Skip to main content

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள்

 




(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 2 : தமிழர் படைத்திறம் – தொடர்ச்சி)

தமிழர் வீரம்

இசைக்கருவிகள்

போர்க்களத்தில் வீர வெறியூட்டும் இசைக்கருவிகள் பல இருந்தன. பறையும் பம்பையும், திட்டையும் தடாரியும், முழவும் முருடும், கரடிகையும் திண்டியும் அத்தகைய கருவிகள்.12 அவற்றின் பெயர்கள் ஒலிக் குறிப்பால் அமைந் தனவாகத் தோன்றுகின்றன. பம்பம் என்று ஒலிப்பது பம்பை; முர்முர் என்று ஒலிப்பது முருடு; கரடிபோல் கத்துவது கரடிகை. இவ்விசைக் கருவிகள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் பொழுது வீரரது தலை கறங்கி ஆடும்; நரம்புகளில் முறுக்கேறும்; போர் வெறி பிறக்கும்; வீரம் சிறக்கும்.

மறவர்

மனத்திண்மை வாய்ந்த வீரரை மறவர் என்று அழைத்தனர் பழந் தமிழர். அவர் கல்லெனத் திரண்ட தோளர்; கட்டமைந்த மேனியர்; முறுக்கு மீசையர்; தருக்கு மொழியினர்; வீறிய நடையினர்; சீறிய விழியினர்.

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர், பழிஎனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்.”13

பேராண்மை

போர்க்களத்தில் முன் வைத்த காலைப் பின் வைத்தலறியாத மறவரே சுத்த வீரர். தம்மை நோக்கி வரும் படைக்கலத்தைத் துச்சமாகக் கருதுவது அவர் இயற்கை. படைக்கலம் வரும் போது விழித்த கண் இமைத்தல் அவர் வீரத்திற்கு இழுக்கு.14

அன்னார் மாற்றாரது படைக்கலத்தாற் பெற்ற வடுக்களைப் பொன்னினும் மணியினும் மேலாகப் போற்றுவர்; அவற்றைப் புகழின் சின்னமாகக் கருதிப் பெருமை கொள்வர்.

தழும்பன்

முன்னாளில் தழும்பன் என்ற பெயருடைய தலைவன் ஒருவன் தமிழ் நாட்டில் வாழ்ந்தான். அவன் முகத்திலும் மார்பிலும் அடுக்கடுக்காக வடுக்கள் அமைந்திருந்தன. வேலாலும் வில்லாலும் மாற்றார் எழுதியமைத்த வீரப்படம்போல் விளங்கிற்று அவன் கட்டமைந்த மேனி. பகைவர் படைக்கலத்தால் உழுது வீரம் விளைத்த உடம்பினைப் பார்த்துப் பார்த்து இன்புற்றான் அவ் வீரன்; ஒவ்வொரு தழும்பின் வரலாற்றையும் பேசிப் பேசி பெருமிதம் அடைந்தான். நாளடைவில் அவனுடைய இயற்பெயர் மறைந்து போயிற்று. தழும்பன் என்ற சிறப்புப் பெயரே அவற்குரியதாயிற்று. தமிழ்ப் பெருங் கவிஞராகிய பரணர் முதலியோர் அவன் பேராண்மையை வியந்து பாடினர்.15

புலிப் பல்

போர் ஒழிந்த காலங்களில் கருங்கை மறவர் காட்டினுள்ளே போந்து கடும் புலிகளைத் தாக்குவர். அவற்றின் வாயைக் கிழிப்பர்; பற்களைத் தகர்ப்பர்; வெற்றிப் பரிசாகிய அப் பற்களைக் கோத்துத் தம் குல மாதர்க்கு அணிகலனாகக் கொடுப்பர். அதுவே மறக்குடி மாதர் மதித்த நற்பரிசு.

மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற

மாலை வெண்பல் தாலி” என்று பழந்தமிழ்க் கவிதை அதன் பெருமையைப் பாடிற்று.16

புலிகடிமால்

முன்னாளில் கடும்புலி வாழும் காட்டிலே முனிவர் ஒருவர் தவம் புரிந்திருந்தார். அவர்மீது பாய்வதற்குப் பதி போட்டது ஒரு பெரும் புலி. வீரம் வாய்ந்த தமிழ் மகன் ஒருவன் அப்போது அவ் வழிப் போந்தான்; புலிக்கும் முனிவருக்கும் இடையே பாய்ந்தான்; அவ்விலங்கைக் கொன்று முனிவர் உயிரைக் காத்தான். அன்று முதல் ‘புலிகடிமால்‘ என்று தமிழகம் அவனைப் புகழ்வதாயிற்று. அவன் குடி வழியில் வந்த தலைவர்க்கெல்லாம் அது பட்டப் பெயராக வழங்கிற்று.17

வீரப் பெயர்

இன்னும், அந் நாளில் பல வகையான வீரப் பெயரிட்டு வாழ்ந்தனர் தமிழர். வேங்கை மார்பன் என்பது ஒரு சிற்றரசன் பெயர். அச்சொல்லிலே வீரம் வீறுகின்றது. இன்னும் விறல் மிண்டன், கோட்புலி முதலிய பெயர்களும் ஆடவர் பெயர்களாக அமைந்தன.18 சிங்கன் என்ற பெயரும் அக்காலத்தில் வழங்கிற்று. பொதியமலைக்கருகே சிங்கன் என்ற தலைவனால் ஆளப்பட்ட பாளையம் சிங்கன்பட்டி என்று பெயர் பெற்றது. புலமை சான்ற திருவள்ளுவரின் நண்பராகத் திகழ்ந்த தமிழ்ப்பெருமகன், ஏலேல சிங்கன் என்னும் பெயர் பெற்றிருந்தான் என்பர். இவ்வாறு வீரப் பெயர்பூண்டு, வீரம் விளைத்தனர் பண்டைத் தமிழர்.

கொற்றவை வழிபாடு

தமிழ் வீரர் வணங்கிய தெய்வம் கொற்றவை ஆகும். வெற்றி தரும் தாயே கொற்றவை என்று பெயர் பெற்றாள்.

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி

வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை19

யின் கோயில் தமிழ் நாட்டுப் பாலை வனங்களிலும் மலைகளிலும் சிறந்து விளங்கிற்று. ஆனைமலைத் தொடரில் உள்ள அயிரை என்னும் குன்றின்மீது கொற்றவையின் கோயில் ஒன்று முற்காலத்தில் இருந்தது. மன்னரும் மறவரும் அங்கே குருதிப் பலி கொடுத்து வழிபாடு செய்தார்கள். நாளடைவில் அயிரை மலை என்ற பெயர் ஐவர்மலை என மருவிற்று. பஞ்சபாண்டவர் என்னும் ஐவர்க்கும் உரியது அம் மலை என்ற கதை எழுந்தது. அதற்கு இசைய அங்கிருந்த கொற்றவை ஐவர்க்கும் தேவியாய பாஞ்சாலி என்று அழைக்கப் பெற்றாள்.20

வீரத்தாய்

வீரத்தைப் பெண்ணாக வழிபட்ட பெருமை தமிழருக்கு உரியதாகும். இம் மாநிலத்தில் ஆதி சக்தியாக அமைந்தவள் கொற்றவை. பழமைக்குப் பழமையாய்த் திகழ்பவள் அவளே. தமிழகத்திற் படை வீடுகொண்டு அருள் புரியும் வீர முருகனை ஈன்ற தாய் அவளே. அரந்தை கெடுத்து வரம் தரும் திறம் வாய்ந்தவள் அவளே.21

(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்

++++++++++++++++++++++++++++++++

குறிப்புகள்

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை” – திருக்குறள், 761. இவனைப் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தில் பாலைக் கௌதமனார் பாடியுள்ளார்.  சோழர்கள் – நீலகண்ட சாத்திரியார், இரண்டாம் பாகம், முதல் பகுதி, ப. 230. வேள்விக்குடிச் செப்பேடுகள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே வரையப்பெற்றன. புறநானூறு, 9. நெட்டிமையார் பாட்டு. ஆபத்து வேளையில் அஞ்சல் என்று அருள் புரியும் முருகவேளை “வேளைக்காரப் பெருமாள்” என்றார், அருணகிரிநாதர். “புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோட் டக்க துடைத்து” என்ற திருக்குறள் ஈண்டுக் கருதத் தக்கது. புறநானூறு, 290. “உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது” – திருக்குறள், 762. “அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகைப் பதிகத்திலே பாடினார், சுந்தரமூர்த்தி. சீவக சிந்தாமணி, 468. “வட்டுடை-முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடை விசேடம்” என்றார் நச்சினார்க்கினியர்.

12. போர்க்களத்தில் முழங்கும் கருவிகளை ஒரு பாட்டில் தொகுத்துரைத்தார் வில்லி. அதனை வில்லி பாரதம், பதினேழாம் போர்ச் சருக்கத்திற் காண்க.

13. புறநானூறு, 182.

14. “விழித்தகண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் ஒட்டன்றோ வன்கண் அவர்க்கு” என்றார் திருவள்ளுவர். பகைவர் எறிந்த வேல் தன்னை நோக்கி வரும்போது கண்ணிமைத்தல் தோல்வியாகும் என்பது இக்குறளின் கருத்து. தமிழ்நாட்டுச் சிறுவர் ஆடும் விளையாட்டில் இக் கருத்தை இன்றும் காணலாம்.

“எனக்குப் பயப்படுவாயா, மாட்டாயா,” என்று ஒருவன் கேட்பான். “பயப்பட மாட்டேன்” என்று மற்றவன் சொல்வான். “அப்படியானால் கண்ணை விழித்துக் கொண்டு என் முன்னால் நில்” என்பான். அப்படி மற்றவன் நின்றவுடனே இவன் தன் இரு கைகளையும் ஓங்கித் தட்டுவான். அப்போது அவன் கண்ணை மூடி விழித்தால் தோல்வி; கண்ணிமையாமல் நின்றால் வெற்றி.

15. பெரும் புண்ணால் அழகு பெற்ற தழும்பன் என்ற கருத்தமைத்துப் பாடினார் பரணர். “இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் ஏர் தழும்பன்” – நற்றிணை, 300 நக்கீரரும் இதனைப் பாடினர்.

16. சிலப்பதிகாரம், வேட்டுவ வரி, 27-28.

17. புறநானூறு – 201.

18. “அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்.” – சுந்தரமூர்த்தி தேவாரம், திருத்தொண்டத் தொகைப் பதிகம்.

19. சிலப்பதிகாரம்: வேட்டுவ வரி, 63-64.

20. ‘சேரன் செங்குட்டுவன்,’ ப.181. பழனியிலிருந்து ஏழு கல் தூரத்திலுள்ள ஐவர் மலையில் நூற்று அறுபதடி நீளமுள்ள குகையும், பழங்கோயிலும் உள்ளன. எம்.எம்.6.714.21(M.M.III,724.)

21. திருமுருகாற்றுப்படை, முருகனை “வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவன்” என்றும், “பழையோள் குழவி” என்றும் குறிக்கின்றது.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்