தோழா கலங்காதிரு! – சி. அன்னக்கொடி
அகரமுதல
தோழா கலங்காதிரு
தோழா
விடிகாலைப்
பொழுது
நமெதென எழுந்திரு
தோழா!
சோதனைகள்தான்
புதுசா தோழா
வேதனைகள்தான்
பழசா தோழா
வியர்வை சிந்தி
உழைத்திடும்
நமக்கு வேலையில்லை
என்பதைவிட
வேறென்ன கவலை
தோழா!
அடுப்பங்கரையில்
எலியும்
அடுப்பில்
துரு ஏறியிருப்பதைவிட
வேறென்ன கவலை
தோழா!
வயிறொன்று
இருப்பதை
அறியாமல்
நீரற்ற வெறுங்குடத்தை
எட்டிப் பார்ப்பதைவிட
வேறென்ன கவலை
தோழா!
தோள்கள் இரண்டும்
உழைப்பிற்காய்
தினவெடுத்து
திரிகின்றன
என்பதைத் தவிர
வேறென்ன கவலை
தோழா!
இல்லாள்
மையிடாமல்
மலர்சூடாமல்
இருக்கிறாள்
என்பதைவிட
வேறென்ன
கவலை தோழா!
உயிர் வாழ்வதற்காய்
ஒரு பொட்டலத்துக்காய்
காத்திருப்பதைவிட
வேறென்ன கவலை
தோழா!
சோதனைகள்தான்
புதுசா தோழா.
வேதனைகள் தான்
பழசா தோழா.
காரிருள் அகல
கதிரவன் வருவான்
கவலையைவிடு
தோழா!
Comments
Post a Comment