மொழிப்பயிற்சி - 4: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


13.பண்டகசாலைபண்டங்கள் உடைய இடம் பண்டகம் அல்லது பண்டசாலை எனல் போதுமானது. ஆனால் கூட்டுறவுப் பண்டக சாலை என்னும் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. அகம் எனின் மனம், வீடு, இடம் எனப் பலபொருள் உண்டெனினும் ஈண்டு இடம் எனப் பொருள் கொள்க. நூல்கள் உடைய இடம் நூலகம்; பண்டங்கள் உடைய இடம் பண்டகம். பின் ஏன் சாலை என்று ஒரு சொல். உணவுச்சாலை என்பது போல் பண்ட சாலை எனலும் சரியாம்.14.பதட்டம்நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப் பயன்பாட்டில் உள்ளது. இச்சொல்லுக்குப் பொருள் இல்லை. இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும். பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை. இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம்.15.கண்றாவிஇப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா? இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை. ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கிறோம். கேட்கிறோம். மிகக் கொடிய காண்பதற்குக் கூடாத காட்சியை இப்படிச் சொல்லி வருகிறோம். இது கண் அராவும் காட்சி. ஆதலின் இச்சொல் கண்ணராவி என்றிருத்தல் வேண்டும். (அராவுதல்- இரும்பால் தேய்த்தல், அறுத்தல்)ஊர்ப் பெயர்த் திரிபுகள்பயன்பாட்டில் உள்ள பல சொற்கள் எப்படிப் பிழையானவை என்பது பற்றி எடுத்துக் காட்டுகள் வழியாகப் படித்தீர்கள். இவ்வாறே பல  ஊர்களின் பெயர்கள் சிதைந்து பொருள் திரிந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆறுகளால் பெயரமைந்த ஊர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, அடையாறு, செய்யாறு, திருவையாறு எனும் பெயர்கள் காண்க.அடையாறு என்பதை அடையார் என்று எழுதுகிறார்கள். பேருந்துகளிலும், பெயர்ப் பலகைகளிலும் காண்கிறோம். அடையார் என்றால் அடையமாட்டார் என்று பொருள். இனிப்பகம் ஒன்று அடையார் எனும் சொல்லோடு பயன்பாட்டில் உள்ளது. அந்த இனிப்பகத்தை யாரும் சென்றடையமாட்டார்களா? எவ்வளவு பெரிய தவறு இது?செய்ய நீர் (சிவந்தநீர்-புதுவெள்ளம்) ஓடிய ஆறு செய்யாறு. அந்த ஆற்றின் பெயரமைந்த ஊரைச் செய்யார் என்று எழுதியுள்ளார்கள். செய்யமாட்டார் என்ற பொருள் இதற்குண்டு. என்ன செய்யமாட்டார்? ஏன் செய்யமாட்டார்? இப்படிச் சிதைக்கலாமா?தஞ்சை அருகே திருவையாறு எனும் திருத்தலம் ஒன்றுள்ளது. ஐந்து ஆறுகள் அருகருகே ஓடிச் செழித்த மண் இது. இந்தத் திருவையாற்றைத் திருவையார் என்றெழுதுகிறார்கள். திருவையுடையவர் இவர் என்று பொருள் சொல்லலாமா? அல்லது திரிகை (மாவு அரைக்கும் சிறு கருவி) எனும் சொல்லை "திருவை' என்று பாமரர் சொல்லுவர். இவர் திருவையார் என்பதா? என்ன கொடுமை இது?ஆறுகளின் பெயர்களும் இப்படி ஆர் விகுதியோடு வழங்கப்பட்டு வருகின்றன. காட்டாறு என்பதைக் காட்டார் (காட்டமாட்டார்) என்றும், புது ஆறு புத்தாறு என்பதைப் புதார் என்றும் குடமுருட்டியாறு என்பதைக் குடமுருட்டியார் (குடத்தை உருட்டியவர்) என்றும் ஓடம்போக்கியாறு என்பதை ஓடம் போக்கியார் (ஓடத்தைப் போக்கியவர்) என்றும் வழங்குதல் பிழையன்றோ?வேறு சில ஊர்ப் பெயர்கள் வெவ்வேறு வகையில் சிதைந்து பிழையுறப் பயன்பாட்டில் உள்ளன. (பழைய) சோழநாட்டின் கோடியில் (கடைசியில்) இருந்த கடற்கரை ஊரைக் கோடிக் கரை என்றனர். இப்போதும் தமிழ்நாட்டின் வரைபடத்தைப் பார்த்தால் கிழக்குக் கோடியில் ஒரு புள்ளியாக அவ்வூர் அமைந்துள்ள இடத்தைக் காணலாம். அதனை இன்று கோடியக்கரை என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். ஒருகால் வளைந்த கரை என்னும் பொருளுடையது என்றால் கோடிய கரை என்று "க்' போடாமல் எழுத வேண்டும். (கோடுதல்-வளைதல்; கோட்டம்-வளைவு)ஆனால் இந்த ஊர்க் கடற்கரையில் கோட்டம் (வளைவு) எதுவும் இல்லை. ட எனும் எழுத்தை இடம் வலமாக மாற்றிப் போட்டதுபோல் இரண்டு நேர்க்கோடுகளின் சந்திப்பாக அவ்விடம் இருப்பதைப் படத்தில் காணலாம். ஆதலின் கோடிக்கரை என்றே குறித்தல் பிழையற்றது.(தமிழ் வளரும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue