தமிழ் வளர்த்த நகரங்கள் 6. – அ. க. நவநீத கிருட்டிணன் : மதுரையின் மாண்பு
(தமிழ் வளர்த்த நகரங்கள் 5. – அ. க. நவநீத கிருட்டிணன் : தமிழ் வளர்த்த சங்கங்கள் 2/2 -தொடர்ச்சி)
அத்தியாயம் 3. மதுரையின் மாண்பு
இனிமையான நகர் மதுரை
தமிழகத்தின் முதன்மையான நகரமாகவும் பாண்டிய நாட்டின் பழமையான தலைநகரமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக விளங்கிவரும் இணையிலாப் பெருமையுடையது மதுரைமாநகரம். மதுரை என்ற சொல்லுக்கு இனிமையென்பது பொருள். என்றும் இனிமை குன்றாத தனிப்பெருநகரமாகச் சிறப்புற்று விளங்குவது இந்நகரம். இதனை முதற்கண் தோற்றுவித்த பாண்டியன், நகரைத் தூய்மை செய்தருளுமாறு இறைவனை வேண்டினான். மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரப்பெருமான் தன் சடையில் அணிந்த பிறைமதியினின்று சிந்திய நிறைமதுவாகிய நல்லமுதால் நகரைத் தூய்மை செய்தான். அதனால் இந்நகர் மதுரையெனப் பெயர்பெற்றது என்பார் பரஞ்சோதியார். அவர் இதனைத் ‘திக்கெலாம் புகழ் மதுரை’ என்றும், ‘நண்ணி இன்புறு பூமி மதுரை மாநகரம்’ என்றும் மனமுவந்து பாராட்டுகின்றார்.
தமிழும் மதுரையும்
தமிழும் மதுரையும் இனிமையே இயல்பாய் எழுந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ் ; இங்ஙனம் இவையிரண்டும் பிரிக்கமுடியாத இணைப்புடையன. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவரெல்லாரும் தமிழொடுசேர்த்தே போற்றுவாராயினர். “தமிழ்கெழு கூடல்” என்று புறநானூறு போற்றியது. நல்லூர் நத்தத்தனர் என்னும் புலவர் தாம் பாடிய சிறுபாணாற்றுப் படையில் மதுரையைக் குறித்துக் கூறவந்தவிடத்தும் அதன் இயற்கை மாண்பை மறைத்துக் கூறவியலாது,
“தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை”
என்று குறித்தார்.
இளங்கோவும் மருதனாரும்
இளங்கோவடிகள் தமது இனிய காவியத்தில் “ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்” என்று பற்பல சொற்றாெடர்களால் மதுரைமாநகருக்குப் புகழ் மாலை சூட்டி மகிழ்கின்றார். மாங்குடி மருதனார் தாம் பாடிய மதுரைக்காஞ்சியில்” வானவரும் காண விரும்பும் வளம் நிறைந்த நகரம்” என்று கூறுகின்றார்.
“புத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை”
என்பது அவர் பாடற்பகுதியாகும். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் “மதுரைப் பெருகன் மாநகர்” என்று தறித்தருளினார்.
தென்னகத்து நன்னகர் மதுரை
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர் அந்நாட்டில் ஒரு நகரத்துக்குப் ‘புதிய இங்கிலாந்து’ என்று பெயர் வழங்கினர். அதுபோன்று முன்னை நாளில் தென்னாட்டில் குடியேறிய ஆரியர் தம் வடநாட்டு வடமதுரையைப் பின்பற்றித் தமிழகத்திலும் இந்நகருக்கு மதுரையெனப் பெயர் வழங்கினர் என்று வரலாற்று ஆசிரியர் பேசுகின்றனர். மேலை நாட்டினர் மதுரையைத் ‘தென்னிந்தியாவின் ஏத்தன்சு’ என்று ஏத்துகின்றனர்.
மதுரையும் மருதையும்
பாமர மக்கள் இன்றும் மதுரையை மருதையென வழங்கக் காண்கிறோம். அதுவே இந்நகரின் பழம் பெயராக இருக்கலாமோ என்று எண்ணுதற்கு இடமுமுண்டு. மருதமரங்கள் நிறைந்த நகரம் இதுவாதலின் அக்காரணம்பற்றி மருதையெனப் பெயர் பெற்றிருக்கலாம். வையையாற்றின் வளமான கரையில் அமைந்த இந்நகரின் மக்கள் இறங்கி நீரோடுந் துறையாக ‘மருதந் துறை’ என்றொரு நீர்த்துறை இருந்ததெனப் பரிபாடல் பகர்கின்றது. அது இத்துறையினை ‘திருமருத முன்துறை’ என்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரமும் ‘வருபுனல் வையை மருதோங்கு முன்துறை’ என்று இத்துறையைக் குறிப்பிடுகிறது. இவற்றால் மதுரையின் பழம்பெயர் மருதை என்று கொள்ள இடமுண்டு.
நான்மாடக்கூடல் மதுரை
இந்நகருக்குக் கூடல் என்றும், ஆலவாய் என்றும் வேறு பெயர்களும் வழங்குகின்றன. நான்மாடக் கூடல் என்ற பெயரே கூடல் என மருவியுள்ளது. திருக்கோவிலே மாடம் என்று சொல்லும் மரபுண்டு. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில் தலங்கள் சேர்ந்தமைந்த காரணத்தாலோ, கன்னி கோயில், கரிய மால் கோயில், காளி கோயில், ஆலவாய்க் கோயில் ஆகிய நான்கு திருக்கோயில்களும் காவலாக அமைந்த காரணத்தாலோ நான்மாடக்கூடல் என்னும் பெயர் இந்நகருக்கு ஏற்பட்டுள்ளது.
நான்மாடக்கூடலும் பரஞ்சோதியாரும்
ஒருகால் வருணன் மதுரையை அழிக்குமாறு ஏழு மேகங்களை ஏவினான். அதனால் எங்கும் இருள் சூழ்ந்து பெருமழை பொழியத் தலைப்பட்டது. பாண்டியன் செய்வதறியாது உள்ளம் பதைத்தான். மதுரையில் எழுந்தருளிய இறைவனிடம் சென்று முறையிட்டான்; உடனே சிவபெருமான் தன் செஞ்சட்டையிலிருந்து நான்கு மேகங்களை ஏவினான். அவை மதுரையின் நான்கு எல்லைகளையும் வளைந்து, நான்கு மாடங்களாக நின்று, வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் விலக்கி விரட்டின. இவ்வாறு இறைவனால் ஏவப்பெற்ற நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடியதால் மதுரை, நான்மாடக்கூடல் என்னும் பெயர் பெற்றது என்பர் பரஞ்சோதி முனிவர்.
கூடுமிடம் கூடல்
இனி, எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்து கூடும் வளமான நகராதலின் கூடல் என்று கூறப்பெற்றது என்பர் சிலர். தமிழை வளர்க்கப்புகுந்த புலவரெல்லாம் வந்து கூடிய செந்தமிழ்ச்சங்கம் சந்தமுற அமைந்த பெருநகரமாதலின் கூடல் என்ற பெயர் பெற்றதென்பர் மற்றும் சிலர்.
ஆலவாய் மதுரை
வங்கியசேகரன் என்னும் பாண்டியன் மதுரையை ஆண்டநாளில் நகரை விரிவாக்க விரும்பினான். சிவ பெருமானிடம் நகரின் எல்லையை வரையறுத்து உணர்த்துமாறு வேண்டினான். அப்பெருமான் தன் கரத்தமர்ந்த பாம்பை விடுத்து எல்லையை உணர்த்துமாறு பணித்தான். அது, தன்னால் எல்லை காட்டப்பெறும் நகரம் தன் பெயரால் தழைத்தோங்க அருள் புரியுமாறு பெருமானை வேண்டியது. பின்னர் அப்பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது; அவ்வாலைந் தனது வாயில் சேர்த்து எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல் மதுரை ‘ஆலவாய்’ என்னும் பெயர் பெற்றது என்பர் திருவிளையாடற் புராண ஆசிரியர். ஆலவாய் என்பது ஆலத்தை வாயிலுடைய பாம்பைக் குறிக்கும். வேறு சிலர், மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலநீழலில் அமர்ந்தவனாதலின் அந்நகர் ஆலவாயில் எனப்பட்டதென்பர்.
தெய்வங்கள் ஆண்ட திருநகரம்
இத்தகைய மதுரையைச் சிவபெருமான் சுந்தர பாண்டியனாகத் தோன்றி ஆண்டனன் என்றும், செவ்வேள் உக்கிரகுமார பாண்டியனாகத் தோன்றிச் செங்கோலோச்சினான் என்றும், மலையத்துவச பாண்டியனுக்கு உமையம்மை மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாகத் தனியரசு செலுத்தினாள் என்றும் புராணங்கள் புகலும்.
நாயன்மார் விளங்கிய நன்னகரம்
இந்நகரை முன்னாளில் ஆண்ட மன்னனாகிய அரிமர்த்தனன் என்பானுக்குச் சைவ சமயாசிரியர்களுள் ஒருவராகிய மாணிக்கவாசகர் மதியமைச்சராக விளங்கினார் என்று பல புராணங்கள் பகரும். மற்றாெரு சைவ சமய குரவராகிய திருஞானசம்பந்தர், கூன் பாண்டியன் காலத்தில் மதுரைக்கு எழுந்தருளிச் சைவ சமயத்தை நிலைநாட்டினார் என்பர். கூன் பாண்டியனுக்கு மாதேவியாக வாய்த்த மங்கையர்க் கரசியாரும் மதியமைச்சராக வாய்த்த குலச்சிறையாரும் சைவம் காத்த தெய்வமாண்பினராக மதுரைமாநகரில் விளங்கினர். அதனால் மன்னன், மாதேவி, மதியமைச்சர் ஆகிய மூவரும் பெரிய புராணம் போற்றும் அரிய சிவனடியார்களாகத் திகழ்கின்றனர்.
புலவரும் மதுரையும்
பழந்தமிழ்ப் புலவர் பலரும் தம் பெயருடன் மதுரையைச் சேர்த்து வழங்கப்பெரிதும் விரும்பினர். அவ்வாறு கூறப்பெறுவதைத் தங்கட்குப் பெருமையென்றும் கருதினர். மதுரைக் கணக்காயனர் மகனார் நக்கீரனார், மதுரைக் குமரனார், மதுரை மருதனிளநாகனார், மதுரைச் சீத்தலைச் சாத்தனார், மதுரைக் கண்ணகனார், மதுரையாசிரியர் கோடங்கொற்றனார், மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், மதுரை வேளாதத்தர், மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், மதுரை நல்வெள்ளியார், மதுரைப் பெருங்கொல்லனார், மதுரைக் கதக்கண்ணனார் முதலிய புலவர் பெயர்களால் அவ்வுண்மையை அறியலாம்.
மதுரைத் திருக்கோவில்
மதுரையின் நடுநாயகமாய் மீனட்சியம்மையின் திருக்கோவில் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி அணியணியாகத் தெருக்கள் அழகுற அமைந்துள்ளன. இங்கு எழுந்தருளிய இறைவனுக்குச் சொக்கநாதர், சோமசுந்தரர் என்னும் திருப்பெயர்கள் வழங்குகின்றன. அழகே வடிவாய்த் திரண்டவன் இறைவன் என்ற உண்மையை இப்பெயர்கள் விளக்குகின்றன. இக்கோவிலில் விளங்கும் இறைவனையும் இறைவியையும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற அருளாளர்கள் பதிகம் பாடிச் சிறப்பித்துள்ளனர். இங்குத் திங்கள்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இத்தகைய பன்னலங்களும் நிறைந்து விளங்கும் பொன்னகரமாகத் தென்னகத்தில் திகழ்வது மதுரைமாநகரம் ஆகும்.
(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்
Comments
Post a Comment