தமிழ் வளர்த்த நகரங்கள் 14 – அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்கோவில் பெருமை
(தமிழ் வளர்த்த நகரங்கள் 13 – அ. க. நவநீத கிருட்டிணன்: வேய்முத்தர்- தொடர்ச்சி)
நெல்லைத் திருக்கோவில் பெருமை
பன்னூறு ஆண்டுகட்கு முன்னரேயே இறைவன் திருக்கோவிலைக் கற்றளியாக அமைத்துக் காணும் அரிய பண்பு நம் நாட்டு மன்னர்பால் வேரூன்றி விளங்கிற்று. என்றும் அழியாது நின்று நிலவும் ஈசனுக்கு என்றும் அழியாது நின்றிலங்கும் கற்கோவிலை அமைத்து வழிபட்டனர் முன்னைய மன்னர்கள். அம் முறையில் பாண்டிய மன்னரால் அமைக்கப்பெற்ற அரிய கோவிலே திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலியில் திகழும் நெல்லையப்பர் திருக்கோவில்.
‘நித்தம் திருநாளாம் நெல்லையப்பர் தேரோடும்’ என்று சொல்லும் தாய்மார்கள் வாய்மொழி பழமொழியாக வழங்கும். திங்கள்தோறும் நெல்லையப்பருக்குத் திருவிழா நடைபெற்றுக் கொண்டே யிருக்கும். ‘தேரோடும் திருவீதி’ யென்றால் திருநெல்வேலித் தேர் வீதிகளைத்தான் சொல்ல வேண்டும். மாதம் தவறினாலும் வீதியில் தேரோடுவது மாதம் ஒருமுறை தவறாது. இந்தக் காட்சியைக் கண்ணுரக் கண்டு களித்த ஞானச்செல்வராகிய சம்பந்தப்பெருமான்,
“சங்காரன் மறையவர் நிறைதர
அரிவையர் ஆடல் பேணத்
திங்கள் நாள் விழமல்கு திருநெல்
வேலியுறை செல்வர் தாமே”
என்று. பர்டியருளினர். இங்ஙனம் இடையருத விழாச் சிறப்புடன் விளங்கும் நெல்லையப்பரைத் திரு நெல்வேலி யுறை செல்வர்’ என்று பத்தியுடன் பத்து முறை சித்தமுருகப் பாடிப் பரவினர் திருஞான சம்பந்தர்.
கெடுமாறன் திருப்பணி
சைவசமய குரவருள் தலைவராய சம்பந்தப் பெருமானால் பதிகம் பாடிச் சிறப்பிக்கப்பெற்ற நெல்வேலிச் செல்வரைத் தரிசித்து மகிழ, மதுரை மன்னனாகிய நின்றசீர் நெடுமாறன் தன் கோப்பெருந்தேவியாகிய மங்கையர்க்கரசியாருடன் நெல்லையின் எல்லையைச் சார்ந்தான். அதுசமயம் இங்கிருந்து ஆண்ட சிற்றரசன், நெடுமாறன்மீது சீறிப்படையொடு போருக்கெழுந்தான். படைத்துணையின்றி வந்த நெடுமாறனைப் பாதுகாக்க நெல்லைநாதன் பூதகணங்களைப் படையாக அவன் பக்கம் அனுப்பினான். நெல்லையப்பர் திருவருள் துணையால் பகைவனை வென்று நெல்லையுட் புகுந்த முடிமன்னனாகிய நெடுமாறனை நெல்வேலி வாழ்ந்த நன்மக்கள், ‘நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் வாழ்க! வாழ்க!’ என வாழ்த்தி வரவேற்றனர். மன்னன் தன் மாதேவியுடன் திருக்கோவிலுட் புகுந்து நெல்லையப்பரையும் காந்திமதித் தாயையும் வழிபட்டுப் பன்னாள் நெல்லையிலேயே தங்கிவிட்டான். அங்ஙனம் தங்கிய நாளில் நெல்லைத் திருக்கோவிலைப் பல்வேறு மண்டபங்களுடன் விரிவாக்கினன். இச் செய்தியைத் திருநெல்வேலித் தலபுராணப் பாடலொன்று வலி யுறுத்துகின்றது.
“நீதிதழைத் தோங்குதிரு நெல்வேலி
நாதர்முன்பு நிலைபெற் றோங்கச்
சோதிமணி மண்டபத்தைத் தூயமக
மேருவெனத் துலங்கச் செய்தே
வேதிகைபொற் படிதுாண்கள் விளங்குதிரு
வாயிலணி விரவிச் சூழ்ந்த
கோதில்மணிக் கோபுரமும் சேண்மதிலும்
வெள்விடையும் குலவச் செய்தான்.”
இப் பாடலால் நெடுமாறன் செய்த திருப்பணிகள் பல புலனாகும்.
மணிமண்டபம் இசைத்தூண்கள்
சுவாமி கோவில் உள் சுற்றுவெளியை யொட்டிச் சந்நிதிக்குள் நுழையும் வழியில் அமைந்த மணி மண்டபம் நின்றசீர் நெடுமாறனால் அமைக்கப் பெற்றதே. அம் மண்டபத்தில் அமைந்துள்ள பத்துத் தூண்களில் ஆறு சிறியன, நான்கு பெரியன. பெருந் தூண்கள் நான்கும் அறுபத்துநான்கு சிறு தூண்களின் இணைப்பாக விளங்குவது வியப்பூட்டுவதாகும். ஒவ்வொரு சிறு தூணும் ஒவ்வொரு விதமான நாதம் எழும் இயல்புடையது. இவை இசைத்தூண்கள் என்று ஏத்தப்பெறும்.
மாக்காளை-நந்தி
சுவாமி கோவில் முன்மண்டபத்தில் பலிபீடத்திற்கும் கொடிமரத்திற்கும் இடையே விளங்கும் வெள்விடை-நந்தி, மாக்காளை யென்று கூறப்படும். இதனை அமைத்தவனும் நெடுமாறனே. மாக்காளை மிகவும் கம்பீரமான தோற்றத்துடன், நோக்குவார் கருத்தையும் கண்ணையும் கவரும் சிறப்புடையது. இதனைக் காணுவார், ‘இது நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே யிருக்கிறது; இது மண்டபத்தைத் தட்டும் அளவு வளர்ந்துவிட்டால் அது உலகம் அழியும் கடை யூழிக்காலமாகும்’ என்று சொல்லிச் செல்லுவர்.
நந்திமண்டபச் சிற்பங்கள்
பலிபீடம், மாக்காளை, கொடிமரம் ஆகிய மூன்றும் ஒன்றன்முன் ஒன்றாகத் தோன்றும் காட்சி, பாசத்தைப் பலியிட்ட பசுவாகிய தூய உயிர், பதியை அணுகும் உண்மையை இனிது புலப்படுத்துவதாகும். இவ் உண்மையை விளக்கும் நந்திமண்டபத்தின் பெருங் தூண்களில் அழகிய சிற்பங்கள் பல காணப்படு கின்றன. ஒரு தூணில் காணப்படும் குறத்தியொருத்தியின் சிற்பம் கருத்தைக் கவர்வதாகும். அவள் தோளில் குழந்தையொன்றைத் தாங்கியிருப்பதும், கையில் கூடையொன்றைப் பற்றியிருப்பதும், நெல்லையப்பரைக் காதலராகப் பெறுதற்குத் துடித்து நிற்கும் தோகை யொருத்திக்கு நல்ல குறி சொல்ல அவள் கூர்ந்து நோக்குவதும், அவள் கொடிபோல் நுடங்கிக் குழைக் தாடி நிற்பதுமாகிய பொற்பான காட்சியைக் கண்டார், அச்சிற்பத்தை அவ்வளவு நுட்பமான வேலைப்பாடுடன் அமைத்த சிற்பியைப் போற்றாதிரார்.
மதனும் இரதியும்
மற்றொரு தூணில் மன்மதன் காட்சியளிக்கிறான், அவன் கரும்புவில்லை யேந்திக் கடிமலர்ப் பாணத்தைக் கையில் வைத்து எய்வதற்குத் தயாராக நிற்கும் ஏற்றுக்கோலம் மாற்றார் அஞ்சும் மாவீரக் கோல மாகும். அவன் தாங்கியுள்ள கரும்பு வில்லும் அரும்பு மலரும் எறும்பும் சுரும்பும் மொய்த்தற்கு இடமாக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் விளங்குவது வியப்பை யளிப்பதாகும். அடுத்து, இன்னொரு தூணில் இரதி தேவி இனிய காட்சி தருகிறாள். அவள் அழகுத் தேவனாகிய மன்மதனையே மணாளனாகப் பெற்ற பெருமிதத்துடன் நடை பயிலுவதுபோலச், சிற்பி அவளது வடிவை அழகாகச் சமைத்துள்ளான். அவள் அணிந்துள்ள முத்தாரமும் பட்டாடையும் காற்றில் பறந்து அசைவனபோலக் காட்டியிருக்கும் சிற்பியின் விற்பனத்தை என்னென்பது! சுவாமி கோயில் கொடி மரத்தின் முன்பமைந்த தோரண மண்டபத் தூண்களில் காணப்படும் வீரபத்திரர் சிற்பங்கள் வீரத் திருக் கோலத்துடன் விளங்குகின்றன. அம் மண்டபத்தின் அமைப்பும் நுண்ணிய வேலைப்பாடுகளை யுடையது.
சோமவார மண்டபம்
நந்தி மண்டபத்தின் வடபால் அமைந்த சோம வார மண்டபம் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. மரத்தில் செய்யத்தக்க நுண்ணிய வேலைப்பாடு களையெல்லாம் இம் மண்டபம் அமைத்த சிற்பி, கல்லில் அமைத்துக் காட்டியுள்ளான். இம் மண்டபத்தின் முன்னல் இருபெருந் தூண்களில் எதிரெதிராக அருச்சுனனும் பவளக்கொடியும் காணப்படுகின்றனர். அருச்சுனன், மதுரையாசியாகிய அல்வியை மணந்த மணக் கோலத்துடன் அவள் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு கம்பீரமாக நிற்பதும், எதிரேயுள்ள தூணில் பவளக்கொடி பாங்கியர் புடைசூழநின்று நாணத்துடன் கடைக்கண்ணால் நாயகனை நோக்குவதும் ஆகா! அந்தச் சிற்பி எவ்வளவு அற்புதமாக அமைத்துள்ளான் !
நடராசர் வடிவம்
சுவாமி கோவில் மணிமண்டபத்தின் வடபால் நோக்கினால் நடராசப் பெருமானின் அழகான செப்புச் சிலையொன்று, அப்பன், அம்மை சிவகாமி காண அற்புத நடனம் ஆடுவதுபோலவே காட்சியளிக்கிறது. பெருமான் திருவடியின் கீழ்க் காரைக்காலம்மையார் பணிந்து நின்று தாளம்போடும் காட்சி மிக நன்றாக இருக்கிறது. ஏழடி உயரத்தில் இத் தாண்டவமூர்த்தி காண்டற்கரிய காட்சியுடன் விளங்குகிறார்.
வேய்முத்தரும் இரட்டைப் புலவரும்
இனி, நெல்லையப்பர் மூலத்தானமாகிய கரு வறையை நெருங்கினால், அதன் வடபால் பள்ளத்துள்ளே ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. இதுதான் ‘மூல மகாலிங்கம்’ எனப்படும். கோவில் தோன்றுவதற்குக் காரணமான ஆதிலிங்கம் இதுவேயாகும். மூங்கிலடியில் முத்தாக முளைத்த முன்னவர் இவர். அதனால் இவருக்கு வேய்முத்தர் என்பது ஒரு திருநாமம். ஆயனது கோடரியால் வெட்டுண்டு மண்டையில் புண்பட்ட பெருமான் இவர். ஆதலின் இவருக்கு அப்புண்ணையாற்றுவதற்கு மருந்துத்தைலம் காய்ச்சி மண்டையில் பூசுகின்ற வழக்கம் பண்டு தொட்டு இருந்து வருகிறது. அதற்காக மேலேக் கோபுர வாசலை யடுத்துத் தைல மண்டபம் ஒன்று காணப் படுகிறது.
இந்தச் செய்தியைப் பிற்காலத்தில் இந் நகருக்கு வந்து நெல்லையப்பரை வழிபட்ட இரட்டைப் புலவர்கள் நகைச்சுவை ததும்பப் பாடியுள்ளனர். குருடரும் முடவருமாகிய அவ் இரு புலவருள் முடவர்,
“வேயின்ற முத்தர்தமை வெட்டினா னே இடையன்
தாயீன்ற மேனி தயங்கவே”
என்று உளமிரங்கிப் பாடினார். அதனைக் கேட்ட குருடராகிய புலவரோ ஆத்திரத்துடன்,
“-பேயா, கேள் !
“எத்தனை நாள் என்றே இடறுவான் பாற்குடத்தை
அத்தனையும் வேண்டும் அவர்க்கு”
என்று பாடி முடித்தார். இடையனது பாற்குடத்தைப் பல நாளாகப் பாழாக்கிய அவ் வேய்முத்தருக்கு இதுவும் வேண்டும்; இன்னும் வேண்டும்!’ என்று சொல்லி நகையாடினர் அக் குருட்டுப் புலவர்.
கங்காளநாதர் காட்சி
சுவாமி கோவில் முதல் உள்சுற்று வெளியின் மேல்பால் கங்காளநாதரின் கவின்மிகு செப்புச் சிற்பம் காணப்படும். அவர் பக்கமாகத் தாருகவன முனிவர் பத்தினியர் நிலையழிந்து தலைதடுமாறிக் காம பரவசராய் நிற்கும் காட்சி மிகவும் அழகு வாய்ந்ததாகும். நெல்லையில் நிகழும் ஆனிப் பெருந்திருவிழாவில் எட்டாம் திருநாளன்று தங்கச் சப்பரத்தில் தனியழகுடன் எழுந்தருளும் கங்காளநாதர் பிச்சாடனத் திருக்கோலம் காண்பார் கண்களைவிட்டு என்றும் அகலாதிருப்பதாகும்.
(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்
Comments
Post a Comment