வள்ளுவர் சொல்லமுதம் 8 : அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும்
(வள்ளுவர் சொல்லமுதம் 7 : அன்பும் அறமும். 2 : அ. க. நவநீத கிருட்டிணன் – தொடர்ச்சி)
வள்ளுவர் சொல்லமுதம்
அத்தியாயம் 6 விருந்தும் மருந்தும்
‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்பது தமிழில் வழங்கும் திருந்திய பழமொழி. தொன்று தொட்டு விருந்தும் மருந்தும் தொடர்புடையனவாகவே விளங்கி வருகின்றன. ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’, என்பார் அருந்தமிழ் மூதாட்டியார். தெய்வப் புலவராகிய திருவள்ளுவரும்,
” விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.” என்று விருந்தையும் மருந்தையும் பொருந்தவே தெரிந்து கூறினர்.
விருந்து என்னும் சொல் புதுமை என்று பொருள்படும். புதியராய் இல்லம் புகுந்த மக்களே விருந்தினர் என்று போற்றத் தகுவர். இவ் விருந்தினரை உரை யாசிரியராகிய பரிமேலழகர் இருவகைப் படுத்துக் கூறுவார். பண்டறி வுண்மையிற் குறித்து வந்தாரும் அஃதின்மையிற் குறியாது வந்தாரும் எனப் பிரிப்பர். முன்பொருகால் அறிமுகம் ஆனது கருதி வந்தவர், அறிமுகம் இல்லாமலே புதியவராகப் புகுந்தவர் ஆகிய இன்னவரே விருந்தினர் ஆவார்.
இங்ஙனம் புதியராகப் போந்தவரை அன்புடன் வரவேற்றுப் போற்றும் மரபு, பண்டுதொட்டுப் பழங் தமிழ்நாட்டிற்கு உண்டு. இல்லறம் பேணும் நல்லியல்பு உடையார், முதற்கண் போற்றவேண்டிய அறம், விருந்தோம்பலே. ஆதலின், வள்ளுவர் பெருமான் இல்லறவியலில் அன்பினை அடுத்து இவ் அறத்தையே உரைத்தருளினர். இல்லிருந்து பல்பொருளை ஈட்டி வாழ்வதெல்லாம் விருந்தோம்புதற் பொருட்டே என்று தெரிந்துரைத்தார். விருந்தினரைப் பேணாத இழிந்த செயல், செல்வம் இருந்தும் வறுமை யென்றே கூறத் தகும். வீட்டிற்கு வந்த விருந்தினர் வெளியே இருக்கத், தான் உள்ளே சென்று தனித்து உண்பது அமிழ்தமேயெனினும், அச் செயல் விரும்பத்தக்கது அன்று என்று விளம்பினர்.
விருந்தோம்பலின் சிறந்த பயனைக் கூறவந்த செந்நாப்போதார், பல பாக்களில் விதந்து ஒதுகின்றார். நாள்தோறும் நல்விருந்து ஊட்டுவான் வாழ்வு வறுமையோ சிறுமையோ அடைவதில்லை. அவனது இல்லத்தே திருமகள் உள்ளம் விரும்பி உறைவாள். அவனது விளைபுலத்திற்கு வித்தும் இடுதல் வேண்டா. அவன் மறுமையில் வானவர் விருந்தினனாய் வளம் பெற வாழ்வான். ஆகவே, விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று வரையறுத்துக் கூற இயலாது என்பார் தெய்வப் புலவர்.
இவ் அறத்தைப் பேணுவார்க்கு மூன்று பண்பு கள் இன்றியமையாது அமைதல் வேண்டும். அவை மலர்ந்த முகம், இன் சொல், நன்றாற்றல் என்பன. இல் லறத்தான் விருந்தினரைச் சேய்மையில் வரக்கண்டால் மலர்ந்த முகம் காட்டி வரவேற்றல் வேண்டும். அது பற்றி நெருங்கியபோழ்து அன்போடு இன்சொல் வழங்குதல் வேண்டும். இவ் இரண்டன் காரணமாக விருந்துண்ண இசைந்தபோழ்து இனிது உபசரித்து நனுசுவை உணவினை ஊட்டுதல் வேண்டும்.
அனிச்சப்பூ மிகவும் மென்மை வாய்ந்தது. அது மோந்து பார்த்த அளவிலே வாடிப்போகும். மலர்ந்த முகத்தைக் காட்டாதொழிந்தால், அவர் வாட்டமுற்று வந்த வழியே திரும்புவர். ஆதலின், அனிச்சப் பூவிலும் விருந்தினர் மெல்லியர் என்று வள்ளுவர் சொல்லுவார்.
” மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து ” என்பது அவரது பொய்யாமொழி. செந்தமிழ் நாட்டினர் விருந்தினரைச் சிறந்த முறையில் பேணுவர். பெண்களே இச் செயலில் பெருத்த கவனத்தைச் செலுத்துவர். வீட்டில் ஆடவர் இல்லாத வேளையில் விருந்தினர் எவரேனும் வருவ ராயின் பெண்டிர், தம் பிள்ளைகளைக் கொண்டு வர வேற்று உபசரித்து அனுப்புவர். இச்செய்தியைச் சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் போன்ற பழந் தமிழ் நூல்களில் காணலாம். கற்பரசியாகிய கண்ணகி, தன் கணவனைப் பிரிந்து வாழ்ந்த நாளில் தனக்கு ஏற்பட்ட குறைக ளாகச் சில செய்திகளைக் குறிப்பிடுகின்றாள்.
” அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை.” என்று கண்ணகி கோவலன் பால் கவன்று கூறுகின்றாள். அறவோரையும் துறவோரையும் அந்தணரையும் விருந்தினரையும் போற்றாத குறையே பெருங் குறையென அவள் வருந்திப் பேசினாள். விருந்து போற்றும் சிறந்த அறம் பழந்தமிழ் முன்னோரால்
பெரிதும் பாராட்டப்பெற்றது என்பதைத், “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்,” என்ற தொட ரால் இனிது உணரலாகும். – இலங்கை வேந்தனகிய இராவணனால் அசோக வனத்தில் சிறை வைக்கப்பெற்ற சீதை, இராம பிரானைப் பலவாறு நினைந்து உள்ளம் வருந்தினாள். அங்ஙனம் வருந்தும் வேளையில்,
“விருந்து கண்டபோது என்னுறு மோவென்று விம்மும்” எனவும் கவியரசராகிய கம்பர் கட்டுரைத்தார். மேலும் கோசல நாட்டு மகளிர் மாண்பைக் கூறவந்த கம்பர் பெருமான்,
பெருந்தடங்கண் பிறைநுத லார்க்கெலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்(கு) ஈதலும் வைகலும்
விருந்து மன்றி விளைவன யாவையே என்று பாடியருளினர். கோசல நாட்டுக் கோதையர் செல்வத்தாலும் கல்வியாலும் சிறந்து விளங்கினர். ஆதலின் வருந்தி வந்த வறுமையாளர்க்குப் பொருளை வழங்கினர்; நாள்தோறும் தமது வீட்டை நாடிவந்த விருந்தினரை விரும்பிப் பேணினர். கண்ணன்ன கணவருடன் ஊடிய காதல் மகளிர், தமது ஊடல்காலத்தில் விருந்தினர் வீட்டை அடைந்துவிட்டால் அதனை மறந்து உபசரிப்பர். ஆடவர், தம் மனைவியர் கோபமாக இருத்தலை அறிந்தால் அதனைத் தணித்தற்கு விருந்தினரை உடன் அழைத்து வருதலும் உண்டு. இதனை, “விருந்து கண்டு ஒளித்த ஊடல்,” என்று பழந்தமிழ் நூல்கள் பாராட்டும். –
விருந்தோடு பொருந்த மருந்தை உரைத்த திரு வள்ளுவர் அதனைச் சாவா மருந்தெனச் சாற்றினர். தேவாமுதமே சாவா மருந்தெனக் கூறுவர் உரை யாசிரியர். உடம்புள் தங்கிய உயிரைக் காத்து ஒம்புதற்கு உற்ற மருந்தாய் உதவுவது உணவே ஆகும்.
பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென
ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென்‘ என்று மணிமேகலைக் காப்பியம் இயம்பும். பசிப்பிணி அறுக்கும் அமுத நல்லுணவே ஆருயிர்க்கு மருந்தாய் அமையும். உணவே உயிரைக் காக்கும் ஒப்பற்ற மருந்தாகத் திகழ்வதை அக் காப்பியம் நன்கு வலி யுறுத்தும்.
“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்(கு) எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” என்று போற்றுவர் சீத்தலைச்சாத்தனார். பாண்டிய நாட்டுப் பொதிய மலையில் உயிரை நீடு வாழ்விக்கும் உயர்ந்த மருந்தாகச் சில கனிகள் காணப்பெற்றன. அவற்றுள் பன்னீராண்டுகட்கு ஒருமுறை பழுப்பதாகிய நாவற்கனி ஒன்று. மற்றொன்று அதியமான் பெற்ற அமுத நெல்லிக்கனி, நன்மருந்தாய் அமைந்த நாவற்கனி, தன்னை உண்டவரது பன்னீராண்டுப் பசியை அகற்றவல்லது. பெருங் குலைப் பெண்ணையின் கருங்கனியன்ன பருமன் உடை யது. இதனைப் பற்றிய வரலாறு ஒன்று மணிமேகலை நூலுள் பேசப்படுகின்றது. தமிழ்முனிவன் வாழும் அப் பொதியமலையில் விருச்சிகன் என்றொரு முனிவன் பெருந்தவம் புரிந்தான். பன்னீராண்டுகட்கு ஒருமுறை நெடுந்தவம் முடிந்து நீள்பசி ஆற்றுவான். அவனது பெரும் பசியை அம் மலைக்கண் பன்னீராண்டுகட்கு ஒரு முறை பழுப்பதாகிய நாவற்கனியே அகற்றி வாழ்விக்கும். ஒருகால் தனது நெடுந்தவம் நீங்கிய அருந்தவன், அமுத நாவற்கனியைக் கொய்து, தேக்கிலை ஒன்றில் பொதிந்து, காட்டாற்றின் கரைமீது அதனை வைத்து நீராடப் போந்தான். அவ்வழியே வந்த கந்தருவ நாட்டுப் புதுமணமகளாகிய காயசண்டிகை என்பாள், அக்கனியைக் காலால் மிதித்துச் சிதைத்துவிட்டாள். அவளது செயலைக்கண்ட அருந்தவன் பெருஞ் சினம் கொண்டான். பருங்கனி சிதைத்த பாவையைப் பன்னீராண்டு தன்னைப்போல் பெரும்பசியால் நலிந்து உழலுமாறு சபித்தான். அச் சாபத்தின் வலிமையால் காயசண்டிகை பன்னீராண்டுகள் இன்னலுற்று வருந்தினாள். பின்னர், மணிமேகலை அமுதசுரபியினின்று எடுத்து வழங்கிய இன்னமுதை உண்டு, பசி ஒழிந்தாள் என்று மணிமேகலைக் காப்பியம் இயம்பும்.
அரும்பசி அகற்றும் அமுத நாவற்கனியைப் போன்றே, பல்லாண்டு வாழ்விக்கும் அமுத நெல்லிக் கனி ஒன்று அப் பொதியமலைக்கண் விளங்கிற்று. மலையில் வாழும் புளிஞரும் எளிதில் நெருங்க முடியாத மலைஉச்சியில் பெரும்பாறைப் பிளவினில் அவ் அமுதக் கனியைத் தரும் நெல்லிமரம் நீண்டு வளர்க் திருந்தது. அதன் பேராற்றலைத் தவமுனிவர் வாயி லாக, வள்ளல் அதியமான் அறிந்தான். அக் கனியைக் கொய்துவர ஆட்களை ஏவினான். அவரது பெரிய முயற்சியின் பயனாக அரிய கனியைப் பெற்றான். அந்தக் கனியைத் தனது அங்கையில் வைத்து அதன் அருமையை நோக்கிக்கொண்டிருந்தான். இந்த வேளையில் செந்தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையார், அதியமானைக் காண வந்தார். தனது அரண்மனைக்கு விருந் தினராக எழுந்தருளிய தமிழ் மூதாட்டியாரைத் தக்க முறையில் போற்ற, மிக்க ஆவல்கொண்டான் அதிய மான். தான் அரிதாக முயன்றுபெற்ற அமுத நெல்லிக்கனியை அவருக்கே அளித்து உண்பிக்க விழைந்தான்.தமிழன்னையே! இக் கனியை உண்டருள்க, என்று அம் மூதாட்டியாரின் கையில் அன்புடன் வழங்கினான்.
அமுதக்கனியினை உட்கொண்ட ஒளவையார், அதனது அருஞ்சுவையைக் கண்டு வியந்தார்; மகிழ்ந்தார். இஃதென்ன இந் நெல்லிக்கனி சாதாரணக் கனியன்றே? தெவிட்டாத தெள்ளமுதத் தீங்கனி யாக அன்றோ இருக்கின்றது f இதன் வரலாறு என்ன?’ என்று பரபரப்புடன் வள்ளலை வினவினார். அதியமான், அக்கனியின் பெருமையையும் வந்த வரலாற்றையும் தெளிவுற உரைத்தான். அருமருங் தன்ன அமுத நெல்லிக்கனியை அளித்து விருந்து போற்றிய அவனது பெருந்தகைமையை நினைந்து நினைந்து உள்ளம் கசிந்தார். அவனது அருங் குணத்தை அகமகிழ்ந்து வாயாரப் புகழ்ந்தார்:
“ போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைதுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்(று) ஒருவன் போல
மன்னுக பெரும, நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்(து) அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்(து) அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே’
என்பது அம் மூதாட்டியாரின் அமுதமொழி. பெருமானே! பெரிய மலையின் விடரகத்தே விளைந்த நறுங்கனியின் அருமையைக் கருதாது, பெரும்பயனை யும் குறியாது என்பால் உவந்து கொடுத்தனையே! உனது பெருமையை எவ்வாறு எடுத்துப்பேன்? பாற்கடலில் தோன்றிய அமுதினை மற்றவர்க்குப் பரிந்தளிதது, நஞ்சினைத் தானுண்ட நம்பனைப்போல நானிலத்து மன்னி வாழ்வாயாக!’ என்று அதியமான இதயம் குளிர்ந்து வாழ்த்தியருளினார்.
இங்ஙனம் தமிழகத்தே வாழ்ந்த வள்ளல்களும், தண்ணருள் நிறைந்த செல்வர்களும் மருந்தனைய அரும்பொருளையும் விருந்தினர்க்கு உவந்துகொடுத்து மகிழ்ந்தனர். தந்தையை இழந்து பெருந்துயர் உழந்த பாரி மகளிர், தம் குடிசைக்கு நள்ளிருளில் பெருமழை யில் நனைந்து வந்த தமிழ்மூதாட்டியாராகிய ஒளவை. யாருக்குக் கீரை உணவைப் பேரின்பமுடன் ஊட்டினர். அகமும் முகமும் மலர்ந்து அமுதூட்டிய அம். மகளிர் மாண்பை,
“அடகென்று சொல்லி எனக்கு ஆரமுதை இட்டார்
கடகம் செறிந்தகை யார்” – என்று மனமுவந்து பாராட்டினார்.
(தொடரும்)
வள்ளுவர் சொல்லமுதம்
வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்
Comments
Post a Comment