"புதுக்கவிதை' ஒரு சொல் - ஓயாத விவாதம்!



"புதுக்கவிதை'-இச் சொல் சரிதானா என்றொரு விவாதம் அவ்வகைக் கவிதைகள் தோன்றத் தொடங்கிய காலந்தொட்டே இருந்துவருகிறது. மரபுக் கவிதைகளை பழைய கவிதைகள் என ஒரு சாரார் அழைத்ததன் விளைவுதான் சந்தங்கள் இன்றி எழுதப்பட்ட கவிதைகள் "புதுக்கவிதைகள்' என அழைக்கப்படலாயிற்றோ என எண்ணத் தோன்றுகிறது. புதுமையுடன் படைக்கப்படும் கவிதைகள் அனைத்துமே புதுக்கவிதைகள்தான். வடிவத்தைப் பொருத்த அளவில் குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் இப்போது புதுக்கவிதைகள் என அழைக்கப்படும் கவிதைகளுக்கு நிகராகவே உள்ளன. ஆனால், சுண்டக் காய்ச்சிய பாலைப்போல, ரத்தினச் சுருக்கமாய் சொற்களைக் கையாண்டு புதுப்புது கற்பனைகளும், உவமைகளும் இழையோடும் விதமாக இயற்றப்பட்ட குறுந்தொகைப் பாக்களை புதுக்கவிதை என்ற பிரிவில் பட்டியலிடுவதை நம்மால் ஏற்க இயலாது. காரணம், புதுக்கவிதை என்றால், அது நீள சொற்றொடரை இஷ்டம்போல ஒடித்து, சொற்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற பிம்பமே நம் நினைவுக்கு வரும். இன்றைக்குப் புதுக்கவிதைகள் என, பெயரளவில் அழைக்கப்படும் கவிதைகளில் பெரும்பான்மையானவை விடுகதை பாணியில் எழுதப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளாகவும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய உவமைகளின் தொகுப்புகளாகவுமே அமைந்துள்ளன. மேலும், அவை சுருங்கச் சொல்லி வாசகனை சிந்தித்துப் பார்த்து சிலாகிக்க வைக்கும் திறன் அற்றவையாகவும் உள்ளன. தற்போது ராமாயணமும் மகாபாரதமும்கூட சந்தமில்லா கவிதை வடிவில் (வசன கவிதை) எழுதப்பட்டு எளிமையாக்கப்பட்டுவிட்டன. இது பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தேனை மடமடவெனக் குடிப்பதுபோலத்தான். அவற்றின் தமிழ் மூல நூலை நாமே வாசித்து, புரிந்துகொண்டு, ஆராய்ந்து பார்ப்பது தனிச்சுவை. அதற்கு ஈடு இணையில்லை. இது, நாமே வளர்க்கும் மலர்த் தோட்டத்தில் தேன்கூடு அமைத்து அதிலிருந்து கிடைக்கும் அடைகளைப் பிழிந்து சொட்டுத்தேனைச் சுவைப்பதுபோல. இரண்டுமே தேன்தான். எனினும் இரண்டுக்கும் தனித்தனிச் சுவை உண்டல்லவா? மரபுக் கவிதை என அழைக்கப்படும் சந்தக் கவிதைகளுக்கு முறையான இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பாடல்களையும் சந்தக் கவிதையாகக் கொள்ளலாம். ஆனால், புதுக்கவிதைகளுக்கோ இதுபோன்ற எதுவும் தெரிந்திருக்கத் தேவையில்லை. நினைத்ததை நினைத்தபடி எழுதினால் போதும் என்றாகிவிட்டதால், புதுக்கவிதைகள் தற்போது புற்றீசல்கள்போல படையெடுத்து வருகின்றன. என்றாலும், அவற்றிலும் புதிய உவமை, புதிய சிந்தனைகள், புதிய சொற்சேர்க்கைகளுடன் காலத்தை வென்று நிற்கும் கவிதைகளும் இருக்கின்றன. "சொல் புதிது, பொருள் புதிது' என்றார் பாரதியார். அதன்படி பார்த்தால் புதிதாக, புதுமையாகச் சொல்லப்படும் கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதைகள்தான். நமது வசதிக்கு ஏற்ப வேண்டுமானால் சந்தக் கவிதை, சந்தமில்லா கவிதை எனப் பிரித்துக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்