Skip to main content

மறப்போமா? – மாதகலான்

அகரமுதல


மறப்போமா?

பத்து ஆண்டுகள் போனாலும்
பழைய நினைவுகள் மாறுமோ
மொத்த ஈழத் தமிழினமும்
முடிவைத் தேடி ஏங்குகிறோம்!            1

மொத்த உலகும் பார்த்திருக்க
முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில்
கொத்துக் குண்டால் அடிபட்ட
கொடூரம் தன்னை மறப்போமா?          2

வாழும் உரிமை வேண்டியன்று
வன்னி மண்ணில் தமிழர்கள்
ஆளும் வருக்கச் சூழ்ச்சிக்கு
ஆட்பட் டழிந்ததை மறப்போமா?               3

முள்ளி வாய்க்கால் அவலத்தை
மொத்த ஈழத் தமிழர்க்கும்
கொள்ளி வைக்கும் நினைவோடு
கொண்டு சென்றதை மறப்போமா?             4

சோகம் நிறைந்த அந்நாளைச்  
துயரம் விளைத்த அந்நாளை
தேசம் கடந்து வாழ்ந்தாலும்
சிறிதும் நாங்கள் மறப்போமா?           5

உலக நாடுகள் செய்திட்ட 
உதவி யோடு தமிழினத்தின் 
பலமாய்த் திகழ்ந்த வீரர்களைப்
படுகொலை செய்ததை மறப்போமா?      6


அடைக்கலம் தேடி நம்மவர்கள்
அஞ்சிப் பதுங்கி இருக்கையிலே
தடைக்குட் பட்ட குண்டுகளால்
தாக்கப் பட்டதை மறப்போமா?            7

புத்தன் யேசு அல்லாவின்
புனித போதனைக் கென்னாச்சு?
சித்தம் தெளியா மானிடர்நாம்
தேடும் முடிவு தானென்ன?                8

மதத்தின் பெயரால் அடிபட்டு
மதங்கொண் டலையும் மானிடர்கள்
எதற்கும் துணிந்து தவறிழைப்போர்!
எப்படி நீதியைத் தருவார்கள்?             9

தன்னலங் கொண்ட பார்வையுடன்
தலைமை தாங்கும் கட்சிகளை
முன்னிலைப் படுத்தும் வரையெங்கள்
முடிவில் மாற்றம் நேராது!!!          10

தூக்கி எறிவோம் நமையாளும்
சுயநலம் தேடும் கூட்டத்தை
வாக்கின் மூலம் புதுத்தலைமை
வந்து சேர வழிசமைப்போம்!             11

அழிக்கப் பட்ட உயிர்களது
ஆத்மா சாந்தி பெறுவதற்கு
விழிப்புடன் நடந்து எமக்கென்றோர்
விடிவைத் தேட முயன்றிடுவோம்!!         12
தரவு – சபாஅருள்சுப்பரமணியம்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்