தமிழ் வளர்த்த நகரங்கள் 15 – அ. க. நவநீத கிருட்டிணன்: நெல்லைக் கோவிந்தர்
(தமிழ் வளர்த்த நகரங்கள் 14 – அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்கோவில் பெருமை – தொடர்ச்சி)..
நெல்லைக் கோவிந்தர்
நெல்லையப்பர் கருவறையைச் சார்ந்து வடபால் பள்ளிகொண்ட பரந்தாமனது கற்சிலையொன்று மிகப் பெரியதாக அமைந்துள்ளது. அவ்விடத்தை நெல்லைக் கோவிந்தர் சந்நிதி என்பர். தமிழ்நாட்டின் பழஞ் சமயங்கள் சைவம், வைணவம் என்ற இரண்டுமாகும். அவற்றுள் ஏற்றத்தாழ்வு காட்டும் இயல்பு நம்மவரிடம் இல்லை. அவரவர் பக்குவ நிலைக்கேற்பப் பின் பற்றி யொழுகும் சமயங்கள் அவை என்பதை வலி யுறுத்துவதுபோல் நெல்லையப்பரும் நெல்லைக் கோவிந்தரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர்.
தாமிர சபை
சுவாமி கோவில் இரண்டாவது உள் சுற்று வெளியின் மேற்குப் பகுதியில் காணப்படும் தாமிர சபை மற்றாெரு தனிச் சிறப்புடையது. தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் ஐந்து சபைகளில் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றான். தில்லைப் பொன்னம்பலத்திலும், திருவாலங்காட்டு இரத்தின சபையாகிய மணிமன்றத்திலும், மதுரையில் இரசித சபையாகிய வெள்ளியம்பலத்திலும், நெல்லைத் தாமிர சபையாகிய செப்பு அம்பலத்திலும், குற்றாலச் சித்திர சபையிலும் அக் கூத்தப்பெருமான் ஆர்த்தாடும் தீர்த்தனாகத் திகழ்கிறான். கூத்தப் பெருமானுக்குரிய ஐந்து சபைகளுள் ஒன்றாகிய தாமிர சபை நெல்லைத் திருக் கோவிலில் உள்ளதாகும். அது சிறந்த சிற்ப வேலைப் பாடுகள் நிறைந்தது. அதற்கு முன்னல் விளங்கும் நடன மண்டபம் கூரை வேய்ந்தது போலக் கல்லால் அமைந்திருக்கும் சிறப்பு, சிற்பியின் அற்புதமான திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இந்நடனமண்டபத்தில் மார்கழித் திங்கள் திருவாதிரை விழாவில் அழகிய கூத்தப்பெருமான் பல்வேறு வாத்தியங்கள் முழங்க ஆனந்த நடனமாடும் காட்சி கண்கொள்ளாப் பெருங் காட்சியாகும். தாமிர சபையின் பின்பக்கம் ஒரே கல்லில் அமைக்கப்பெற்ற ஐந்தடி உயரமுள்ள சந்தன சபாபதியின் திருவுருவம் மிக்க அழகு வாய்ந்ததாகும். தில்லைக் கூத்தனை வழிபட்ட திருநாவுக்கரசர், அப்பெருமானது பேரழகை வியந்து பாடிய சிறப்பெல்லாம் ஒருங்கு திரண்டாற் போன்று சந்தன சபாபதி ஒளிவீசி ஆடுகிறார். குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் குமிழும் குறு முறுவல், பனித்த சடை, பவளம்போன்ற திருமேனி, அதில் அணிந்துள்ள பால்வெண்ணீறு, இனித்தமுடைய எடுத்த பொற்பாதம் இவையெல்லாம் அப் பெருமானது வடிவில் அமைந்துள்ள சிறப்பை என்னென்பது. இதை யடுத்து வடக்குச் சுற்றுவெளியில் அட்ட லட்சுமி திருக்கோவில் அமைந்துள்ளது. தனலட்சுமி, தானியலட்சுமி, செயலட்சுமி, விசயலட்சுமி, சந்தான லட்சுமி, செளபாக்கியலட்சுமி, மகா லட்சுமி, கசலட்சுமி ஆகிய எட்டுத் திருவும் கட்டாக விள்ங்குகின்றனர். இவ் எண்மருள் செளபாக்கியலட்சுமி குதிரைமேல் ஆரோகணித்து அமர்ந்திருக்கும் காட்சி மிக நன்றாக இருக்கிறது. எல்லாச் செல்வங்களும் நிறைந்தவன் எத்துணைப் பெருமித வாழ்வு நடத்துவான் என்பதை அத் திருமகள் வடிவம் நினைவுறுத்துகிறது.
ஆறுமுகநயினார் கோவில்
சுவாமி கோவில் மேற்கு வெளிப்பிராகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகப்பெருமான் சந்நிதி ஒரு தனிச் சிறப்புடையது. தோகை விரித்தாடும் மயிலின் மேல் ஆறுமுகப்பெருமான் வேல்தாங்கிய வீரனாகக் காட்சி தரும் கோலத்தைச் சிற்பி ஒரே கல்லில் வடித்துள்ளான். ஆறு முகங்களும் ஆறு வேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் சிறப்புடன், கருணை பொழியும் முன் திரு முகத்துடன் விளங்கும் அப் பெருமான் அழகே அழகு! ‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகன்’ என்று பாடியருளிய அருணகிரிநாதரைப் போல, அவ் ஆறுமுகப்பெருமானது திருக்கோலத்தைத் தரிசிக்க எத்தனை கண்கள் இருந்தாலும் போதா என்றுதான் சொல்லவேண்டும். வழிபடும் அடியார்கள் பெருமானின் ஆறுமுகங்களையும் தரிசிக்கத் தக்கவாறு மண்டபம் அமைந்திருப்பது மற்றாெரு தனிச்சிறப்பு.
புலவர் முழக்கம்
அப்பெருமான் சந்நிதியில் அமைந்துள்ள கலியாண மண்டபம் பல்லாயிர மக்கள் திரண்டு நின்று தரிசித்தற்கு ஏற்றவாறு இடையில் தூண்களின்றி விசாலமாக அமைந்திருப்பது ஒரு தனி யழகு. இச் சந்நிதியில் எந்த வேளையிலும் செந்தமிழ் முழக்கம் முழங்கிக் கொண்டே யிருக்கும். திருக்குறள் விளக்க முழக்க மென்ன ! திருவாசக உரை முழக்கமென்ன! திருவிளையாடல், கந்த புராண, பெரிய புராண முழக்கங்களென்ன திருப்புகழ், கந்தர் கலிவெண்பா இசைமுழக்கமென்ன! இங்ஙனம் எந்நாளும் சங்கத்தலைவனாய் வீற்றிருந்த தமிழ் முருகன் சந்நிதியில் புலவர்கள் முழங்கிக்கொண்டே யிருப்பர்.
சங்கிலி மண்டபம்
சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பது சங்கிலி மண்டபம். சுவாமி கோவில் தெற்கு வெளிப்பிராகாரத்தின் நடுவே அமைந்துள்ள தெற்குக் கோபுரவாயில் தொடங்கி, அம்மன் கோவில் வரை யமைந்துள்ள நீண்ட தொடர்மண்டபம் முப்பதடி அகலமும் முந்நூறடி நீளமும் உள்ள ஒரு பெரு மன்றமாகும். ஓரங்களில் இருபக்கமும் வரிசையாகத் தூண்கள் அமைந்திருக்கும் அழகு மிகவும் அணி வாய்ந்ததாகும். இதனை முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் நெல்லைப்பகுதியில் அரசு செலுத்திய வடமலையப்பப் பிள்ளையன் என்பார் அமைத்தனர்.
ஊஞ்சல் மண்டபம்
காந்திமதியம்மன் திருக்கோவில் முகப்பில் கோபுர வாயிலை யடுத்து ஊஞ்சல் மண்டபம் விளங்குகின்றது. இது தொண்ணூற்றாறு திண்ணிய தூண்களால் அமைக்கப்பெற்றது. சமயத் தத்துவங்கள் தொண்ணூற்றாறு என்ற உண்மையை விளக்கி நிற்பது இம் மண்டபம். நடு மண்பத்தினைத் தாங்கும் இருபத்து நான்கு தூண்களும் வாய்பிளந்து முன் கால்களைத் தூக்கிநிற்கும் யாளிகளுடன் விளங்குவது ஒரு தனியழகாகும். இதனைக் கட்டியவர் பிறவிப் பெருமாள் பிள்ளையன் என்பார்.
காந்திமதியம்மை சந்நிதி
அம்மன் கோவில் கருவறையுள் காட்சியளிக்கும் காந்திமதித்தாய், உலகீன்ற அன்னையாயினும் கன்னி யாகவே காட்சி தருவாள். வயிர மணிமுடி புனைந்து, நவமணி அணிகள் பல பூண்டு, பாதச்சிலம்புடன், பங்கயத் திருக்கையால் அஞ்சலென அருள்செய்து நிற்பது, அவள் அரசியாய் உலகிற்கு விளங்கும். திறத்தைப் புலப்படுத்தும். வடிவம்மை என்று வழங்கும் அவளது பழம்பெயருக்கேற்ப அவளது வடிவைச் சிற்பி அழகாகவே வடித்துள்ளான்.
வடிவம்மையின் வாயிலாக நெல்லையப்பர் திருவருளைப் பெறுதற்கு முயன்ற பலபட்டடை அழகிய சொக்கநாதப் புலவர் என்பார், அம்மையை வேண்டும் முறை மிகவும் விநயமாக இருக்கிறது. ‘நெல்லையப்பர் நின்னொடு கொஞ்சிப்பேசும் வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக அடியேனுடைய குறைகளைக் கூற லாகாதா ? அங்ஙனம் கூறினால், அன்னையே! நின் வாயில் உள்ள முத்துகள் சிந்திவிடுமா ?’ என்று புலவர் பரிவுடன் கேட்கிறார்.
“ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை
மீதுன் அருகிருந்து
நீமுத்தம் தாவென்(று) அவர் கொஞ்சும்
வேளையில் நித்தநித்தம்
வேய்முத்த ரோ(டு)என் குறைகளெல்
லாமெல்ல மெல்லச்சொன்னால்
வாய்முத்தம் சிந்தி விடுமோ
நெல்வேலி வடிவன்னேயே!”
என்பது அப் புலவரது நயமான பாடல்.
கருமாறித் தீர்த்தம்
காந்திமதியம்மன் கோவில் மேலைச் சுற்றுவெளியில் கருமாறித் தீர்த்தம் உள்ளது. அதனை மக்கள் ‘கருமாதி’ என்று வழங்குவர். துருவாச முனிவரது சாபத்தால் யானையுருப் பெற்ற இந்திரத்துய்மன் என்னும் மன்னன் இத் தீர்த்தத்தில் மூழ்கித் தன் பழைய வடிவைப் பெற்றான். அதனால் கருமாறித் தீர்த்தமென்றும் கரிமாறித் தீர்த்தமென்றும் வழங்கும். (கரி – யானை)
பொற்றாமரைத் தீர்த்தம்
அம்மன் கோவில் முன்னமைந்த ஊஞ்சல்மண்ட பத்தின் வடபால் பொற்றாமரைத் தீர்த்தம் உள்ளது. இறைவனே நீர் வடிவாகப் பிரமன் பொன்மலராகப் பூத்த புண்ணியத் தடாகம் இப் பொற்றாமரைத் தீர்த்தம் என்று புராணம் புகலும். முகம்மதலியின் தானாபதியான மாவசுகான் என்பவன் மனைவி தீராத பிணிவாய்ப்பட்டுப் பெரிதும் வருந்தினாள். சிலர் அறிவுரையின் பேரில் அவள் இப் பொற்றாமரைத் தீர்த்தத்தில் மூழ்கித் தன் பெருநோய் நீங்கப்பெற்றாள். அதனால் களிப்புற்ற அம் முகம்மதியத் தானாபதி இக் கோவிலின் மேலைச் சுற்றுவெளியில் ஒரு சிறு கோவிலை யமைத்தான். அதில் நெல்லையப்பரையும் வடிவம்மையையும் எழுந்தருளுவித்து, நெல்லையப்பரை அனவரதநாதன் என்று போற்றி வழிபட்டான்.
அப்பருக்குத் தெப்பவிழா
இப் பொற்றாமரைக் குளத்தில் மாசித் திங்கள் மகநாளில் அப்பர்பெருமானுக்குத் தெப்ப விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அப்பர் தமது வாழ்நாளில் நெல்லைக்கு எழுந்தருளிப் பதிகம் பாடிப் பரவியது ஒரு மாசி மகநாளாகும். அதனை நினைவூட்டவே இத் தெப்பவிழா நிகழ்கின்றது. சமணர்கள் அவரது உடம்புடன் கட்டித் தள்ளிய கல்லையே தெப்பமாகக்கொண்டு, நமச்சிவாயப் பதிகம் பாடிக் கரையேறிய திருநாவுக்கரசருக்குத் தெப்பவிழா எடுக்கும் சிறப்பை இங் நெல்லையிலன்றிப் பிற தலங்களில் காணவியலாது. மக்கள் பிறவிக்கடல் நீந்தி, வீடுபேறாகிய இன்பக்கரை அடைவதற்கு இறைவன் திருநாமமே துணையென்னும் உண்மையை இந் நிகழ்ச்சி ஆண்டுதோறும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
இத்தகைய பல்வேறு சிறப்புகளை யுடைய நெல்லைத் திருக்கோவில், நெல்லை மாநகரின் எல்லை யில்லாப் பெருமைக்குத் தக்க சான்றாகத் தழைத்து வருகிறது.
(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்
Comments
Post a Comment