Skip to main content

தந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)


தந்தை பெரியார் சிந்தனைகள் 12

கோயில்கள்: உருவ வழிபாட்டின் விளைவாக எழுந்தவை திருக்கோயில்கள். மராமத்து செலவு அடிக்கடி ஏற்படும், எதிர் காலத்தில் இதனை எவரும் ஏற்காமாட்டார்களோ என்று எண்ணியே கல்லாலேயே கோயில்களைக் கட்டியுள்ளனர்.
(1) இந்நாட்டில் எத்தனைக் கோயில்கள்? வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. சைவர்கட்குப் பாடல் பெற்ற தலங்கள் 274; வைப்புத்தலங்கள்-பாடல்களில் பெயர்கள் வைக்கப் பெற்றவை 233. இந்த இரண்டிலும் அடங்காதவை எண்ணற்றவை. பிள்ளையார் கோவில்கள் எத்தனை? ஆற்றங்கரை, அரச மரத்துப்பிள்ளையார்கள் எத்தனை? சாலையோரங்களில் நாடோறும் தோன்றி வரும் கோயில்கட்குக் கணக்கே இல்லை. இது பக்தி பெருகி வருவதற்கு அடையாளமா? என்று கேட்கின்றார் பெரியார்.
(2) மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில், இராமேசுவரத்திலுள்ள இராமநாதர் கோயில்- இவை ஒவ்வொனறும் நாடாளுமன்ற கட்டடத்தைவிட முப்பது, நாற்பது இலட்சம் அதிகம் போட்டாலும் கட்ட முடியாது. இவை ஒவ்வொன்றிலும் உள்ள சாமிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட ஏன்? வாக்களார்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமாக உள்ளன. அந்தச் சாமிகளுக்கு ஆகின்ற செலவோ நாடாளுமன்ற உறுப்பினர்கட்குக் கொட்டி அழுகின்ற தெண்டச் செலவைவிட ஏராளமாக ஆகின்றது-என்று மனவருத்தத்துடன் பேசுகின்றார்கள் ஐயா அவர்கள்.
(3) நம் நாட்டைப் பிடித்துள்ள பெருங்கோயில்கள்தாம் நாம் கெட்டு சீரழிந்து அடிமையானதற்கு, வறுமையில் கட்டப்பட்டுத் திண்டாடுவதற்கு எல்லாம் காரணம் என்பது ஐயா அவர்களின் கருத்தாகும். இவற்றை நம் வாழ்வைக் கெடுத்த சனியன்களே என்று வயிறெரிந்து பேசுகிறார்கள். கொள்ளையடித்த பணத்திற்குப் பரிகாரம் இதுதான் என்று நம்பியே பணக்காரர்கள் கோயில்களைக் கட்டுகிறார்கள். தவறாகத் திரட்டிய பணத்தின் ஒரு பகுதியை, தாமே அச்சடித்த 100 உரூபாய் 500 உரூபாய்த் தாள்களைக் கட்டுக்கட்டாகத் திருப்பதி போன்ற திருக்கோயில்களின் உண்டியில் கொட்டுகிறார்கள். அவை நல்ல தாள்களுடன் கலந்து புழக்கத்திற்கு வந்து விடுகின்றன. கல்லுச்சாமிகளைத் தம் தகாத செயல்களுக்குப் பங்காளிகளாக்கி விடுகிறார்கள். பண்ட உற்பத்திக்குமேல் பண உற்பத்தி பெருகி விடுவதால் விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகின்றது. இங்குக் கடவுளர்கள் கயவர்களின் இழிசெயல்கட்குத் துணை போவதைக் காண்கின்றோம். கோயில் வருமானத்தைக் கொண்டு பக்தியை அளவிடுவது எவ்வளவு கேவலம் என்பது அறிவுள்ளவர்கட்குத் தெளிவாகின்றது.
(4) கடவுளர்களைப்பற்றிச் சொல்லப் பெறுகின்ற இலக்கணம், இலட்சியம் இவற்றிற்குச் சிறிதும் பொருந்தாத அயோத்தி இராமன் எப்படிக் கடவுளாக முடியும்! கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், பழநி, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் எழுந்தருளியுள்ள கந்தன் ஆகியோர் எப்படிக் கடவுளர்களாக முடியும்? என்று கேட்கிறார்கள் ஐயா அவர்கள். மனிதகுலம் படைத்த இவர்களை எப்படிக் கடவுளாக ஒத்துக் கொள்ள முடியும்?
(5) தமிழன் வணங்கும் கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. ஒரு மனிதன் ஒரு கடவுளுக்குமேல் வழிபடுகின்றான், நம்புகின்றான் என்றால் அவன் கடவுளை நம்புகின்றவன் ஆகான் என்பதுதானே பொருள்? அவன் கடவுளுக்கு உருவம் உண்டு என்று சொல்வானேயானால் அவன் கடவுளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவன் என்று தானே கொள்ள வேண்டும்? இங்குத் தந்தை பெரியாரின் வினாக்கள் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.
(6) கோயிலுக்குப் போகக்கூடாது; செத்தாலும் போகக்கூடாது. அங்கே என்ன இருக்கின்றது. குழவிக்கல்லைத் தவிர? யாராவது சொல்லுங்கள்” என்று சவால் விடுக்கும் தந்தை பெரியார், “எல்லா இடங்களிலும் எங்கும் நிறைந்த கடவுளுக்கு தனியான ஓர் இடத்தில் என்ன வேலை? எல்லாமாய் இருக்கின்ற இறைவனுக்கு குழவிக்கல்லாய் இருக்க வேண்டும் என்று என்ன தலை எழுத்து? எவனாவது சாபம் கொடுத்தானா?” என்று கிண்டல் பாவனையில் தொடுக்கும் வினாக்களுக்கு எந்த அடியாராவது பதில் சொல்ல முடியுமா?
(7) ஒரு கோயிலுக்குள் பூசைக்குரிய பலசிலைகள் உள்ளன. அவற்றுள் சில கருவறைக்குள் உள்ளன; சில அந்த அறைக்கு வெளியே உள்ளன. இரண்டு வகைகளும் கடவுளர்களே; சாத்திரப்படி குடமுழுக்கு செய்யப்பெற்றவையே. வெளியிலிருக்கும் கடவுளர்களைத் தொடலாம்; தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். கருவறைக்குள் இருக்கும் கடவுளை மாத்திரம் நெருங்கக் கூடாது என்றால் இதில் யோக்கியமிருக்கிறதா? என்று வினவுகின்றார் தந்தை பெரியார்.
(8) வடநாட்டில்குறிப்பாக வாரணாசியில், கங்கையில் நீராடிவிட்டு வில்வத்தைக் கையில் கொண்டுவரும் அடியார்கள் விசுவாசநாதர் கோயிலில் உள்ள இலிங்கத்தின்மீது வில்வத்தைத் தூவுகின்றனர்; தொட்ட கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளுகின்றனர். தென்னாட்டில் மட்டிலும் ஏன் இந்த நிலை ஏற்படவில்லை? சாத்திரங்களில் இதற்கு இடம் இல்லையா? என்று வினவும் பெரியாருக்கு எந்த சாத்திர அறிஞர் என்ன பதில் சொல்ல முடியும்?
இங்ஙனம் பல்வேறு விதமாகச் சொல்மாரிகளை வீசும் பெரியாருக்கு பதில் கண்மூடி மெளனியாக இருக்கும் அடியார்களைத்தான் காண்கின்றோம்.
இவ்விடத்தில் அடியேனுக்கு ஒன்று சொல்லத் தோன்றுகின்றது. இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியர்களின் பார்ப்பனர்களின்- சூழ்ச்சியால் ஏற்படவில்லை. ஏதோ காலந்தோறும் தோன்றி வருகின்றன. நாடோறும் எண்ணற்ற அடியார்கள் சைவர்கள், வைணவர்கள் உட்பட-திருத்தலப் பயணம் மேற்கொண்டு மூர்த்திகளை வழிபட்டு மன அமைதியினைப் பெறுகின்றனர். வடநாட்டினர், தென்னாட்டினர் யாவரும் காசிக்கும் இராமேசுவரத்திற்கும் பயணம் செய்து வருகின்றனர். மக்கட்பேறு வேண்டுவோர் இராமேசுவரத்திற்கும் வீடுபேறு வேண்டுவோர் காசிக்கும் சென்று வருகின்றார்.
திருக்கோயில்களுக்குச் சென்று வருவதால் பெறும் பயனைப் பற்றியும் நூல்கள் உள்ளன. அங்கு சென்று வருவது மூடத்தனம் என்று பெரியார் அவர்கள் பேசிய பேச்சும், எழுதிய கட்டுரைகளும் நூல்களாக உள்ளன. இரண்டையும் மக்கள் படித்து அவரவர்கள் விரும்பும் பயனைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு இரண்டுவிதக் கருத்துகளும் மன்பதையின் நடுவே என்றும் உலவிவரும் என்பதுதான் உண்மை.
கடவுள் மறுப்பு: இது பற்றிய தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஈண்டுக் காட்டுவேன்.
(1)கடவுளுக்கு இலட்சணமோ குறிப்போ ஏதாவது ஒன்று விளக்கமாகச் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக்குள்ளாகக் கடவுள் சங்கதியில் இரண்டில் ஒன்று, அஃதாவது உண்டு இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்ததிருப்பார்கள் என்கின்றார்.
(2) இன்றைய ருமம் நாளைக்கு அதருமமாகித் தலைகீழாக மாறக்கூடும். அத்தகைய நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதனை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க-ஏன் கடவுளையே- மறுக்கத் துணிந்தாக வேண்டும். கடவுளை மறக்கத் துணிந்தவனே தர்மத்தின் பெயரால் உள்ள இன்றைய கொடுமையை ஒழிக்க முடியும்.
(3) கடவுள் மறுப்பு என்றால் எல்லாக் கூட்டங்களிலும் ‘கடவுள் வாழ்த்து’ மரபாக வருவது போல், பொதுக் கூட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக,
‘’கடவுள் இல்லை’’
‘’கடவுள் இல்லவே இல்லை’’
‘’கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்’’
‘’பரப்பினவன் அயோக்கியன்’’
‘’வணங்குகிறவன் காட்டுமிராண்டி’’
‘’கடவுள் இல்லை; இல்லவே இல்லை.’’

என்பதாகச் சொல்லிவிட்டு மற்ற நிகழ்ச்சிகளைத் தொடங்குவதுதான் கடவுள் மறுப்பு என்றதாகும்.
(4) கடவுள் என்றால் என்ன என்று எப்படிப்பட்ட ஆத்திகராலும் சொல்ல முடியவில்லை. ஆகவே ஒவ்வொரு ஆத்திகனும் தனக்குப் புரியாத ஒன்றையே, தன்னால் தெரிந்து கொள்ள முடியாததும் பிறர்க்கு விளக்க முடியாததும் ஆகிய ஒன்றையே குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு ‘கடவுள், கடவுள்’ என்று அழுகின்றான். இந்தப் பிடியைத் தளர்த்திக் கடவுள் இருப்பினை மறுக்க வேண்டாமா?
(5) கடவுள் கண்ணுக்கும் எட்டாதவன்; அறிவுக்கும் எட்டாதவன்; மனத்துக்கும் எட்டாதவன் என்று ஆத்திகன் கூறுகின்றான். இந்த மூன்றுக்கும் எட்டாதவன் பிறகு எதற்குத்தான் எட்டுவான்? இதுபற்றி ஏன் ஆராயக் கூடாது? அப்படியே நம்பவேண்டும். அதற்குப் பெயர்தான் ஆத்திகம். இப்படி எதற்கும் எட்டாதது எப்படிக் கடவுளாகும்? என்று கேட்டால் நாத்திகமா? இப்படி வினவுகின்றார் ஐயா.
(6) கடவுள் ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் எதற்கு மனிதனாகப் பிறந்து வரவேண்டும்? அவன் மனத்தில் நினைத்தால் நினைத்தபடி ஆகிவிட வேண்டாமா? இராமன் கடவுளாக இருந்தால்? ‘ஏ இராவணா, நீ மாண்டு போக வேண்டும்’ என்று சங்கல்பித்தாலே போதுமே; அவன் செத்துப் போயிருப்பானே!
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்), தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue