Skip to main content

ஏனையா? – அருள்மணி

அகரமுதல


ஏனையா?

குண்டும் கொலையும் என்றுலகம்
கொடூர வழியிற் செல்வதனைக்
கண்டு காணா திருப்பதுஏன்?
காரணம் சொல்வாய் நாவே!                1

உலக ஒழுங்கை நிலைநாட்டும்
ஓரிட மாகத் உனைக்காட்டும்
உலக அமைப்பாம் நாவே!
ஊமை யானது ஏனையா?                        2

திட்ட மிட்டோர் இனஅழிப்பைச்
செய்த அரசிற் குதவியன்று
கட்டம் கட்டமாய் அழிக்கக்
காரண மானீர் ஏனையா?                            3

மனித நேயம் பேசிடுவோர்
மானிட உரிமைக் குரல்தருவோர்
தனிமைப் படுத்தி ஓரினத்தை
சாகடித் திடஏன் விட்டீர்கள்?                     4

சூழ்ச்சி நிறைந்த அரசுகளால்
சுரண்டும் வணிக உலகத்தால்
வீழ்ச்சி கண்ட இனமாய்நாம்
வீழ்ந்து கிடக்க ஏன்வைத்தீர்?                    5

துல்லிய மாகக் கண்டறியும்
தொழில் நுட்பத்தில் கைதேர்ந்த
வல்லமை கொண்ட நாடுகளும்
வாழா விருந்தது ஏனையா?                      6
  
செய்மதி தந்த படங்களினைத்
சிறிதும் சட்டை செய்யாது
வையக நாடுகள் கண்மூடி
வாயைப் பொத்தி இருந்ததுமேன்??               7

ஒன்றை அடித்து இன்னொன்று
உண்டு வாழும் இயற்கையது
நன்று என்று நாமேற்றால்
நமக்கேன் சட்ட திட்டங்கள்?                     8

வல்லா திக்க உணர்வோடு
வலம்வரும் உலக நாடுகளே!
பொல்லா முடிவால் எம்மினத்தைப்
பொசுங்; வைத்தீர் ஏனையா?                   9

தத்தம் நாட்டு நலனுக்காய்த்
தருமம் பேசும் நீதியொன்று
இத்தரை மீது தொடர்வதைநாம்
ஏற்றுக் கொள்ளல் முறைதானோ?                10

குற்றம் செய்தவன் நீதியினைக்
கொடுப்பா னென்று நம்புவது
சற்றும் பொருத்தம் இல்லாத
தத்துவம் என்பதை மறந்தீரா?                   11

நெஞ்சை ஒளித்து வஞ்சகமாய்
நீதி பேசும் நாடுகளே!
கொஞ்ச மேனும் நீதிக்காய்க்
குரல்கொடுத் திடமுன் வருவீரா?                 12
  
  தரவு : சபாஅருள்சுப்பிரமணியம்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்