Skip to main content

ஊரும் பேரும் 47 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் 2

 




(ஊரும் பேரும் 46 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் – தொடர்ச்சி)

ஊரும் பேரும்

கோயிலும் வாயிலும் 2

இளங்கோயில் தொடர்ச்சி

   சித்தூர் நாட்டில் இக் காலத்தில் திருச்சானூர் என வழங்கும் ஊரில் ஈசனார் அமர்ந்தருளும் இடம்  இளங்கோயில் என்பது சாசனங்களால் விளங்குகின்றது. திருவேங்கடக் கோட்டத்துக் கடவூர் நாட்டுத் திருச்சொகினூரில் உள்ள இளங்கோயிற் பெருமான் என்பது சாசன வாசகம்.9 இவ்வூரின் பெயர் திருச்சுகனூர் என்றும், சித்திரதானூர் என்றும் சிதைந்து வழங்கும்.10

 ஆலக்கோயில்

     தொண்டை நாட்டில் ஆலக்கோயில் எனச் சிறந்து விளங்கும்ஆலயங்கள் இரண்டு உண்டு: பாடல் பெற்ற திருக்கச்சூரில் அமைந்த ஆலக் கோயில் ஒன்று; மதுராந்தகத்திற்கு அண்மையில் உள்ள ஆலக்கோயில் மற்றொன்று. திருக்கச்சூர் ஆலக்கோயிலைப் பாடினார் சுந்தரர்.

        “கோலக் கோயில் குறையாக் கோயில்

        குளிர்பூங் கச்சூர் வடபாலை

        ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்

        அறங்கட் டுரைத்த அம்மானே

என்று கல்லாலின் கீழிருந்து அறமுரைத்த பெருமானை ஆலக்கோயிலிற் கண்டு அகமகிழ்ந்து போற்றினார் சுந்தரர்.

    மதுராந்தகத்திற்கு அருகே குளத்தூர்க் கோட்டத்துக் குளத்தூரில் அமைந்த ஆலக்கோயில் பெருஞ்சோழ மன்னரால் பெரிதும் ஆதரிக்கப் பெற்றதாகத் தெரிகின்றது. அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்க சோழன் அரும்பாக்கத்தைச் சேர்ந்த சில நிலங்களுக்கு அநபாய நல்லூர் என்று பெயரிட்டு, ஆலக்கோயிலுக்கு அளித்தான்.11 மேலும், வல்ல நாட்டு நென்மலியைச் சேர்ந்த சில நிலங்களுக்குக் குலோத்துங்க சோழன் திருநீற்றுச்சோழ நல்லூர் என்று பெயரிட்டு அக் கோயிலுக்கே வழங்கினான்.12  நாளடைவில் அக்கோயிலையுடைய ஊர் திருவாலக் கோயில் என்று அழைக்கப்படுவதாயிற்று. இன்று திருவானக் கோயில் என வழங்குவது இதுவே யாகும்.13

பழைய ஊர்ப் பெயர்கள் மறைந்து கோயிற் பெயர்களால் இக் காலத்தில் வழங்கும் பதிகள் பலவாகும். பாண்டி நாட்டில் பாடல்பெற்ற கானப்பேர் என்னும் ஊர் காளையார் கோயில் ஆயிற்று. ஆப்பனூர், திருவாப்புடையார் கோயில் என அழைக்கப்படுகின்றது. மாணிக்கவாசகரை ஈசன் ஆட்கொண்டருளிய திருப்பெருந்துறை, ஆவுடையார் கோயிலாகத் திகழ்கின்றது. சோழ நாட்டுக் கடம்பந்துறை, கடம்பர் கோயில் எனவும், கடிக்குளம், கற்பகனார் கோயில் எனவும், கடுவாய் நதிக்கரையிலமைந்த புத்தூர், ஆண்டான் கோயில் எனவும் வழங்குகின்றன.

அம்புக்கோயில்

     புதுக்கோட்டை நாட்டிலுள்ள அம்புக் கோயில் என்பது ஆதியில் அழும்பில் என்னும் பெயர் பெற்றிருந்தது. கல்வெட்டுக்களிலும் பழந் தொகை நூல்களிலும் குறிக்கப்பட்டுள்ள இவ்வூரில் மானவிறல் வேள் என்னும் குறுநில மன்னன் அரசாண்டான் என்று மதுரைக்காஞ்சி கூறும்.14 இவ்வூரில் எழுந்த சிவன் கோயில் அழும்பிற் கோயில் என வழங்கலாயிற்று. அழும்பிற் கோயில் அம்புக் கோயில் என மருவிற்று. நாளடைவில் கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்று.

பெரிச்சி கோயில் 

 இராமநாதபுரம் நாட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் பெரிச்சி கோயில் என்னும் ஊர் ஒன்று உள்ளது. அங்கமைந்த,  பெரிச்சி கோயில்   பழமையான சிவாலயம் திருமட்டுக்கரை என்னும் பெயரால் சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.15 அவ் வாலயத்திலுள்ள பெரிய நாச்சியார் என்பது அம்பிகையின் பெயர். அந் நாச்சியார் வழிபாடு சிறப்புற நடைபெறுவதாயிற்று. சோணாடு வழங்கிய சுந்தர பாண்டியன் காலத்துச் சாசனம் ஒன்று பெரிய நாச்சியாருக்கு விதந்து அளித்த நிபந்தத்தை விளக்குகின்றது.16 நாளடைவில் பெரிய நாச்சியார் கோயில் என்றே அக்கோயில் பெயர் பெற்றது. அதுவே பெரிச்சி கோயில் என மருவிற்று.

சங்கர நயினார் கோயில்

    நெல்லை நாட்டுச் சிறந்த கோயில்களுள் ஒன்று சங்கர நயினார் கோயில். ஆதியில் அது புற்றுக் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தோற்றுகின்றது. இன்றும் பாமர மக்கள் அதனைப் பாம்புக்கோவில் என்றே வழங்குவர். அங்குள்ள புற்று மருந்து என்னும் திருமண் எவ்வகைப் பிணியையும் தீர்க்க வல்லதென்று கருதப்படுகின்றது. அக்கோயிலையுடைய ஊர் முன்னாளில் இராசபுரம் என வழங்கிற்று.17 இதனாலேயே இராசை என்னும் பெயர் இலக்கியத்தில் அவ்வூரைக் குறிப்பதாயிற்று. பிற்காலத்தில் கோயிற் பெயரே ஊர்ப் பெயராகக் கொள்ளப்பட்டது.

    திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலை வட்டத்தில் பூரத்துக் கோயில் என்னும் ஊர் ஒன்று உண்டு. ஊரின் பெயர் கோயிலடியாக வந்ததென்பது வெளிப்படை. ஆதியில் பூலத்தூர் என்று அவ்வூர் பெயர் பெற்றிருந்தது. பூரத்துக்கோயில்   “உரத்தூர்க் கூற்றத்துக் கடுவங்குடிப் பற்றிலுள்ள பூலத்தூர்” என்று சாசனம் கூறும்.18 பூலத்தூரில் முத்தீச்சுரம் என்னும் சிவாலயம் எழுந்தது. மாறவர்மன் முதலிய பாண்டி மன்னருள் பிறரும் அக் கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளார்கள். நாளடைவில் முத்தீச்சுரம் பூலத்தூர்க் கோயில் என்றே வழங்கலாயிற்று. அப்பெயர் பூரத்துக் கோயிலெனத் திரிந்து ஊரின் பெயராயிற்று.

    சிவபெருமான் வீற்றிருந்தருளும் வாயிற்பதிகளை வகுத்துரைக்கப் போந்த திருநாவுக்கரசர்,

       “கடுவாயர் தமைநீக்கி என்னை யாட்கொள்

       கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்

       நடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்

       நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்

என்று பாடிச் செல்கின்றார்.

    இத் திருப்பாசுரத்திற் குறிக்கப்பெற்ற அண்ணல் வாயில் இப்பொழுது சித்தன்ன வாசல் என்னும் பெயரோடு புதுக்கோட்டை நாட்டில் உள்ளது. “மலர்ந்ததார்வாள் மாறன் மன் அண்ணல் வாயில்” என்னும் பழம் பாட்டாலும் அப்பதியின் பெருமை அறியப்படும்.19 அண்ணல் வாயிலில் அமைந்த குகைக் கோயில் மிகப் பழமை வாய்ந்தது; சிற்ப வேலைப்பாடு உடையது. பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்மன் காலத்தில் வண்ண ஓவியங்கள் அக் கோயிலில் உண்டு.20

நெடுவாயில்

      நெடு வாயில் என்னும் பெயருடைய பதிகள் தமிழ் நாட்டிற் பலவாகும். எனினும், அவற்றுள் சாலப் பழமை வாய்ந்ததும், சிவாலயச் சிறப்புடையதும் ஆகிய ஊர் தஞ்சை நாட்டில் பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள நெடுவாசலே என்று சாசனம் கூறும்.21 அச் சிவாலயம் பழுதுற்றிருப்பதாகத் தெரிகின்றது.

நெய்தல் வாயில்

     காவிரிப்பூம்பட்டினத்தின் அருகேயுள்ள நெய்தல் வாயில் இக்காலத்தில் நெய் வாசல் என வழங்கும். திருவெண்காட்டுக்கும், பட்டினத்துப் பல்லவனீச்சுரத்திற்கும் இடையே உள்ளது அப்பழம்பதி. 

 (தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

10 .    செ.மா.க. /I.M.P., ப. 47,

11.   359 / 1911,

12.  363 / 1911.

13. 409 / 1912; 407 of 1912.

14. “விளங்கு பெருந்திருவின் மான விறல்வேள்

அழும்பில் அன்னநாடு”

-மதுரைக் காஞ்சி, 344-45

15. 64 / 1924.

16. 75 / 1924.

17. தி.தொ.வ. /T.A.S., தொகுதி 1, பக். 90.

18. 740/ 1909.

19. பெருந் தொகை, 1019.

20. இந்தியர் வரலாறு (கோவிந்தசாமி) 1329.

21. Sewell’s Antiquities Vol. I, p. 283.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்