மொழிப்பயிற்சி-6: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

அண்ணாமலை பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன. சட்ட படிப்பு, கல்வி துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது. அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அச்சொல்: சின்னத்திரை என்பதாம். வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான் இப்படிச் சுட்டுகிறோம். திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை. ஆதலின் இது சிறிய திரை.
சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது. சிறிய திரை, சின்ன திரை, பெரிய தம்பி, சின்ன கடை, பெரிய பையன் என்று இயல்பாக எழுதிட வேண்டும். சின்னத் திரை என்றால் சின்னம்+திரை - ஏதோ ஒரு சின்னம் வரையப்பட்ட திரை என்று பொருளாகும். சிறிய கொடியை சின்ன கொடி என்றுதான் சொல்ல வேண்டும். சின்னக்கொடி என்றால் ஒரு சின்னம் (எழுகதிர், இரட்டை இலை, கதிர் அரிவாள், தாமரை) பொறித்த கொடி என்று பொருளாகும்.
தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று ஏன் பிழையாகச் சொல்லிப் பழகிவிட்டோம் என்பது தெரியவில்லை. பேசியைத் தொலைத்துவிடு என்றன்றோ பொருள்தரும். தொலைவிலிருந்தும் காணக் கூடியது தொலைக்காட்சி எனில் தொலைவிலிருந்து பேசக் கூடியது தொலைப்பேசிதானே? கை என்றால் உடம்பின் ஓர் உறுப்பு என்பதன்றிச் சிறியது என்னும் பொருளும் உண்டு. கைக்குட்டை, கைப்பை, கைக் குழந்தை, கைப்பெட்டி எனச் சொல்லுகிறோம். கையில் வைத்துப் பேசுகின்ற (சிறிய) பேசியும் கைப்பேசிதானே? ஏன் இதனை மட்டும் கைபேசி என்கிறார்கள்? பிழையன்றோ? கைக்கடிகாரம் எவ்வளவு காலமாக வழங்கப்பட்டு வரும்  சொல். எப்படி இந்தக் கைபேசி வந்ததோ? இப்படியே நீளச் சொன்னால் முடிவே இல்லை. ஆதலின் வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள் பற்றி ஒரு சுருக்கமான பட்டியல் தருகிறோம்.
வல்லெழுத்து மிகும் இடங்கள்:
1. அ, இ, எ இம்மூன்று எழுத்தின் முன்னும், அந்த, இந்த, எந்த என்பவற்றின் முன்னும் மிகும்.
(எ-டு) அப்பையன், இப்பையன், எக்குழந்தை?
அந்தப் பையன், இந்தத் தாத்தா, எந்தச் சாத்தன்?
2.ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.
(எ-டு) பூப் பறித்தான், கைக் குழந்தை
3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) அறியாப் பிள்ளை, தீராத் துன்பம்
4.அகர, இகர ஈற்று முன் மிகும்.
(எ-டு) வரச் சொன்னான், ஓடிப் போனான்
5.வன்தொடர்க் குற்றுகரம் முன் மிகும்.
(எ-டு)எட்டுத் தொகை, கற்றுக் கொடுத்தான்
6. திரு, நடு, முழு, பொது என்னும் சொற்கள் முன் மிகும்.
 (எ-டு) திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி,
7.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
(எ-டு) பூனையைப் பார்த்தான், கடைக்குப் போனான்.
 8.பண்புத் தொகையில் மிகும்.
 (எ-டு) வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்.
 9.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம்
10. உவமைத் தொகையில் மிகும்.
(எ-டு) முத்துப்பல், கமலச் செங்கண்.
(தமிழ் வளரும்)
கருத்துக்கள்

திரு ஞானச் செல்வன் முயற்சி பாராட்டுக் குறியது என்றாலும் மறுபடியும் பழைய முறையிலேயே செலவதாக உள்ளதே என்னும் எண்ணம்தான் ஏற்படுகிறது. இவ்வாறு எத்தனையோ இலக்கண நூல்கள் எழுதியாகிவிட்டது. தமிழ் கற்போரிடம் எழுத்துப் பிழை நீங்கக் காணோம். காரணத்தை விளக்காமலேயே விதிகளைச் சொல்வதால் இந்தக் குறை நீங்கப் போவதில்லை. திரு ஞானச் செல்வன் குறிப்பிடுவதிலும் சில விவாதத்திற்கு உரியன. இந்த மடலில் உள்ள ‘அண்ணாமலை பல்கலைக் கழகம்‘ என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் ஒற்று மிக வேண்டும் என்பது கட்டுரையாளர் கருத்து. ஏன் மிக வேண்டும் என்பதற்கு விளக்கம் இருக்கிறதா? அடுத்து, இவர் கருத்துச் சரிதானா எனப் பார்ப்போம். இங்குக் குறிப்பிடப்படும் அண்ணாமலை என்பது ஆள் பெயரா? இடப் பெயரா? அனைவருக்கும் தெரிந்தவரை இது செட்டிநாட்டு அரசர் சர் அண்ணாமலையார் உருவாக்கிய, அவர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம். இங்கு அண்ணாமலை என்பது உயர்திணைப் பெயர். உயர்திணைப் பெயரை அடுத்துவரும் வல்லெழுத்து மிகாது என்பது விதி. எனவே இங்கு ஒற்று மிகாமல் எழுவதே சிறப்பு. அதுவே அண்ணாமலை என்பது இடத்தைக் குறிப்பிடும் அஃறிணைப் பெயரானால், அஃறிணைப் பெ
By ஆராதி
9/19/2010 7:52:00 AM
கருத்துக்கள் நான் தமிழை இரண்டாம் மொழியாக, பல ஆண்டுகளாகக் கற்பித்து வருகிறேன். வல்லெழுத்து மிகும் இடங்களை எளிய முறையில் அவர்களுக்குக் கற்றுத்தந்து ஒரளவு வெற்றியும் கண்டேன். அதே சமயத்தில் வல்லொற்று மிகா இடங்களையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். நான் கற்பித்த முறை இதுதான். 1) இரு பெயர்ச் சொற்களுக்கு இடையே ( தமிழ்ப்பாடம்) 2) இரு வினைச்சொற்களுக்கு இடையே ( பார்த்துப்பேசு) 3) இரண்டாம் வேற்றுமை உருபுக்கும் நான்காம் வேற்றமை உருபுக்கும் பின்னர் ( அவனைக்கண்டேன், எனக்குக்கொடு) 4) ஆக. ஆய் ஏற்ற சொற்களுக்குப்பின்னர் ( வருவதாய்சொன்னான், பார்ப்பதாகக் கூறினான்) 5) ஒரு வாசிப்புப் பகுதியைக் கொடுத்து முதலில் இந்த ஆறு இடங்களையும் இனங்கண்டு அடிக்கோடிடக் கற்றுத் தந்தேன். அவர்கள் கற்றுக் கொண்ட பிறகு மற்றவற்றைக் கற்றுத்தந்தேன். meenal devaraajan
By meena;
9/13/2010 9:43:00 AM
ஆனால், ‘சின்னக் கண்ணன்’ சரிதானே?
By பசுபதி
9/13/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue