அங்கமாய்த் தமிழ்த்தூண்கள் அரணாகும் !
மூவேந்தர் புகழ் பாடிப்  பாரெங்கும் 
முத்தமிழே இனி எங்கள் உரமாகும் !

வரிவடிவத் தமிழின் தொன்மைக்குச் சான்றாகி 
வைகையாற்றுத் தமிழர் நாகரிகமாய்க்  கீழடி !
உலகின் முதல் மொழித் தமிழென்று 
உணர்த்துகின்ற அகழாய்வே எங்கள் தாய்மடி !

ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட திருக்குறளே
இணையிலா உலகப் பொதுமறை !
ஓராயிரம் ஆண்டுப் பழமை உரைக்கின்ற
ஆத்திச்சூடி நாமறிந்த திருமறை !

பிராமி வடிவம் தமிழுக்கு மூலமென
மாங்குளத்துக்  கல்வெட்டு விளக்கியது !
இன்றளவும் ஒலிவடிவம் வரிவடிவம் காத்து
குன்றமென நின்றே தமிழ் துலங்கியது !

தமிழைப்போல் இனிதான மொழி வேறில்லையென 
தரணிக்கு எடுத்துரைத்தான் நம் மகாகவி !
தமிழெங்கள் உயிருக்கு நேரென்று நெஞ்சுயர்த்தி
அமுதமொழித் தமிழ்தான் என்றான் புரட்சிக்கவி !

உலகெங்கும் கால்பதித்த தமிழரின் மேன்மை
பலகாலம் பறைசாற்றும் தமிழின் மாண்பை !
தன்னிலிருந்து மலர்ந்த சொல் தம்இழ்  
தரணி ஆளும் தமிழுக்கு மகுடமாகும் !

கவிச்சுடர் கா..கல்யாணசுந்தரம் , சென்னை  600100 
9443259288

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்