தமிழ் வளர்ச்சிக்கு உகந்த படைப்புகள் வெளிவர நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது. இதற்காக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை அச்சிட்டு வெளியிட தமிழ் வளர்ச்சித் துறை நிதி உதவி அளித்து வருகிறது. தமிழ் வளர்ச்சித் துறையின் தர விதிகளுக்கு உள்பட்டு தகுதியுடைய எழுத்தாளர்களின் படைப்புகள் நிதி உதவி பெறுவதற்குத் தேர்வு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு சராசரியாக 25 எழுத்தாளர்களின் படைப்புகள் இதன் மூலம் வெளியிடப்படுகின்றன. அதேபோல, தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, ஒவ்வோர் ஆண்டும் முப்பது துறைகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்த நூல்களுக்கு வழக்கமான நூலக ஆணைகள் தவிர, பொது நூலகங்களுக்குச் சிறப்பாணைகளாகவும் கூடுதல் எண்ணிக்கையில் பரிசு நூல்களின் பிரதிகள் வாங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகள் வழங்கப்பட்ட நூல்களுக்குக்கூடப் பொது நூலகத் துறையில் நூலக ஆணை விடுபட்டுள்ளன. தரமான நூல்கள் என, தமிழ்வளர்ச்சித் துறையால் தேர்வு செய்யப்பட்டு, நிதி உதவி அளிக்கப்பட்டு, அதன் மூலம் வெளியாகும் நூல்களில் பல நூல்கள் நூலகத்துறையால் தேர்வு செய்யப்படுவதில்லை. நிதி உதவி அளிக்க, நாங்கள் தேர்வு செய்ததாலேயே அந்த நூல்களை நூலகத்துறை வாங்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை என்கிறது தமிழ் வளர்ச்சித் துறை. தமிழ்வளர்ச்சித் துறை நிதி உதவி மூலம் வெளியானவை என்று நூல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறைகள் இல்லை என்கிறார்கள் நூலகத்துறையினர். தரமானவை என்று தமிழ் வளர்ச்சித் துறை தேர்வு செய்து, நிதி உதவி அளிக்கும் படைப்புகளும், சிறந்த நூல்கள் என்று தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கப்பட்ட நூல்களும் நூலகத் துறையால் நிராகரிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர் படைப்பாளர்கள். நல்ல நூல்கள் நூலகங்களுக்குச் சென்றடைந்தால்தானே மக்களுக்குப் பயன்படும்!******சிறந்த பாடல்களைக் காப்பதும் தொகுப்பதும் அடுத்த தலைமுறைக்கு அவற்றைச் சேர்ப்பதும் கற்றவர் செய்ய வேண்டிய பணிகள் என்ற எண்ண ஓட்டம் முன்பே இருந்தது கண்டு வியக்க வேண்டி உள்ளது. சொல்லப்போனால், சங்க இலக்கியமேகூட ஒரு தொகைநூல் தானே! அப்படிப்பட்ட ஒரு பணியைத்தான் சைவ சமயத்துக்கு நம்பியாண்டார் நம்பி செய்தார். பன்னிரு திருமுறைகள் தொகுப்பில் பதினோரு திருமுறைகள்வரை அவர்தான் தொகுத்தார். அவருக்குப் பின்னால் வந்த சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணத்தைப் பன்னிரண்டாவதாகச் சேர்த்து அதைப் பிற்காலச் சான்றோர் நிறைவு செய்தனர். பன்னிரு திருமுறைகள் வரிசையில் முதல் மூன்றும் சம்பந்தர் பதிகங்கள். நான்கு, ஐந்து, ஆறு ஆகிய திருமுறைகள் நாவுக்கரசரின் பதிகங்கள். ஏழாவது சுந்தரர் பாடியது. ஏறக்குறைய எட்டாயிரம் பாடல்களைக் கொண்ட இந்த மூவர் பதிகங்களே "தேவாரம்' எனப்படும். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாவது திருமுறையுள் வைக்கப்பட்டன. பத்தாம் திருமுறை என்று போற்றப்படும் திருமூலர் பாடிய திருமந்திரம், பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் இரண்டும் தனியாசிரியர்கள் பாடிய தனி நூல்கள் என்ற சிறப்பிடம் பெற்றுள்ளன. ஒன்பதாம் திருமுறையும், பதினோராம் திருமுறையும் தனியான அருளாளர்கள் பாடியவை அல்ல. பலருடைய பாமாலைகளின் தொகுப்புகளாக உள்ளன. ஒன்பதாம் திருமுறையின் ஆசிரியர்கள் ஒன்பதின்மர். அவர்கள் திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் முதலியோர் ஆவர். ஒன்பதாம் திருமுறை, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு எனப் போற்றப்படுகிறது. இந்நூலுள் 28 திருவிசைப்பா பதிகங்களும் ஒரு திருப்பல்லாண்டுப் பதிகமும் அடங்கியுள்ளன. பாடல்கள் மொத்தம் 301. பாடப்பட்ட தலங்கள் 14. இதில் உள்ள 28 பதிகங்களும் 10 அகத்துறையில் அமைந்தவை. மூன்றில் ஒரு பங்கு பதிகங்கள் (10) கருவூர்த்தேவரால் பாடப்பட்டவை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இருந்து "இராமலிங்கம் அபிராமி' அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காக முனைவர் கி.சுப்பிரமணியன் (ஐ.கே.எஸ்.), ஒன்பதாம் திருமுறையை எடுத்துக் கொண்டார். அந்த உரைகள் இப்போது தொகுக்கப்பட்டு ""நீறணி பவளக் குன்றம்'' என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. பத்து தலைப்புகளில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது வெறும் ஒன்பதாம் திருமுறை ஆய்வு நூல் அல்ல. அப்படியே சாறு பிழிந்து தரப்பட்டிருக்கும் கையேடு!******புதிய தீபாவளி மலர்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, சில கவிதைகளைப் படிக்க நேர்ந்தது. ஏதோ குறைகிறதே என்று நெஞ்சில் ஒரு நெருடல். இந்த வருடம் "கல்கி' தீபாவளி மலர் வரவில்லையே என்கிற ஆதங்கம்தான் அந்த நெருடலுக்குக் காரணம். "கல்கி' தீபாவளி மலர் என்று சொன்னதும் பொறி தட்டியது. 15 ஆண்டுகளுக்கு முந்தைய "கல்கி' தீபாவளி மலரில் பொன்மணி வைரமுத்து, "வாசிப்பு' என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்தக் கவிதை நினைவில் நிற்கிறது. அதற்கு ஓவியர் ஜெயராஜ் வரைந்திருந்த படமோ கண்ணில் நிற்கிறது. பொன்மணி அவரது பெயர் மட்டுமல்ல. அவர் எழுதியிருந்த கவிதையின் ஒவ்வொரு எழுத்தும் பொன்மணி! அந்தக் கவிதையிலிருந்து சில வரிகள் இதோ-நானொன்றும்நாதஸ்வரம் வாசிக்கவோபுல்லாங்குழல் வாசிக்கவோபிரியப்படவில்லை-நூல் வாசிக்கும் ஆசைமட்டும்நாள்தோறும் வளர்கிறது.கதைகவிதைகட்டுரைஎதுவாயிருப்பினும்மகிழ்ச்சி-சிறகுகட்டிக்கொள்ளும்மகிழ்ச்சி!சற்றுமுன் தின்ற பசும்புல்லைஆசுவாசமாய் அசைபோடும்பசுவைப்போல்படித்ததை நினைக்க நினைக்கஆனந்தம் பிறக்கிறது.நூல் ஒரு விநோதம்-படைத்தவன்சொன்னதைச் சொல்லும்;சொல்லாததையும் சொல்லும்.வாசிப்புபுறத்தில் மறப்புஅகத்தில் விழிப்பு!வாசிப்பு - தனிமைத்தவம்தாய்மடிவானமழைஆழ்கடல்ஊன்றுகோல்ஞானதீபம்தேவகானம்தலைதொட்டு ஆசீர்வதிக்கும்தும்பிக்கை!வாசலுக்கு வெளியேவிரியும் நீலவானம்;என்விருப்பத்திற்குரிய வேப்பமரம்;ஒருகையில் தேநீர்இன்னொருகையில் புத்தகம்-இதைவிடவா ஒரு வாழ்க்கை?!
கருத்துக்கள்
பொன்மணியார் கவிதை அற்புதம். இதனைத் தக்க நேரத்தில் நினைவு கூர்ந்து எழுதியிருப்பது கலாரசிகனின்.இலக்கிய உள்ளத்தைக் காட்டுகிறது. இக கவிதை மூலம் தமிழரிடையே நல்ல,தரமான புத்தக வாசிப்பு மிகுமானால் போதும். தமிழர்கள் உயர்ந்து விடுவர்.
By விஜய திருவேங்கடம்
10/25/2009 11:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/25/2009 11:23:00 PM