ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 36 – தேவும் தலமும்
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):35 – ஆட்பெயரும் ஊர்ப்பெயரும் தொடர்ச்சி)
5. தேவும் தலமும்
தமிழ் நாடு, என்றும் தெய்வ மணங்கமழும் திருநாடு. பல பழமையான ஊர்களில் இன்றும் ஆண்டவன் கோயிலே நடுநாயகமாக அமைந்திருக்கின்றது. அப்பெருமானது தேர் ஓடும் திரு வீதிகளே சிறந்த தெருக்களாகத் திகழ்கின்றன. இத்தகைய பண்பு வாய்ந்த நாட்டில் பல ஊர்கள் இறைவனோடு தொடர்புற்று விளங்குதல் இயல்பேயன்றோ?
பழங்காலத்தில் ஆண்டவனை மரங்களிலும் சோலைகளிலும் தமிழ் நாட்டார் வழிபட்டார்கள். ஈசன் கல்லாலின் கீழிருந்து நல்லார் நால்வர்க்கு உறுதிப் பொருளை உணர்த்திய காரணத்தால் ஆலமர் கடவுள் ஆயினார்.1 முருகவேள் கடம்பமரத்தில் விரும்பி உறைதலால் கடம்பன் என்று பெயர் பெற்றார்.2 பிள்ளையார் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கின்றார்.
காவிரிக் கரையில் அமைந்த நெடுஞ் சோலையில் ஒரு வெண்ணாவல் மரத்திலே ஈசன் வெளிப்பட்டார்.3 இன்னும், காஞ்சி மாநகரத்தில் இறைவன் மாமரத்தின் அடியிற் காட்சியளித்தார். அம் மாமரமே கோயிலாய் ஏகாம்பரம் என்றும், ஏகம்பம் என்றும் பெயர் பெற்றது.4
இன்னும், தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆன்றோர் பலர், மரங்களின்
கீழிருந்து மெய்யுணர்வு பெற்றுள்ளார்கள். திருவாசகம் பாடிய மணிவாசகர் குருந்த மரத்தடியில் ஈசன் திருவருளைப் பெற்றார். திருமால் அடியார்களிற் சிறந்த நம்மாழ்வார் புளியமரத்தின் கீழ் அமர்ந்து புனிதராயனார்.5
இங்ஙனம் சிறந்து விளங்கிய மரங்களும் சோலைகளும் இறைவனை வழிபடுதற்குரிய கோயில்களாயின. திருக்குற்றாலத்தில் உள்ள குறும்பலா மரத்தைத் திருஞான சம்பந்தர் நறுந்தமிழாற் பாடியுள்ளார்.6
நறுமணம் கமழும் செடி கொடிகள் செழித்தோங்கி வளர்ந்த
சூழல்களிலும் பண்டைத் தமிழர் ஆண்டவன் அருள் விளங்கக் கண்டார்கள். தேவாரத்தில் கொகுடிக் கோயில் என்னும் பெயருடைய ஆலயமொன்று பாடல் பெற்றுள்ளது.7 கொகுடி என்பது ஒருவகை முல்லைக் கொடி. எனவே, நல்மணம் கமழும் முல்லையின் அடியில் அமைந்த திருக்கோயில் கொகுடிக் கோயில் ஆயிற்று. இன்னும், தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று ஞாழற்கோயில் என்ற குறிக்கப்படுகின்றது.8 ஞாழல் என்பது கொன்றையின்
ஒரு வகை. கொன்றையங் கோயிலே ஞாழற்கோயில் என்று பெயர் பெற்றது.
காவும் காடும்
நிழல் அமைந்த சோலைகளும், நெடிய காடுகளும், இனிய
பொழில்களும் வனங்களும் பாடல் பெற்ற பழம் பதிகளாகத் தமிழ் நாட்டில் விளங்கக் காணலாம். அவற்றுள் சில காவும் காடும் தேவாரப் பாட்டிலே காணப்படுகின்றன.
திருவானைக்கா
காவிரிக் கரையில் உள்ளதொரு பெருஞ்சோலையிற் காட்சியளித்த
ஈசனை ஒரு வெள்ளானை நாள்தோறும் நன்னீராட்டி, நறுமலர் அணிந்து வழிபட்டமையால் திரு ஆனைக்கா என்று அத் தலத்திற்குப் பெயர் வந்ததென்பர்.9 அக கோவிலுள்ள திருக்கோவில் ஜம்புகேச்சுரம் எனப்படும்.
திருக்கோலக்கா
சீகாழிக்கு அருகே திருக் கோலக்கா என்னும் சோலைப்பதி உள்ளது.
அப் பதியில் இளங்கையால் தாளமிட்டு இனிய தமிழ்ப்பாட் டிசைத்தார் திருஞானசம்பந்தர். இப் பாடலுக்கு இரங்கிய ஈசன் பிள்ளைப் பெருமானுக்குப் பொற்றாளம் பரிசாக அளித்தார் என்றும், அன்று முதல் கோலக்காவில் உள்ள கோயில் திருத்தாள முடையார் கோயில் எனப் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.10
ஏனையகாக்கள்
இன்னும், ஒரு நெல்லி வனத்தில் ஈசன் காட்சியளித்தமையால் திரு
நெல்லிக்கா என்னும் பெயர் அதற்கமைந்தது. திருவிடை மருதூரின்
அருகேயுள்ள திருக்கோடிகா என்பது மற்றொரு சோலைக்கோவில்.11
வைத்தீசுவரன் கோவிலுக்கு ஐந்து கல் தூரத்திலுள்ள குரங்குக்கா என்பது மந்திச்சோலை, பாலைவனத்திலும் கொற்றவை என்னும் வீரத் தெய்வத்தைச் சோலையில் வைத்து மறவர்கள் வழிபட்டமுறை பழைய நூல்களிற் குறிக்கப்டுகின்றது.12
காடுகள்
ஈசன் உறையும் காடுகளும் தேவாரப் பாடல்களால் இனிது விளங்கும். திருமறைக்காடு முதலிய காட்டுத் திருப்பதிகளை ஒருபாசுரத்திலே தொகுத்துப் பாடினார் திருநாவுக்கரசர்.13 திருமறைக்காடு முதலாகத் திருவெண்காடு ஈறாக எட்டுப்பதிகள் அப்பாட்டிலே குறிக்கப்படுகின்றன.
திருமறைக்காடு
இக் காலத்தில் வேதாரண்யம் என வழங்கும் திருமறைக்காடு மூவர் தேவாரப் பாடலும் பெற்ற மூதூராகும். மறைவனம் என்றும், வேதவனம் என்றும் திருஞான சம்பந்தர் அப்பதியைக் குறித்தருளினார்.14 நான் மறைகளும் ஈசனை வழிபட்ட இடம் திருமறைக்காடு என்பர்.
“சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காடு”
என்னும் தேவாரத்தில் அவ்வூர்ப் பெயரின் வரலாறு விளங்குகின்றது.
தலைச்சங்காடு
காவிரி யாற்றின் மருங்கே அமைந்த தலைச்சங்காடு திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது. அப் பதியில் கட்டுமலை மேலுள்ள திருக்கோயிலில் அமர்ந்த இறைவனை,
“கூடஞ்சூழ் மண்டபமும் குலாய வாசற் கொடித் தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே”
என்று அவர் பாடியுள்ளார். இப்பொழுது தலையுடையவர் கோயிற் பத்து என்னும் பெயரால் அப்பதி வழங்கும்.15
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
அடிக் குறிப்பு
1. “அன்றால் நிழற்கீழ் அருமறைகள் தானருளி” – திருவாசகம்,
திருப்பூவல்லி,13. முருகனை “ஆலமர் கடவுட் புதல்வ” என்று திருமுருகாற்றுப் படை
அழைக்கின்றது.
2. “நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்” – திருநாவுக்கரசர் தேவாரம்,
திருக்கடம்பூர்ப் பதிகம்,9.
3. “திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
திருவானைக் காவில்உறைதேனே”
-திருநாவுக்கரசர், திருவானைக்காத் திருத்தாண்டகம்,6.
“வெண்ணாவல் அமர்துறை வேதியனை” – திருஞான சம்பந்தர், திருவானைக்காப் பதிகம், 11. ‘ஜம்புகேசுரம்’ என்ற வடசொல்லுக்கு, ‘நாவற் கோயில்’ என்று பொருள்.
4. ஆமிரம் என்ற வடசொல்*** மாமரத்தைக் குறிக்கும். ஏக ஆமிரம் என்பது ஏகாமிரமாகி, பின்னர் ஏகாம்பரம் எனத் திரிந்ததென்பர். கச்சி ஏகம்பம் என்று தேவாரத்திற் பாடப்பெற்ற திருக்கோயிலில் பழமையான மாமரமொன்று இன்றும் காணப்படும். கம்பை யென்னும் வேகவதி யாற்றை யடுத்துள்ளமையால் ஏகம்பம் என்ற பெயர் அமைந்த தென்பாரும் உளர். See “South Indian Shrines” – P.V. jagadisa Ayyar, p.86.
[ அயிர் என்னும் சொல்லில் இருந்து பிறந்த ஆயிரம் என்பது தமிழ்ச்சொல்லே. ]
“கம்பக்கரை ஏகம்பம் உடையானை” என்னும் திருஞான சம்பந்தர் வாக்கு இதற்கு ஆதராமாகக் கொள்ளப்படுகின்றது. -திருக்கச்சி யேகம்பத் திருப்பதிகம்.5.
5. திருப்பருத்திக் குன்றத்தில் குரா மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றார் சமண அடிகளாகிய வாமன முனிவர்.
6. “பூந்தண்நறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியும் களிறும் உடன்வணங்கும் குறும்பலாவே” -திருஞான சம்பந்தர், குறும்பலாப் பதிகம், 8.
7. “கருப்பறியல் பொருப்பனைய கொடிக் கோயில்” -திருநாவுக்கரசர் அடைவு திருத்தாண்டகம்,5.
8. “கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில்” -திருநாவுக்கரசர் அடைவு
திருத்தாண்டகம்,5.
9. சேக்கிழார், கோச்செங்கட் சோழர் புராணம், 2, 3.
10. கோலம் என்பது இலந்தை மரத்தின் பெயர், எனவே கோலக்கா இலந்தை வனம் ஆகும்.
திருஞான சம்பந்தர் பொற்றாளம் பெற்றதை வியந்து பாடியுள்ளார் சுந்தரர்.
“நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்துஅவன் பாடலுக்கு
இரங்கும் தன்மையாளனை” – திருக்கோலக்காப் பதிகம், 8.
11. திருநெல்லிக்கா இப்பொழுது திருநெல்லிக்காவல் எனவும், திருக்கோடிகா,
திருக்கோடிகாவல் எனவும் வழங்கும். மலையாள தேசத்தில் இன்றும் ஐயனாரும், நாகமும் வழிபாடு செய்யப்படும் இடங்கள் காவு என்று அழைக்கப்படுகின்றன. நாயர் இல்லந்தோறும் பாம்புக்காவு உண்டு என்பர்.
12. ஐயை என்னும் கொற்றவையின் கோட்டம் “குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும், விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை” என்று சிலப்பதிகாரம் கூறும். காடுகாண் காதை, 207-208.
13. “மலையார்தம் மகளோடு மாதேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூழ் அந்தண்
சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விளையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே”
-அடைவு திருத்தாண்டகம்.
14. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அப் பதியை வணங்கச் சென்றபோது, திருக்கோயிலின் கதவு அடைக்கப்பட்டிருந்த தென்றும்,
“கண்ணினால் உமைக்காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே”
என்று திருநாவுக்கரசர் பாடிய நிலையில் கதவு திறந்தமையால், இருவரும்மறைக்காட்டு இறைவனைக் கண்டு பாமாலை பாடிப் போற்றினர் என்றும், மீண்டும் திருக்காப்புச் செய்வதற்குத் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார் என்றும் திருத்தொண்டர் புராணம் கூறும்.
15. இவ்வூர் தலைச் செங்காடு எனவும் வழங்கும். தஞ்சை நாட்டு, மாயவர வட்டத்தில் உள்ள தலையுடையவர் கோயிற் பத்து என்ற ஊரே பழைய தலைச்சங்காடென்பது சாசனத்தால் விளங்கும்.- M.E.R.,1925,37.
Comments
Post a Comment