மண்டபம் வேறு; மன்றம் வேறு !


பட்டி மண்டபம் என்பது,  சமய உண்மைகளை ஆராய்வதற்குரிய வாத சபை; சமய ஆராய்ச்சி செய்யும் வித்யா மண்டபம் என்பது பழைய உரை விளக்கம். பட்டி மண்டபம் என்பது நிலையான ஓர் இடத்தைக் குறிக்கும்; "மன்றம்' என்பது ஓர் அமைப்பைக் குறிக்கும். மண்டபம் - (கோயில் விழாவுக்கான) கல்தூண்கள் தாங்கிய கூரையோடு நான்கு பக்கமும் திறப்பாக உள்ள சதுர அல்லது செவ்வக வடிவக் கட்டடம். (ஒலியை எதிரொலிக்கச் செய்யும் தன்மை கொண்ட கட்டுமான அமைப்புடன் கூடிய மண்டபத்தையும் குறிக்கும்). நினைவு மண்டபம், திருமண மண்டபம். மைசூர் மண்டபம், பளிங்கு மண்டபம், கண்ணாடி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், நவசக்தி மண்டபம் என்பதுபோல நிலையான மண்டபம். (மண்டபம் இல்லாமல் வீடு கட்டினோம் எனச் சிலர் கூறுவது கவனிக்கத்தக்கது). "பட்டி மண்டபத்து ஏறுவார் பரந்த கல்வியும் நிரம்பிய அறிவும் நுண்ணுணர்வும் உடையராதல் வேண்டும். அவ்வாறு ஏறுவதற்குத் தகுதியற்ற என்னையும் ஏற்றினாய்' என்பதை,""கட்டறுத்தெனை யாண்டு கண்ணாரநீறிட்ட அன்பரொ டியாவருங் காணவே"பட்டி பண்டபம்' ஏற்றினை, ஏற்றினை,எட்டினோ டிரண்டும் அறியேனையே'' என்ற திருவாசகம் - திருச்சதகத்தில் இடத்தில், "பட்டி மண்டபம்' என்ற சொல்லாட்சியையே மணிவாசகப்பெருமான் பயன்படுத்தியுள்ளார். மணிவாசகர் மட்டுமே இச்சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியுள்ளதாகக் குன்றக்குடி அடிகளார் (முந்தையவர்) குறிப்பிட்டுள்ளார். மணிவார்த்தைக்கு மறுவார்த்தை ஏது...?மேலும்,""மன்னவர் திருநிறை அளக்கும் மண்டபம்அன்னம் மென் நடையார் ஆடு மண்டபம்உன்னரும் அருமறை ஓது மண்டபம்பன்னருங் கலை தெரி "பட்டி மண்டபம்''(கம்ப-நகர்-62)என்று கம்பராமாயணம், நகர் படலத்தில் பட்டி மண்டபம் குறிக்கப்படுகிறது. (மன்னர் மன்னராகிய அயோத்தி வேந்தனுக்கு அடங்கிய) சிற்றரசர்கள் செலுத்தும் கப்பத்தை எண்ணி அளவிடும் மண்டபங்களும், அன்னம் போன்ற நடையுடைய நடன மாதர்கள் நடனமாடும் மண்டபங்களும், நினைப்பதற்கும் அரியனவான சிறந்த வேதங்களை வல்லோர் ஓதும் மண்டபங்களும், "சிறப்பித்துப் பேசுதற்கும் அரியனவான பல கலைகளையும் பயிலும் பட்டி மண்டபங்களும் அயோத்தி நகரில் இருந்தன' என்று மண்டபங்களின் வகைகளை வகைப்படுத்தியுள்ளார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.பட்டிமன்றம் மற்றும் மண்டபத்தின் இயல்பை, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் (சிலப்-இந்திர- 102;  மணி-விழா-60) விரிவாகக் காணலாம். பட்டி மண்டபத்தை, வித்யா மண்டபம் என்று சிலப்பதிகாரம் (5:102) அடியார்க்கு நல்லார் உரை கூறுகிறது.""ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்"பட்டி மண்டபத்து'ப் பாங்கறிந்து ஏறுமின்''பாங்கறிந்து - மரபு தெரிந்து ஏறவேண்டும் என்பதை மணிமேகலை கூறுவது (1:60-61) இங்கு கருதத்தக்கது. பட்டி மன்றத்தில் ஏறுவதுபோல, பட்டி மண்டபத்தில் யார் வேண்டுமானாலும் ஏறிவிடமுடியாது. பாங்கறிந்து ஏற வேண்டும். சமயம் மற்றும் கல்வி கேள்விகளில் சிறந்த அறிஞர் பெருமக்கள் கூடி வாதம் செய்வதற்கான இடம் அது. வள்ளலார் சுவாமிகள்,""எட்டிரண்டு அறிவித்து எனைத் தனி ஏற்றிப்பட்டி மண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே''(திருவருட்பா-1132)என மணிவாசகரை அடியொற்றி "பட்டி மண்டபம்' என்றே பாடியுள்ளார். பட்டி மண்டபம் என்பதற்கு, கூட்ட மண்டபம், மந்திர ஆலோசனை மண்டபம், திருவோலக்க மண்டபம், வித்யா மண்டபம், வாத சபை, கல்வி பயிலும் களம், கேள்வி மண்டபம் என்றெல்லாம் தமிழ் அகராதிகள் விரித்துரைக்கின்றன. கேள்வி மண்டபத்தை அதாவது, அறிவார் ஒருவர் உரைக்கும் அரும் பொருள்களை, பலர் இருந்து கேட்கும் மண்டபம் எனப் பொருள் கூறுவாரும் உள்ளனர். மன்றம் - மன்று + அம் = பலர் கூடுகின்ற இடம்; சபை, அமைப்பு என்பதைக் குறிக்கும். மன்றம் என்பது, ஒத்த கருத்துடையவர்களுக்கான அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்கான குழு அல்லது கூட்டமைப்பு (ரசிகர் மன்றம், மனமகிழ் மன்றம், இலக்கிய மன்றம், விளையாட்டு மன்றம் போல - விழா நிகழ்ச்சி போன்றவை நடத்துவதற்குரிய) மண்டபம் எனப்பட்டது.  கதிரைவேற்பிள்ளை அகராதியில் மன்றம் என்ற சொல்லுக்கு சபை, நிச்சயம், நெடுந்தெரு, பலர் கூடும் வெளி, வாசனை, வெளி எனப் பலபொருள்கள் கூறப்பட்டுள்ளன. இது பொதுச்சபை. இங்கு அறிவுசார் அறிஞர்களும், நுண்ணுணர்வாளர்களும், சமய உண்மைகளை ஆராயும் சமயவாதிகளும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இளையவர் முதல் முதியவர் வரை யார் வேண்டுமானாலும் இம்மன்றத்தில் கூடலாம். ஆனால், பட்டி மண்டபம் அத்தகையது அல்ல. "மண்டபம்' என்று கூறுவதே சரியானது என்பார் கம்பன் அடிப்பொடி சா.கணேசன்.பட்டி மண்டபத்தின் இயல்பும், இலக்கணமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தணிகை புராணம் கீழ்வருமாறு பதிவுசெய்கிறது.""கரிசறு கவிக்குக்கவி, கமகனுக்குக் கமகன்,வாதிக்கு ஒருவாதிதுரிசறு வாக்கி தனக்கொரு வாக்கியாய் அவர் தொன்று தொட்டு அமைந்துவரிசையின் வந்த வேள்வியர் பெறாது வரும் இகல்கடந்த எஃகு உடையார் -பரிசில் நூற்பயிற்சி எனக் கலைதேர் "பட்டி மண்டபம்' பலவயங்கும்''(தணிகை புராணம்-1016)மேற்கூறியவற்றால், ஒத்த கருத்துடையவர்களுக்கான அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்கான குழு அல்லது கூட்டமைப்பு மன்றம் எனப்பட்டது. சமய உண்மைகளை ஆராய்வதற்குரிய வாத சபையாகவும், கம்பர் குறிப்பிடுவதுபோல, பல அருங்கலைகள் குறித்து சிறப்பித்துப் பேசவும், வாதிடக்கூடிய இடமாகவும், அறிவுசார் சான்றோர் நிரம்பிய அவையாகவும் - இப்படி மேன்மை பொருந்திய செயல்கள் மட்டுமே நிகழ்வதற்குரிய இடமாகவும் கருதப்பட்டதுதான் "பட்டி மண்டபம்'.  மண்டபம் வேறு; மன்றம் வேறு என்பதைப் புரிந்துகொண்டு இடத்துக்குத் தகுந்த சொற்களைப் பயன்படுத்துவதே பொருத்தமாக அமையும்.இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி! "யாவரும் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை!' என்று திருவாசகம் - திருச்சதகத்தில் மாணிக்கவாசக சுவாமி குறிப்பிடுகிறார். ஆனால், தற்போது பட்டிமன்றம் என்றே வழங்குகின்றனர். பட்டிமண்டபமா? அல்லது பட்டிமன்றமா? எது சரியானது?

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue