Skip to main content

தமிழ்நாடும் மொழியும் 37: முத்தமிழ் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

 




(தமிழ்நாடும் மொழியும் 36: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி)

3. முத்தமிழ்

“சங்கத் தமிழ் மூன்றுந் தா”

“முத்தமிழும் நான்மறையும் ஆனாய் கண்டாய்”

என்பன ஆன்றோர் வாக்கு. தமிழ் மொழிக்குள்ள சிறப்புகளுள் ஒன்று இம் முத்தமிழ்ப் பாகுபாடாகும். இதனால் வேறு மொழிகளிலே இந்த மூவகைக் கூறுகள் இல்லை என்பதன்று பொருள். ஆனால் முதன் முதலில் தம் மொழியிலே இப்பிரிவு ஒன்று உள்ளது என்று உணர்ந்தவர் தமிழ் மக்களே. அந்த உணர்ச்சியிலேதான் தமிழ் மக்களின் சிறப்பும் சீரும் பொதிந்து கிடக்கின்றன. இனி இக்கூறுகளைப் பற்றிப் பார்ப்போம்.

முத்தமிழ் என்பவை இயல், இசை, நாடகம் அல்லது கூத்து என்பனவாம். இயலுக்குப் பின்னர் இசையும், அதன் பின் கூத்தும் தோன்றி வளர்ந்தது என்பர் பரிதிமாற் கலைஞர். கூத்து, இசை, இயல் என்ற முறையே மு. வ. போன்றார் கொள்கை. எதுவாயினும் ஆகுக. இம்மூன்று பிரிவும் இருவருக்கும் உடன்பாடே என்பது வெளிப்படை.

இயற்றமிழ்

“இயற்றமிழ் என்பது தமிழர் யாவர் மாட்டும் பொதுவாகச் செய்யுள் வழக்கு உலக வழக்கு என்கிற இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும் செய்யுளுமாகும் நூற் களின் தொகுதியாகும்” என்பது பரிதிமாற் கலைஞரின் இயற்றமிழ் பற்றிய விளக்கமாகும்.

பரிபாடல் நீங்கிய சங்கத் தொகை நூற்களும், அவற்றின் உரை நூற்களும், தற்காலத்தில் வெளிவந்துள்ள செய்யுள் நூற்களும், உரைநடை நூற்களும் இயற்றமிழ் நூற்களாகும். இயற்றமிழ் நாடகத் தமிழுக்கும் இசைத் தமிழுக்கும் உயிர் போன்றதாகும். இதனாலேயே இது முதலில் வைக்கப்பட்டது என்பர் பரிதிமாற் கலைஞர்.

இசைத்தமிழ்

பண்கூட்டித் தாளமறுத்துப் பாடப்படுவன இசைப்பாக்களாம். நாடகத் தமிழின் நலிவு கண்டு கலங்கிய நந்தம் நெஞ்சுக்கு இசைத் தமிழ் வளர்ச்சி சிறிது ஆறுதல் அளிப்பதாகத் தெரிகிறது. அயலவர் படையெடுப்பாலும் உள் நாட்டுக் குழப்பங்களாலும் தமிழகம் அல்லல் பல அடைந்த போதிலும் ஒரு பக்கத்தில் இசைத்தமிழும் வளர்ந்து கொண்டேதான் வந்திருக்கிறது.

சங்கக் காலத்திலே பெருக்கெடுத்த இசை வெள்ளம் களப்பிரர் ஆட்சி மணலிலே மறைந்து பின் பல்லவர் சோழர் காலங்களிலே தேவார திவ்யப் பிரபந்த இசை வெள்ளமாக மாறிப் பின் முகமதியர் படையெடுப்பிலே வற்றி விடுதலைப் போரின்போது பாரதி பாடல்களாகவும் பாரதிதாசனின் இசையமுதாகவும் மீண்டும். இத்தமிழகத்திலே இசைக் கடலாகக் காட்சி அளிக்கிறது.

தமிழர் வாழ்வே இசை மயமாகத்தான் உள்ளது. திருமணத்தில் மங்கலப் பாட்டு, பெற்ற மழலை உண்ணப் பாட்டு, விளையாடப் பாட்டு, உறங்கப் பாட்டு, வேலை செய்யும்போது தெம்மாங்குப் பாட்டு, ஊஞ்சல் பாட்டு, இறுதியிலே இழவு வீட்டிலே ஒப்பாரிப் பாட்டு – இவ்வாறு எங்கும் எப்பொழுதும் பாட்டு; பாட்டு, ஒரே பாட்டுமயம்.

இன்று நம்மிடையே உள்ளனவெல்லாம் இசை நூல்களே தவிர இசை இலக்கண நூல்கள் அல்ல. அடியார்க்கு நல்லார் வாயிலாகப் பெருங்குருகு, பெருநாரை, பஞ்ச பாரதீயம் ஆகிய பண்டை இசைத் தமிழ் நூல்கள் இருந்து இறந்தன என்பதை அறிகிறோம். சங்கத் தொகை நூல்களிலே இசைத் தமிழை நம்முன் காட்டிக் களிப்பூட்டுவது பரிபாடல் என்ற ஒரு நூலே. அந்நூலும் முற்றும் கிடைக்கவில்லை. ஒரு நூல்தானே கிடைத்துள்ளது என்று எண்ணிச் சங்கக் காலத்திலே இசைத் தமிழ் அவ்வளவு தூரம் வளர்க்கப் படவில்லையோ என ஐயுறல் அறிவுடமையன்று. சங்கக் காலத்திலே இசை நன்கு வளர்க்கப்பட்டது: சங்கச் சான்றோர்கள் நிலத்தைக் குறிஞ்சி முதலிய ஐந்து வகையாகப் பிரித்தனர். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய இசையும், அவ்விசையைப் பாட வல்ல இசைக் கருவிகளும் இன்ன இன்ன எனத் தம் அரும்பொருட் களஞ்சியமான நூல்களிலே குறித்துச் சென்றுள்ளனர்.

குறிஞ்சிக்குப் பண் குறிஞ்சிப் பண். அதனைப் பாடற்குக் கருவி யாம யாழ், தொண்டகப் பறை என்பன. முல்லைக்குப் பண் சாதாரி, கருவி ஏறுகோட் பறை. மருதத்துக்குப் பண் மருதப் பண்; கருவி மண முழவு. நெய்தல் நிலப் பண் செவ்வழிப் பண்; கருவி மீன் கோட் பறை. பாலைக்குப் பண் பாலைப் பண்; கருவி நிறைகோட் பறை. இவற்ருேடு ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியாக யாழ் என்ற இசைக் கருவியும் இருந்தது.

இன்று நாகரிகத்தின் உச்சியிலே நிற்பனவாக நம்மவரால் புகழ்ந்து போற்றப்படும் நாடுகள் எல்லாம், உடைக்கும் உணவுக்குமே காற்றோடும் கடுவிலங்கோடும் போராடிக் கொண்டிருந்த காலத்திலே, நிலத்தின் தன்மை அறிந்து, அதை ஐவகையாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பண்ணையும், அவ்வப் பண்களைப் பாடற்குரிய ஐவகை இசைக் கருவிகளையும் உருவாக்கி இசைத் தமிழை வளர்த்த தமிழ் மூதாதையர்களை என்னென்று புகழ்வது? என்னே சங்கக்கால இசைத் தமிழ்! சங்க மருவிய நூல்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரத்திலே இசைப் பாக்கள் காணப் படுகின்றன. கானல் வரி, ஆய்ச்சியர் குரவை, வள்ளைப் பாட்டு முதலியன இசைப் பாக்களே.

அருமையாக இசைத் தமிழ் வளர்ந்து வந்த சங்கக் காலத்திற்குப் பிறகு காட்டுமிராண்டி வாழ்க்கையுடைய களப்பிரர் நுழைந்தனர் . பயன்? அழிந்த பல தமிழ்க் கலையோடும் இசைத் தமிழ்க் கலையும் நசியலாயிற்று. குற்றுயிரும் குறையுயிருமாகத் தமிழிசை வாழலாயிற்று. கி. பி. 550-இல் காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகம் போன்ற இசைப் பாக்கள் பாடி இசைத் தமிழுக்கு உயிரும் உணர்வும் ஊட்டினர். அம்மையாருக்குப் பின்னர் தமிழ் நாட்டில் இசைத்தமிழ் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட லாயிற்று. தமிழன்னை இசை மாரியில் குளித்தாள்; இசை வெள்ளத்தில் முழுகினாள். களப்பிரர் ஆட்சியில் ஏற்பட்ட குறுமறுக்களும் வடுக்களும் அவள்தன் திருமுகத்தினின்றும் திருமேனியினின்றும் மறைந்தன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் இசைத் தமிழைப் பக்திச் சுவையோடு கலந்து நாட்டிலே பரப்பினர். சமணமும் பெளத்தமும் இசையை வெறுத்தமையால் அம்மதங்களும் மக்களால் வெறுக்கப்பட்டன. சைவமும் வைணவமும் இசைமூலம் வளரலாயிற்று. அப்பர் முதலிய சைவக் குரவர் நால்வராலும் பாடப்பட்ட பண்ணுேடு கூடிய இசைப் பாக்களே தேவாரம், திருவாசகம் என்னும் நூல்களாகும். நாத்திகன்கூட இப்பாடல்களைப் பண்ணுேடு பாடக் கேட்பின் உள்ளம் நெக்குருகி நெகிழ்ந்து கண்ணிர் சொரிவான்.

ஒவ்வொரு பாடலுக்கும் உள்ள பண்ணும் திறமும் பாடலின் தலைப்பில் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் குருடன் கையில் உள்ள ஒவியம் போலவும், ஊமையன் கனாப்போலும் அவை உள்ளன. இன்று அந்தப் பண்ணை அறிவாரும் இல்லை; அறிந்து பாடுவாரும் இல்லை. தேவார இசையின் சிறப்பை அறிந்த சாரங்க தேவன் என்பான் வட மொழியில் சங்கீத ரத்னாகரம் என்று தான் எழுதிய நூலில் தேவார இசைகளையே வடமொழிப் பெயர்களால் பெரிதும் விரித்து எழுதியுள்ளான். இவன் காலம் கி. பி. 1300. இவன் தெளலதாபாத்து தேவகிரி அரசன் சிம்மணர் அவையில் புலவனாக இருந்தவன்.

தேவாரத் தமிழிசையே இன்று கருனாடக இசைக்கு உயிராகவும் கருவாகவும் அமைந்துள்ளது என்று சி. ஆர். சீனிவாச ஐயங்கார், இசைச் செல்வர் இலக்குமணப்பிள்ளை, எம். எசு. இராமசாமி ஐயர் ஆகிய இசைப் புலவர்கள் கூறியுள்ளனர். தேவார நாயன்மார்கள், திவ்வியப் பிரபந்த ஆழ்வார்கள் ஆகியோர் காலத்திற்குப் பின்னர் திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது இசைத் தமிழ்ப் புலவர்கள் தோன்றி இசைத் தமிழை வளர்த்தனர். இவர்களுக்குப் பின்பு கி. பி. 13, 14, 15, 16-ஆம் நூற்ருண்டுகளிலே முசுலீம்களும், நாயக்கர்களும், மராட்டியரும் தமிழ் நாட்டை ஆண்டதால் தமிழிசையும் இசை நூல்களும் தாயற்ற சேய்களாயின; தவித்தன; பல உயிர் விட்டன. என்ருலும் இசைத்தமிழ்க் குழவிக்கு அவ்வப்போது செவிலித் தாயர் தோன்றாமல் இல்லை.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்