இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும்
வெள்ளம்போல் தமிழர்களின் கூட்டம் அன்று
வீரத்தால் திரண்டெழுந்தபோது நம்மின்
தெள்ளமுதத் தமிழ்ப்புலவர் என்ன செய்தார்
திறனற்று வாய்மூடி இருந்தார்! ஆனால்
கள்ளம்இல் குணம் கொண்டார் தமிழ்ப்ப கையைக்
கனன்று எழுந்து தீய்க்கின்ற செந்தீ! அன்பை
வள்ளல்போல் அளிக்கின்ற பெரிய ஆசான்
வம்புக்குப் பணியாமல் குரல் கொடுத்தார்!
சிறையினிலே அடைபட்டார்! இழந்தார் வேலை!
செக்கிழுக்கும் மாட்டைப்போல் தமிழா சான்கள்
குறைகொண்ட மதியாலே கண்டும் தம்மின்
கும்பிஒன்று நிறைந்தாலே போதும் என்று
முறையின்றிப் பேசாமல் இருந்தார்! மான
மூச்சில்லை! இலக்குவனார் நிலையைக் கண்டும்:
கறைபடித்த வாழ்விதுதான் தமிழ்ப டித்தோர்
கண்டிப்பாய் இனியேனும் திருந்தல் வேண்டும்
இன்றோநாம் எதுவேனும் செயலாம் இஃதோ
இந்திக்கே எதிர்ப்பாட்சி! தமிழின் ஆட்சி!
நின்றாடி மாணாக்கர் வெற்றி தேடி
நிலையாக்கித் தந்தஓர் ஆட்சி! ஆனால்
அன்றோநாம் வாய்திறந்தால் போச்சே;அன்றும்
அஞ்சாமல் சிறைசென்ற சிங்கம் நம்மின்
பொன்றாத மானத்தைக் காத்த தேவன்!
புத்துலகச்சான்றோன்தாள் போற்றி! போற்றி!
வயிறொன்று வளர்த்தாலே போதும் என்று
வாழ்கின்றார் தமிழ் படித்த பலபேர்! இன்னும்
துயில்கின்றார்! கழுதை ஒன்றும் ஆண்டால்கூடத்
துதிபாடிப் பிழைப்பதுதான் இவர்பி ழைப்பு
வயிறெரிந்து கொதிக்கிறது நெஞ்சம் இந்த
வகைகெட்டார் தம்ஈனம் நினைக்கும் போதில்
எயில்போன்ற நெஞ்சம்கொள்! இனிமே லேனும்
எதுஉண்மை என்பதற்கே வாழ்ந்து சா! போ!
தமிழ்படித்தார் தமக்கின்னும் மதிப்பொன் றில்லை!
தகுதியினை அறிகின்றார் யாரும் இல்லை!
அமிழ்தான நமதுமொழி ஆசான் இங்கே
ஆங்கிலத்தைப் படித்தான்கீழ் வேலை செய்வர்
உமியாக அவரின்றும் உள்ளார்! அன்னார்
உரிமைகளைக் கேட்கின்ற திறனும் இல்லார்!
நமின்அரசு தானாகச் சிந்தித் தேனும்
நற்றலைமை புலவர்க்குத் தருதல் வேண்டும்!
கொட்டிக்கொடுத் திட்டார் செல்வம் நம்மின்
குமிழ்ச்சிரிப்பு புலவர்க்கே அரசர் அந்நாள்!
எட்டாத பேரறிவில் தமிழ்ச்சான் றோர்கள்
இருந்ததனால் எவர்க்கும் அஞ்சா மல்நல்
திட்டத்தை மன்னர்களும் ஏற்க வைத்தார்!
திக்கெட்டும் புகழ்வீச அறிவை ஈந்தார்!
மட்டில்லா அந்நிலைமை இந்த நாளில்
மறுபடியும் ஏற்படுதல் வேண்டும்! வேண்டும்!
தாய்மொழியைப் படித்தவர்க்கே முதன்மை மேன்மை
தந்திடுதல் வேண்டும் கல்லூரி தன்னில்
தாய்மொழியில்தான் சொல்லிக் கொடுப் பதற்கும்
சான்றாக ஆங்கிலத்தில் பட்டம் கேட்டல்
போய்த்தொலைய வேண்டும் இப்பூமி தன்னில்
புத்தமுதாம் தமிழுக்குப் பகையாம் செய்கை!
வாயில்லாப் பூச்சியா நீர்!தமிழ்கற் றோரே
வாருங்கள் கேளுங்கள் உரிமை தன்னை!
எதிர்காலம் இனிக்கின்ற காலம்! ஆம்!ஆம்!
ஈங்குள்ள தமிழ்ப் பகைவர் எங்கோ மாய்ந்தார்!
எதிர்காலம் எனதன்புப் புலவீர் உம்மின்
இணையில்லா அறிவேதான் செயலாம் காலம்
எதிர்காலம் தமிழ்வாழ வளர ஒப்பில்
எல்லாமே செய்கினற காலம்! ஆம்நீர்
எதிர்கால உழைப்போங்க அணிய மாவீர்!
ஏற்றத்தை நல்குங்கள் தாய்மொ ழிக்கே!
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
-தமிழ் முழக்கம்(1968), பக்கம் 84-87
Comments
Post a Comment