அவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்
அகரமுதல
அவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள்
வெட்டவெளிப் பொட்டலிலும்
வேக்காடு வேனலிலும்
கொட்டும்மழை குளிரினிலும்
கொடுநோயின் பிடியினிலும்
வட்டமிட்டே உழைத்தாலும்
வாழ்நாள் முழுவதிலும்
தட்டுக்குச் சோறின்றி
தடுமாறும் உழைப்பாளி!
எட்டு மணிநேரம்
என்பதெலாம் பொய்ச்சட்டம்
கிட்டும் நேரம்வரை
கிழட்டுப் பருவம்வரை
திட்டமிட்டே உழைக்கின்ற
தேசத்தின் முதுகெலும்பு
பட்டம்பதவி விரும்பாத
பாசத்தின் அச்சாணி
இங்கே…
வருக்க பேதங்கள்
வாதங்கள் மாறியதா?
சொர்க்கம் நரகமென்ற
சோதனைகள் குறைந்தனவா?
இருப்போர் இல்லாதோர்
இரண்டுநிலை மாறியதா?
கற்போர் கல்லாதோர்
கல்விபேதம் அழிந்ததுவா?
கொரோனா கூட இன்று
கொள்ளைநோய் என்றாலும்
இருப்பவர்க்குப் பெரிதாக
இன்னல் தரவில்லை
இருப்பு இருப்பதனால்
இல்லத்தில் இருந்திடுவார்
விருப்பப் பட்டதையும்
வாங்கித் தின்றிடுவார்
அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லாடும் தினக்கூலி
பஞ்சாய் அலைகின்ற
பாவநிலை காண்கையிலே
நெஞ்சு பதைக்கிறதே
நினைவு வதைக்கிறதே
வஞ்சகமாய் வந்திட்ட
மகுடையே விடை கூறு!
நீ விடை வைத்திருப்பாய்..
மாடமாளிகை உயர்ந்தது
மனிதன் உயரவில்லை
கூடகோபுரம் வளர்ந்தன
கொள்கை வளரவில்லை
பாடங்கள் கூடின
பண்புகள் கூடவில்லை
வேடங்கள் பெருகின
வெள்ளையுள்ளம் பெருகவில்லை
ஆயுதம் கண்டனர்
அகிம்சை காணவில்லை
மாயவித்தை கண்டனர்
நேயவித்தை காணவில்லை
அறிவியல் வளர்த்தனர்
ஆன்மநேயம் தளர்த்தினர்
நெறிமுறை பிறழ்ந்ததால்தான்
நான்இங்கு வந்தேன்என்று
உரிய விடை கூறாதே
ஓடிவிடு மகுடையே
வறியவராய் உழைப்பவரை
வாட்டி வதைக்காதே!
உழைப்பினிலே பேதமில்லை.
உழைப்போம் ஒன்றுபடுவோம்
மகுடை இல்லாத தேசத்தில்
விரைவில் கரம்கோப்போம்
Comments
Post a Comment