Skip to main content

தமிழ் வளர்த்த நகரங்கள் 16 – அ. க. நவநீத கிருட்டிணன்: தமிழ் வளர்த்த நெல்லை

 




(தமிழ் வளர்த்த நகரங்கள் 15 – அ. க. நவநீத கிருட்டிணன்: நெல்லைக் கோவிந்தர் – தொடர்ச்சி)

தமிழ் வளர்த்த நெல்லை


மதுரை மாநகரில் பாண்டியர்கள் தமிழை வளர்த்தற்கு அமைத்த கடைச்சங்கம் மறைந்த பிறகு தமிழகத்திலுள்ள பல நகரங்களிலும் வாழ்ந்த வள்ளல்களும் குறுநில மன்னர்களும் தமிழைப் பேணி வளர்த்தனர். ஆங்காங்குத் தோன்றிய தமிழ்ப்புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சமயத்தைக் காத்தற்கென்று முன்னேர்களால் நிறுவப்பெற்ற அறநிலையங்களாகிய மடாலயங்களும் சமயத் தொடர்புடைய தமிழ்ப் பணியை ஆற்றின. அவ்வகையில் திருவாவடுதுறை ஆதீனமும் தருமபுர ஆதீனமும் திருப்பனந்தாள் ஆதீனமும் தலைசிறந்து நிற்பனவாகும்.

ஈசான தேசிகர்

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த கிளை மடம் ஒன்று நெல்லைமாககரில் உண்டு. அது மேலைத் தேர் வீதியில் அமைந்துள்ளது. அத் திருமடத்தை ஈசான மடம் என்றும் இயம்புவர். அதில் சுவாமிநாத பண்டிதர் என்னும் தமிழ் முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரை ஈசான தேசிகர் என்றும் கூறுவர். அதனாலேயே இவர் தங்கியிருந்த திருமடம் ஈசான மடம் எனப்பட்டது. இவர் இலக்கண இலக்கியப் புலமை சான்றவர். வடமொழிப் புலமையும் வாய்க்கப் பெற்றவர். இவர் நெல்லையில் வாழ்ந்த சைவச் சிறார்க்குச் செந்தமிழ் அறிவை ஊட்டி வந்தார். இவர் பால் தமிழ் பயின்றவர்கள் இலக்கணப் புலமையிற் சிறந்து விளங்கினர். நன்னூல் என்னும் இலக்கணச் சின்னூலுக்கு உரைவரைந்த சங்கர நமச்சிவாயர் என்பார் ஈசான தேசிகரிடம் தமிழ் பயின்றவரே. சங்கரநமச்சிவாயரும் நெல்லை நகரத்தைச் சேர்ந்தவரே.

மயிலேறும் பெருமாள்

இவர்கள் வாழ்ந்த பதினேழாம் நூற்றாண்டில் நெல்லைமாநகரில் வாழ்ந்த மற்றாெரு பெரும்புலவர் மயிலேறும் பெருமாள் பிள்ளையென்பார். இவர் கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவர் ; சிவபத்தி மிக்க சிலர் : துறைசை யாதீனத்துடன் தொடர்பு கொண்டவர்; ஆதீனச் சீடருள் சிறந்தவர்; தமிழ்ப் புலவரை ஆதரிக்கும் அருள் வள்ளலாகவும் விளங்கினார் ; கல்லாடம் என்னும் நூலுக்கு நல்லுரை வகுத்த நாவலருமாவர். இவர் ஈசான தேசிகருக்கு நேசமான நட்பாளராக விளங்கினர்.

தேசிகரின் நூல்கள்

சங்கர நமச்சிவாயரைப் போன்ற சான்றார்களைத் தோற்றுவித்த ஈசானதேசிகர் இலக்கணக் கொத்து, தசகாரியம், சிவஞானபோதச் சூரணிக்கொத்து, கடம்ப நாத புராணம், திருச்செந்திற் கலம்பகம் போன்ற நூல்களை இயற்றித் தமிழையும் சைவத்தையும் வளர்த்து வந்தார்.

வடமலையப்பர்

திருச்சிராப்பள்ளியில் சொக்கநாத நாயக்கர் அரசாண்ட காலத்தில் நெல்லை நாட்டினை வடமலையப்பப் பிள்ளையன் என்பார், அவரின் பிரதிநிதியாய் இருந்து ஆண்டு வந்தார். இவரைப் பிள்ளையன் என்றே எல்லோரும் சொல்லுவர். கார்காத்த வேளாளர் குலத்தில் தோன்றியவராகிய பிள்ளையன் அரசியல் திறமையுடன் அருந்தமிழ்ப் புலமையும் நன்கு வாய்க்கப்பெற்றவர். இவர் தெய்வ பத்தியும் அருள் நெஞ்சமும் படைத்தவர். அறப்பணிகள் பலவும், கோவில் திருப்பணிகள் பலவும் விருப்புடன் செய்தவர். இத்தகைய பெருஞ்செல்வராகிய பிள்ளையன், தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் தண்ணளியுடையாராய் இருங்தார். இவர் மச்சபுராணம், நீடூர்த் தலபுராணம், புலவராற்றுப்படை போன்ற நூல்களை இயற்றித் தமிழை வளர்த்தார்.

தென்திருப்பேரைத் தீட்சதர்

வடமலையப்பப் பிள்ளையனால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் வரி வசூலிக்கும் பொருட்டுத் தென் திருப்பேரைக்குச் சென்றார். அங்கிருந்த வைணவர்களிற் சிலர் வரி செலுத்தவில்லையென்ற காரணத்தால் அவர்களைத் திருநெல்வேலிக்குக் கொண்டுவந்து சிறையி லிட்டார். அங்ஙனம் சிறைப்பட்டவர்களுள் நாராயண தீட்சதர் என்பாரும் ஒருவர். அச் சிறைக்கூடம் இருந்த தெருவிற்கு இப்போது காவற்புரைத்தெரு என்னும் பெயர் வழங்கிவருகிறது.

குழைக்காதர் பாமாலை

சிறைப்பட்ட நாராயண தீட்சதர் ஒரு செந்தமிழ்ப் புலவர். அவர் எப்போதும் தமிழ் நூல்களைப் படித்து இன்புற்றும், தென்திருப்பேரையில் எழுந்தருளிய மகரநெடுங் குழைக்காதராகிய திருமாலை வழிபட்டும், அவர்மீது கவிதை புனைந்தும் வாழ்வை இன்பமாகக் கழித்துவந்தார். இத்தகைய தீட்சதர், தமக்கு ஏற்பட்ட சிறைவாழ்வைக் குறித்துச் சிந்தை நொந்தவராய் மகர நெடுங்குழைக்காதராகிய திருமாலை உளமுருகி வழிபட்டுத் துயர்நீக்கி யருளுமாறு வேண்டினர்; பெருமாள்மீது நாள்தோறும் பாமாலை புனைந்து கனிந் துருகி முறையிட்டு வந்தார். அவர் சிறையிலிருக்கும் போது பெருமாள் மீது பாடிய பாக்களின் தொகுப்பே ‘குழைக்காதர் பாமாலை’ என்று பெயர்பெற்றது.

தீட்சதர் விடுதலை

தீட்சதர் நாள்தோறும் சிறைக்கூடத்தில் தமிழ்ப் பாடல் பாடிப் புலம்பிக்கொண்டிருப்பதை ஒரு நாள் சிறைக்கூடக் காவல் அதிகாரி கண்டார். அவர் சிறிது தமிழறிவுடையவர். அதனால் தீட்சதர் ஒரு தமிழ்ப் புலவரெனத் தெரிந்து, ஆட்சித் தலைவராகிய பிள்ளையனிடம் செய்தியைத் தெரிவித்தார். உடனே பிள்ளையன் குதிரைமீதேறிச் சிறைக்கூடத்தை அடைந்தார். நற் றமிழ்ப் புலவராகிய நாராயண தீட்சதரைக் கண்டார். அவர் குழைக்காதரை நினைந்துருகித் தமிழ்ப் பாடல் பாடிக்கொண்டிருக்கும் நிலையினைக் கண்டு உள்ளங் கரைந்தார். அவரையும் உடனிருந்த வைணவர்களையும் விடுதலை செய்தார். அவர்களைத் தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். அவர்கள் கொடுக்க வேண்டிய வரியை நீக்கியதுடன் புலவராகிய தீட்சதருடைய நிலங்களை என்றும் வரியில்லாத நிலங்களாகச் செய்துவிட்டார்.

வெள்ளியம்பலவாணரும் சிவப்பிரகாசரும்

நெல்லயைச் சார்ந்த சிந்துபூந்துறைத் திருமடத்தில் வெள்ளியம்பல வாணர் என்னும் தெள்ளிய தமிழ் முனிவர் ஒருவர் தங்கியிருந்தார். இவர் தருமை யாதீனத்தைச் சேர்ந்த தம்பிரான்களுள் ஒருவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் வல்லவர். இவருடைய இலக்கண அறிவைக் கேள்வியுற்ற, காஞ்சிமாநகரைச் சார்ந்த சிவப்பிரகாசர் என்பார் நெல்லை போந்து இவர்பால் தமிழ் பயின்றனர். வெள்ளியம்பலவாணர் ஞானாபரண விளக்கம் முதலிய சமய நூல்களை இயற்றியவர். கம்பரைப்போன்றும் சேக்கிழாரைப் போன்றும் வாக்குநலம் வாய்க்கப்பெற்றவர். அவர்கள் பாடியன போன்றே வேற்றுமை காணவியலாத நிலையில் பல பாடல்களைப் பாடி இடைச்செருகலாகப் புகுத்தும் புலமைநலம் படைத்தவர்.

இம் முனிவர்பால் தமிழ் இலக்கணத்தைப் பயின்று தேர்ந்த சிவப்பிரகாசர் நன்னெறி, திரு வெங்கைக்கோவை, திருவெங்கைக் கலம்பகம், திரு வெங்கையுலா, திருவெங்கையலங்காரம், சோணசைல மாலை, பிரபுலிங்கலீலை, திருச்செந்தில் நீரோட்டக யமக அந்தாதி முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.

குமரகுருபரர் சமயப்பணி

இவர்கள் காலத்தில் நெல்ல நாட்டில் விளங்கிய மற்றாெரு பெருங்கவிஞர் குமரகுருபரர். இவர் முருகன் அருள்பெற்ற தெய்வக் கவிஞராவர்; ஐந்து வயதிலேயே கந்தர் கலிவெண்பா என்னும் செந்தமிழ்ச் சிறுநூலை ஆக்கியருளிய அருளாளர். இவர் காலத்தில் நெல்ல நாட்டில் கிறித்துவ சமயம் காட்டுத் தீப்போல் பரவியது. இத்தாலிய நாட்டிலிருந்து தமிழ்நாட்டில் வந்து புகுந்த வீரமாமுனிவர் என்னும் கிறித்துவப் பாதிரியார் தமிழ்நாட்டு முனிவரரைப் போன்று கோலத்தாலும் சீலத்தாலும் சிறந்து விளங்கிச் சம்யப் பணியாற்றினர். அவர் வீரமுடன் ஆற்றிய கிறித்துவ சமயவுரைகளில் மக்கள் பெரிதும் ஈடுபட்டுச் சமயம் மாறி வந்தனர். இதனைக் கண்ணுற்ற குமரகுருபரர் நெல்லமா நகரை யடைந்து சிந்துபூந்துறைத் திருமடத்தில் தங்கினர். அங்கிருந்துகொண்டே நெல்லமாநகரின் தெற்குத் தேர் வீதியிலும் வடக்குத் தேர் வீதியிலும் முறையே இரு மடங்களை நிறுவினார். அவை மெய் கண்டார் மடம், சேக்கிழார் மடம் என்று பெயர்பெற்றன. மெய்கண்டார் மடத்தில் சைவ சமயச் சாத்திர நூல்களாகிய மெய்கண்ட நூல்களின் உண்மைகள் தக்க அறிஞரைக்கொண்டு விளக்கப்பெற்றன. சேக்கிழார் மடத்தில் பெரிய புராணத்தில் பேசப்பெறும் சிவனடியார்களின் அரிய வரலாறுகள் விரிவுரை செய்யப் பெற்றன. நெல்லமாநகர மக்கள் அனைவரும் திரண்டு சென்று சமயத் தமிழ் விரிவுரைகளைக் கேட்டுச் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுப் பூண்டொழுகினர்.

அழகிய சொக்கநாதரும் நெல்லையப்பரும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நெல்லைமாநகரில் சிறந்து விளங்கிய பெரும்புலவர்கள் இருவர். அவர்கள் அழகிய சொக்கநாதரும், நெல்லையப்பக் கவிராயரும் ஆவர். இவர்களை ஆதரித்த வள்ளல்கள் தளவாய் இராமசாமி முதலியாரும் இராசை முத்துசாமி வள்ளலுமாவர். நெல்லையப்பக் கவிராயர் திருநெல்வேலித் தல புராணம் பாடிய தமிழ்ப்புலவர். அழகிய சொக்கநாதர் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், காந்திமதியம்மை பதிகம், காந்திமதியம்மை கலித்துறை யந்தாதி, நெல்லை நாயகமாலை, முத்துசாமிபிள்ளை காதல் பிரபந்தம், சங்கராயினர் கோயில் கோமதியந்தாதி, வில்லிபுத்துார் கோதையந்தாதி முதலிய பல சிறந்த நூல்களைப் பாடியவர்.

பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம்

இவர் பாடிய காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், நெல்லையப்பர் திருக்கோவிலிலுள்ள காந்திமதியம்மை சந்நிதிக்கண் அமைந்த ஊஞ்சல் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது. அரங்கேற்றப் பேரவைக்குத் தலைமை பூண்ட இராசை முத்துசாமி வள்ளல், புலவருக்குப் பொன்னடை போர்த்தியும், தம் காதுகளில் அணிந்திருந்த விலையுயர்ந்த வைரக் கடுக்கனைக் கழற்றிப் புனை வித்தும் போற்றினர். இப் புலவரின் தந்தையாரான வன்னியப்ப பிள்ளையும் சிறந்த தமிழறிஞரே. அவரிடமே அழகிய சொக்கநாதர் தமிழ் பயின்று தேர்ந்தவர்.

பேராசிரியர் சுந்தரனார்

மனோன்மணியம் என்னும் நாடக நூலை இயற்றி நாடகத் தமிழுக்குப் புத்துயிரளித்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளை நெல்லைமாநகரில் கல்லூரித் தலைவராகப் பணியாற்றும் காலத்திலேயே அந்நூலைப் பாடி முடித்தனர். சென்ற நூற்றாண்டில் நெல்லைமாநகரில் தத்துவ ஞானத்தில் சிறந்து விளங்கிய கோடக கல்லூர்ச் சுந்தர சுவாமிகள் என்னும் பெரியாரை ஞானாசிரியராகப் பெற்று, அவர்பால் ஞான நூல்களைக் கற்றுணர்ந்த சுந்தரம்பிள்ளை, தாம் பெற்ற தத்துவ ஞானத்தின் சாரத்தை மனேன்மணிய நூலில் குழைத் துக் காட்டியுள்ளார்.

இந்த நூற்றாண்டில்

இவ் இருபதாம் நூற்றாண்டில் நெல்லைமாநகரில் சிறந்து விளங்கிய பெரும்புலவர்கள் பலர். நெல்லையைச் சார்ந்த முந்நீர்ப், பள்ளத்தில் தோன்றிய பேரறிஞ ராகிய பூரணலிங்கம் பிள்ளை ஆங்கிலமும் தமிழும் வல்ல பெரும்புலமையாளர். அவர் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் வகுத்துக் கொடுத்த வல்லாளர். இந்நகரில் தோன்றிய, ‘எம்மெல்’ பிள்ளை யென்று தமிழ் வல்லார் போற்றும் பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை கலைநலம் சிறந்த சைவப் பேரறிஞர். வையாபுரிப் பிள்ளை சிறந்த இலக்கிய ஆய்வாளர். சொல்லின் செல்வராகிய இரா. பி. சேதுப்பிள்ளை இனிய செந்தமிழ் நாவலர். இவர்கள் எல்லாருமே தமிழும் ஆங்கிலமும் வல்ல பேரறிஞர்கள். இவர்கள் அரசியற் புறக்கணிப்பு, ஆங்கில அறிஞர்களின் புறக்கணிப்பு, அதிகாரிகளின் புறக்கணிப்புக் களிடையே தமிழைப் புரந்து வந்த சிறந்த கலைஞர்களாவர்.

திருவரங்கனார் பெருமுயற்சி

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந் நகரில் திருவரங்களுரின் பெருமுயற்சியால் தோற்றுவிக்கப் பெற்ற தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தமிழில் பல துறை நூல்களையும் வெளியிட்டுத் தமிழை வளர்த்து வருகிறது. கழகத்தின் உறுப்புகளாக அமைந்துள்ள தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச்சங்கம் இவற்றின் வாயிலாகச் சமயத் தமிழ்ப் பணிகள் பல நடைபெற்று வருகின்றன. இவற்றை இந்நாளில் கழகம் நிறுவிய திருவரங்கனாரின் தம்பியார் வ. சுப்பையாப் பிள்ளையவர்கள் திறம்பட நடாத்தி வருகின்றனர்.

(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்