அகல் விளக்கு – மு.வரதராசனார்: 6
அந்தச் சிற்றூருக்கு அலுவலர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; ஊரார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், “அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா? நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா? நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ஆட்டக்காரிகளையும் குதிரைப் பந்தயங்களையும் பிடித்துக்கொண்டு அலைகிறோமா?” என்பார்கள். “நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா? கடலுக்குப் போனாலும் அந்தப் பெரிய அலைகளில் நீந்திப் பிழைக்க முடியுமா? புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாய் முடியும்” என்று சாமண்ணா ஒரே அடியாய் மறுத்துவிடுவார்.
இந்த உறுதி நெடுங்காலம் நிலைக்கவில்லை. ஆண்டு முடிவில் எட்டாவது தேர்வு நடத்துவதற்காகப் பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் வந்திருந்தார். அவர் மாணவர்களின் திறமையை ஆராய்ந்தறிவதில் மிக வல்லவர். எட்டாவது வகுப்பு மாணவர்களில் சந்திரன் மிகத் திறமையாக விடைகள் எழுதியதைக் கண்டு வியந்தார் ; சிறப்பாகக் கணக்குத் தேர்வில் சந்திரன் ஒன்றுவிடாமல் போட்டு முடித்து நூற்றுக்கு நூறு எண்கள் வாங்கும் வகையில் எழுதியிருந்ததைக் கண்டு வியந்தார். அன்று மாலையில், பள்ளிக்கூடத் தலைமையாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சந்திரனைப்பற்றியும் அவனுடைய மேற்படிப்பைப் பற்றியும் கேட்டார்.
ஆண்டுதோறும் இப்படிச் சில பிள்ளைகள் தேர்ச்சி பெற்று வெளியூருக்கும் சென்று மேற்படிப்புப் படித்து உயர்ந்தால்தான் ஒரு கிராமம் முன்னுக்கு வரமுடியும் என்பது அவருடைய நம்பிக்கை. அதன்படியே அவர் தணிக்கைக்குச் சென்ற ஒவ்வோர் ஊரிலும் அவருடைய அறிவுரையைக் கேட்டுச் சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மேற்படிப்புப் படிக்கவைத்து மகிழ்ந்தார்கள். இந்த ஆண்டில் சந்திரனைப்பற்றி நல்லெண்ணம் கொண்ட அவர், அவனுடைய மேற்படிப்பைப்பற்றித் தலைமையாசிரியரிடம் கேட்டார்.
தலைமையாசிரியர் சாமண்ணாவின் மனநிலையைப் பற்றியும் உறுதியைப் பற்றியும் சொன்னார். ஆய்வாளர் வியந்தார் ; “ஊரில் பொதுவாக இவ்வளவு அறிவு நுட்பம் வாய்ந்த பிள்ளைகளைக் காண்பதே அரிது. இந்தப் பிள்ளையின் கல்வியைப் பாழாக்குவதா! அது என்ன பிடிவாதம் ! போகலாம் வாருங்கள். நான் போய் அவனுடைய தந்தையிடம் பேசுவேன்” என்று சொல்லி எழுந்தார்.
சந்திரனுடைய தந்தையாரைக் கண்டதும், “உங்கள் குடும்ப நன்மைக்காக வந்திருக்கிறேன். தவறாக எண்ணக்கூடாது. நான் சொல்வதைப் பொறுமையாக எண்ணிப் பார்க்க வேண்டும். ஒன்றும் அவசரம் இல்லை. ஒரு வாரம் இரண்டு வாரம் கழித்து முடிவுக்கு வரலாம்” என்று அடிப்படையிட்டுப் பேசத் தொடங்கினார். தம் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
சாமண்ணா பொறுமையோடு கேட்டிருந்து, முடிவில் பழையபடி தம் தத்துவத்தை விளங்கினார். ஆய்வாளர் சிரித்தார். “கலைமகள் வலிய உங்கள் வீட்டைத் தேடிக்கொண்டு வருகிறாள். நீங்கள் திரும்பிப் போகுமாறு சொல்லி வழியடைக்கிறீர்கள். உங்களுக்குத்தான் இந்த ஊரில் எல்லோரையும்விட நிலபுலம் மிகுதி என்று கேள்வி. நீங்களே இப்படிச் சொல்லிப் பயந்தால்…” என்று நிறுத்தினார்.
“இந்தக் காலத்தில் எப்படி ஐயா நம்புவது? நம் குடும்பத்தில் நம் வசமாக இருக்கும் வரையில்தான் நம்முடைய பிள்ளை. வெளியே போனால் அப்புறம் சொல்ல முடியாது” என்று சாமண்ணா கொஞ்சம் நெகிழ்ந்தாற்போல் பேசினார்.
அவருடைய பேச்சின் நெகிழ்ச்சியைக் கவனித்த ஆய்வாளர் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு, “நான் உறுதியாகச் சொல்லுகிறேன், நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டியதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பையன் ஒருகாலும் அப்படிக் கெட்டுப் போகமாட்டான். படிப்பு வராத மக்குப் பிள்ளைகள்தான் அப்படிக் கெட்டுப் போவது வழக்கம். உங்கள் பையன் சந்திரன் ஒருநாளும் அப்படிக் கெட்டுப்போக மாட்டான், உறுதியாய்ச் சொல்லுகிறேன். ஆடு மேய்க்கிறவனுக்குத் தான் ஆட்டைப் பற்றித் தெரியும். ஊர் ஊராய்ப் போய்ப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் திறமையைப் பார்க்கிறவன் நான்.
உங்கள் பிள்ளையைப்பற்றி உங்களுக்குத் தெரியாது, எனக்குத் தான் தெரியும். இந்த ஆண்டில் எத்தனையோ பள்ளிக்கூடங்களைப் பார்த்திருக்கிறேன் ; எத்தனையோ பிள்ளைகளைப் பார்த்து வருகிறேன். அவர்கள் எல்லோரிலும் சந்திரனைப் போல் ஒருவன் இல்லை. அவன் நாக்கில் கலைமகள் வாழ்கிறாள். நான் சொன்னால் நம்புங்கள். தனியே அனுப்பிப் படிக்கவைத்தால் கெட்டுப்போவானோ என்ற பயம் இருந்தால் அப்படி வேண்டா. கடவுள் உங்களை ஏழையாகப் படைக்கவில்லை. செல்வமும் கொடுத்திருக்கிறார். செலவு ஆனால் ஆகட்டும், நகரத்தில் ஒரு சிறு வீடு பார்த்துப் பையனுடைய அம்மாவையோ யாரையோ அனுப்பிச் சமைத்துப் போடச் செய்யுங்கள்.
அவர்கள் பையனைக்கூட இருந்து கவனித்துக் கொள்வார்கள். எப்படியோ பையன் படிக்க வேண்டும். அதுதான் வேண்டியது. செல்வம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். கல்வி அப்படிப்பட்டது அல்ல. யாரோ ஒருவரைத்தான் கலைமகள் தேடி வருவாள். உங்கள் குடும்பத்தை இப்போது தேடிவந்திருக்கிறாள். அவளை அவமதிக்க வேண்டா, சொன்னால் கேளுங்கள். உங்கள் பையன் படித்துப் பட்டம் பெற்று, நாளைக்கு ஓர் ஆட்சித்தலைவராக வந்தால், உங்களுக்கு எவ்வளவு பெருமை! ஊருக்கு எவ்வளவு பெருமை! எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு ஈடு ஆகுமா?” என்று சாமண்ணாவின் நெஞ்சைத் தொடும்படி எடுத்துச் சொன்னார்.
சாமண்ணாவின் நெஞ்சில் ஏதோ புத்துணர்ச்சி பிறந்தது. உடம்பிலே ஒருவகைக் குளுமை நாடி நரம்பெல்லாம் பாய்வதுபோல் உணர்ந்தார். ஒன்றும் பேசாமல் தலை குனிந்திருந்தார். “சரி என்று சொல் அப்பா” என்று தொலைவில் யாரோ ஒரு குடியானவனுடைய குரல் கேட்டது. சாமண்ணா தலை நிமிர்ந்து, அவன் யார் என்று பார்த்தார். இரண்டு ஆட்கள் பேசிக் கொண்டு போவதைக் கண்டார். வீட்டின் முகப்பில் ஒரு பல்லி டிக் டிக் என்றது. அது என்ன திசை என்று கவனித்து உள்ளே எழுந்து சென்று பஞ்சாங்கக் குறிப்பைப் பார்த்தார். அந்த வேளையில் அந்தத் திசையில் பல்லி சொன்னால் என்ன பலன் என்று பார்த்தார். “யோகம்” என்று இருந்தது. தம் மனைவியிடம் சென்று ஒரு பெரிய தட்டில் பழங்களும் வெற்றிலை பாக்கும் கொண்டுவரச் சொன்னார். வேலையாளை அழைத்து நான்கு தேங்காய் உரித்துவரச் சொன்னார். ஆய்வாளரை நோக்கிப் புன்முறுவலோடு சென்று அவரெதிரே உட்கார்ந்தார்.
“ஒன்றும் அவசரம் இல்லை. பத்து நாள் பொறுத்து முடிவு செய்யலாம். பையனுடைய படிப்பு உங்களால் கெட்டதாக ஏற்படக் கூடாது. அதைச் சொல்லிவிட்டுப் போகவே வந்தேன். அவ்வளவுதான்” என்று எழுந்தார்.
“இருங்கள், வெற்றிலைபாக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்” என்று சாமண்ணா தடுத்தார். “நீங்கள் தெரிந்துதான் சொல்கிறீர்கள். உங்களைப்போல் பெரியவர்கள் சொன்னால், அதை ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டியது தான்” என்றார்.
வெற்றிலை முதலியன வந்த பிறகு, ஆய்வாளர் அவற்றில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, “நான் வந்த காரியம் முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். பையனுடைய நல்ல காலம்” என்று சொல்லிக் கொண்டே விடைபெற்றார்.
“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிச் சாமண்ணா கை கூப்பினார்.
வேனில் விடுமுறை முடிந்தது. ஆனி மாதத்தில் சந்திரனும் அவனுடைய அத்தையும் வேலையாள் ஒருவனுமாக மூவரும் எங்கள் தெருவில் ஒரு வீட்டில் குடிவந்தார்கள்; சந்திரன் ஊர்ப் பள்ளிக் கூடத்தை விட்டு நகரப் பள்ளிக் கூடத்து மாணவன் ஆனான்
(தொடரும்)
Comments
Post a Comment