Skip to main content

தந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)


(தந்தை பெரியார் சிந்தனைகள் 9 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் 10
(15) கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் கடவுள் பெரியவர் 1 என்று சொல்லிக் கற்பித்தார்களேயொழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை உள்ளது என்று எதையும் எவரும் மெய்ப்பித்துக் காட்டவே இல்லை என்பது பெரியாரின் கருத்து.
(16) பண்டைக் காலத்தில் தோற்றுவிக்கப் பெற்ற மனிதனும் கடவுளும் அன்றைய பாதுகாப்பிற்குப் போதுமானதாய் இருந்தன. அந்தக் காலத்திய பாதுகாப்பிற்கு இன்று எவரும் பயப்படுவதில்லை. அந்தக் காலத்தில் ஓர் ஐந்து ரூபாய்த்தாளை வைத்து அதன் மீது ஒரு பளுவையும் வைத்து நாலு பக்கங்களிலும் ஏசுநாதர், முகமது நபிநாயகம், சிவன், திருமால் என்று எழுதி விட்டுப் போய்விட்டால் ஒருவன்கூட அதை எடுக்கத் துணிய மாட்டான். இந்தக்காலத்தில் அதனை ஒருவன் கூட எடுக்காமல் இருக்கமாட்டான். பெரியாரின் அற்புத எடுத்துக்காட்டு இது !
நம்பிக்கை: கடவுள் நம்பிக்கைப்பற்றிப் பெரியார் சிந்தனைகளில் சிலவற்றைக் காண்போம். பொதுவாக, கடவுள் நம்பிக்கை தவறான வழிகளில் மக்களைக் கொண்டு செலுத்துவதாகக் கருதுகின்றார்.
(1) கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; இவற்றை உணர முடியாதவனுக்குத் தலைவிதி; இப்பேச்சு ஓர் இலக்கண விதிபோல் அமைந்துள்ளது. (2) கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு எடுத்தற்கெல்லாம் அவர்மீது பழிபோட்டுக்கொண்டு திரிகின்றவன் முழுமூடன்; அடிமுட்டாள் என்பது அய்யாவின் கருத்து.
(3) கடவுள் மனிதன் மூலமாகவே தன்னுடைய ஆட்சியை நடத்துகின்றார் என்பதே பெரும்பாலான ஆத்திகர்களின் முடிவு. இதனாலேயே பிச்சை பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகின்றான். உத்தியோகம் பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று செப்புகின்றான். பிறரிடம் உதவி பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று கூறுகின்றான். ஏதாவது ஒரு நெருக்கடியில் விபத்து நேராமல் தப்பித்துக் கொண்டவனும் கடவுள் காப்பாற்றினார் என்று மொழிகின்றான். இந்நிலையில் எந்த நன்மைக்கும் தீமைக்கும் மனிதன்மீது பொறுப்பைச் சுமத்துவது எப்படி முடியும்? என்பது பெரியார் நம்முன் வைக்கும் வினா?
(4) சிறையிலிருக்கும் கைதிகூட கடவுளைப் பிரார்த்திக்கின்றான். கொள்ளையடிக்கும் கறுப்புச் சந்தைக்காரனும், சதா கடவுளை வணங்குகிறான். திருட்டுத்தொழில் புரிகிறவனும், திருடப்போகும்போது கடவுளை நினைத்துக் கொண்டுதான் செல்லுகின்றான். தன்னைச் சாமியார் என்றும், கடவுளின் சீடன் என்றும் சொல்லிக்கொள்கின்றவன் மடியில் சாராயப்புட்டியும் பிராந்திக் குப்பியும் உள்ளன. பூசை அறையில் சாராயம் காய்ச்சும் செயலும் வேசியுடன் இன்பலீலைகளும் நடைபெறுகின்றன. இங்ஙனம் எந்தத் தொழிலைச் செய்கின்றவனாயிருந்தாலும் அவனவன் கடவுளை வணங்கியே செயல்படுகின்றான். ஆனால் இவனது தகாத செயல் வெளிப்பட்டுச் சிக்கிக் கொண்டால் ‘அடக் கடவுளே’ என்று அப்பொழுதும் கடவுள் பக்தியுடன் நடந்து கொள்வதாக நடிக்கின்றான். இத்தனைப் பேர்களிலும் தன்னைக் கடவுள் நம்பிக்கையற்றவன் என்று ஒருவனாவது கூறிக் கொள்வதில்லை.
(5) கடவுள் கொடுக்கிறார் என்று கூறிக்கொண்டு கடவுளை வணங்குவது வெறும் வேடம்; முட்டாள்தனம் ஆகும் என்பது பெரியார் கருத்து. முதலாளி என்பவன் மூட்டை அடிக்கிறான்; அவர் கடவுள் கொடுத்தார் என்று கூறி மக்கள் தன்மேல் ஆத்திரப்படாமல் இருக்கக் கடவுளை வணங்குகின்றான். தொழிலாளிக்கு நாளை சோற்றுக்கு வழி இல்லை. அவனுக்குக் கடவுள் பக்தி இருந்தும் சோற்றுக்கு வழி இல்லாதவனாக இருக்கின்றான். புளிச்சேப்பக்காரனுக்கு மேலும் மேலும் பணம். பசி ஏப்பக்காரனுக்கு ஒன்றும் இல்லை. கடவுளுக்கு ஏன் இந்த பாரபட்சம்? என்று கேட்கின்றார் ஐயா.
(6) கடவுள் நம்பிக்கையால் ஒழுக்கம் எங்கே வளர்கிறது? ஆயிரம் வேலி நிலம் வைத்திருக்கிற சாமியையே பெயர்த்து விட்டுக் கீழே இருப்பதைத் தோண்டிக்கொண்டு அம்மன் சாமியின் சேலையை எடுத்துக்கொண்டு அம்மணமாக்கிப் போகின்றவனைக் கடவுள் ஏனென்று கேட்பதில்லை. உள்ளபடியே கடவுள் நம்பிக்கை இருந்தால் எதற்குக் காவல் நிலையம்? எதற்கு நீதிமன்றம்? தன்னலத்துக்கு மற்றவனை ஏமாற்றக் கடவுள் இருக்கிறார் என்கின்றான். வேறு எதற்கும் கடவுள் நம்பிக்கை பயன்படவில்லை.
(7) கடவுளை நம்புகிறவன் அயோக்கியத்தனம் செய்யப் படுவதற்கு அஞ்சுவதில்லை. காரணம் எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் ஆண்டவன் மன்னிப்பான் என்பதால்தான் நிறைய அயோக்கியத்தனம் நடைபெற்ற வண்ணம் உள்ளது?
(8) சில சமயம் பெரியார் நகைச்சுவையாகவும் பேசுவார்: ‘எல்லாம் கடவுள் செயல்’ -இதை ஒருவன் நம்பவேண்டும் என்கின்றான். அவர் கன்னத்தில் ஓர் அறைவிட்டால் ‘என்னடா அயாக்கியா அடித்துவிட்டாயே?’ என்கின்றான். அவன் அடித்தவனைச் சொல்லுகின்றானா? அவனன்றித் துரும்பும் அசையாதபோது அது கடவுள் செயல் என்பது தானே பொருள்? இப்படித்தானே கடவுள் நம்பிக்கைக்காரன் கருதவேண்டும்? – இப்படிக் கேட்கிறார் பெரியார்.
(9) ஒரு விநோதமான கேள்வி: கடவுள் நம்பிக்கை இல்லாததால்தான் அண்ணாத்துரை செத்தார் என்கின்றான் ஒருவன். அவனிடம் பெரியார் “அடமுட்டாளே. கடவுளே இல்லை என்று சொன்னவன் நான். அண்ணாத்துரைக்குச் சொன்னவனும் நானே. நான் இன்று 90 வயதுக்கு மேல் கொழுக்கட்டைபோல் இருக்கிறேனே! கடவுள் இல்லை என்று சொன்னதற்காக நானல்லவா அவருக்குமுன் இறந்திருக்க வேண்டும்?” என்கின்றார்.
(10) எவன் ஒருவன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கின்றானோ அவன் கண்ணுக்குக் கடவுளே தெரியாது. கடவுள் என்ற சங்கதி பிறர் சொல்லித்தான் தெரியுமே தவிர எவனுக்கும் தானாகத் தெரிவதில்லை. கடவுள் உண்மையாக இருந்து கடவுளைக் கும்பிடுவது உண்மையாக இருக்குமானால் இவனுக்குக் கடவுள் இருக்கிறது என்பதை இன்னொருவன் சொல்லி அறிந்து கொள்வானேன்? என்கின்றார் தந்தை பெரியார். இதில் சிந்தனையின் ஆழத்தைக் காணமுடிகின்றது.
நம்பிக்கையைப்பற்றி ஐயா அவர்களின் சிந்தனைகள் இவ்வாறு நடைபெறுகின்றன.
எல்லாம் வல்வர்: கடவுள் எல்லாம்வல்ல சக்தியுள்ளவர் என்று சொல்லப் பெறுகின்றது. இதுபற்றி ஐயா அவர்களின் சிந்தனையைக் காண்போம்.
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்), தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம்
குறிப்புகள் 
1. வித்தியேசுவரனில்-உருத்தின், மால், அயன் என மூன்றும் அடங்கும்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்