Skip to main content

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 34: புலவரும் ஊர்ப்பெயரும்

 




ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33 தொடர்ச்சி)

புலவரும் ஊர்ப்பெயரும்

புலவரும் ஊர்ப்பெயரும்

     சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களில் பல புலவர்கள் இயற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அன்னவருள் ஊர்ப் பெயராற் குறிக்கப் பெற்றவர் சிலர். ஊர்ப் பெயரோடு தொடர்ந்த இயற் பெயர்களாற் குறிக்கப் பெற்றவர் சிலர். அப் பெயர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த இடம் பெறுவனவாகும்.

பொதும்பிற் புலவர்

    பொதும்பில் கிழார் என்பது ஒரு பழம் புலவர் பெயர். அவரும், அவர் மைந்தராகிய புலவரும் இயற்றிய  செய்யுட்கள் நற்றிணையிற் காணப்படும். பொதும்பில் புல்லாளங் கண்ணியார் என்னும் மற்றொரு புலவரும் முன்னாளில் வாழ்ந்தார். இம் மூவரும் பொதும்பில் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது புலனாகின்றது. பாண்டி நாட்டு மதுரை வட்டத்திலுள்ள பொதும்பு என்னும் ஊரே பழைய பொதும்பில் என்பர்.130

கிடங்கிற் புலவர்

    முற்காலத்தில் சிறப்புற்றிருந்த கிடங்கில் என்ற ஊரில் காவிதிப் பட்டமும் குலபதிப் பட்டமும் பெற்ற புலவர்கள் வாழ்ந்திருந்தனர். காவிதிக்கீரங்கண்ணனார், நாவிதிப் பெருங் கொற்றனார், குலபதி நக்கண்ணனார் என்னும் மூவரும் கிடங்கிற்பதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாடிய பாட்டு நற்றிணையிலும், குறுந்தொகையிலும் காணப்படும். இப்பொழுது திண்டிவனம் என வழங்கும் ஊரின் ஒரு பாகத்தில் கிடங்கால் என்னும் பெயரோடு அமைந்துள்ள இடமே அவ்வூர்.

நொச்சி நியமத்தார்

    நொச்சி நியமங் கிழார் என்னும் புலவர் பாடிய நயஞ்சான்ற பாடல்கள் நற்றிணையிற் காணப்படுகின்றன. நியமம் என்பது கோவிலைக் குறித்தலால் முன்னாளில் நொச்சி நியமம் தெய்வ நலம் பெற்ற ஊர்களில் ஒன்றென்று கொள்ளலாகும். இப்பொழுது அவ்வூர்ப் பெயர் நொச்சியம் என மருவி வழங்குகின்றது.

கிள்ளி மங்கலத்தார்

    கிள்ளி மங்கலங்கிழார் என்னும் புலவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிற் காணப்படும். சோழ மரபினர்க், குரிய கிள்ளி யென்ற பெயர் தாங்கி நிலவும் பதியில் வேளாளர் குலத்திற் பிறந்த புலவர் கிள்ளி மங்கலங் கிழார் என்று குறிக்கப்பெற்றார். அவ்வூரின் பெயர் இப்பொழுது கிண்ணி மங்கலம் என மருவி வழங்குகின்றது.131

பிசிர் ஆந்தையார்

   தமிழகத்தில் தலை சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்தவர்கள் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும். அவ்விருவரும் வேறு வேறு நாட்டினராயினும், வேறு வேறு நிலையினராயினும், ஒத்த உணர்ச்சியுடையராய் இருந்தமையால் உயரிய நண்பர் ஆயினர் என்று பரிமேலழகர் கூறிப் போந்தார். பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆந்தையார் பிசிராந்தையார் என்று பெயர் பெற்றார். அவ்வூர் பாண்டி நாட்டிலுள்ள தென்பது,

          “தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்

          பிசிரோன் என்ப

என்று கோப்பெருஞ் சோழன் கூறுதலால் அறியப்படும். இப்பொழுது அவ்வூர் இராமநாதபுரம் நாட்டில் பிசிர்க்குடியென்று வழங்குகின்ற தென்பர்.

மோசியார்

    மோசி என்னும் சொல்லாலும், அதோடு தொடர்ந்த பெயராலும் குறிக்கப்படும் புலவர்கள் பழந்தொகை நூல்களிற் சிலர் உண்டு. புறநானூற்றில் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் பன்னிரு பாட்டால் புகழ்ந்து பாடியவர் முட மோசியார் ஆவர். இவரை மோசி என்றும் அக்காலத் தறிஞர் அழைத்ததாகத் தெரிகின்றது. இன்னும் மோசி கீரனார் இயற்றிய பாடல்கள் அகப்பாட்டிலும், புறப்பாட்டிலும் காணப்படும். தகடூர் எறிந்த பெருஞ் சேரமானின் முரசு கட்டிலில் அறியாது படுத்துறங்கி, அவனால் கவரி வீசப்பெற்ற புலவர் இவரே. இன்னும் மோசி கொற்றனார், மோசி சாத்தனார், மோசி கண்ணத்தனார் என்னும் புலவர்களும் முற்காலத்தில் இருந்தனர்.

அன்னார் பெயர்களில் அமைந்த மோசி என்னும் சொல் மோசுகுடி என்ற ஊர்ப் பெயரில் விளங்குகின்றது. இப்பெயர் பெற்ற ஊர் இராமநாதபுரத்துச் சிவகங்கை வட்டத்தில் உள்ளது.

அழிசியார்

     அழிசி என்னும் பெயருடைய மூவர் சங்கக் காலத்தில் இருந்தனர். அன்னவருள் ஒருவர் நல்லழிசியார். பரிபாடலில் இரு பாடல்கள் அவருடையன. கொல்லன் அழிசி என்பவர் இயற்றிய செய்யுட்கள் நான்கு குறுந்தொகையிற் சேர்ந்துள்ளன. அழிசி நச்சாத்தனார் என்பது இன்னொரு புலவர் பெயர். ஆதன் அழிசி என்னும் தலைவன் பூதப் பாண்டியனுடைய நண்பர்களுள் ஒருவன் என்பது புறப்பாட்டால் விளங்குகின்றது. இவர்தம் பெயரை நினைவூட்டும் அழிசிகுடி என்னும் ஊர் தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் உண்டு.

மிளையார்

     முன்னாளில் மிளை யென்ற ஊரில் வாழ்ந்த ஒரு தலைவன் பெயரும், இருபுலவர் பெயரும் குறுந்தொகையால் விளங்கும். மிளை வேள் தித்தன் என்று அந்நூல் கூறுதலால், அத்தலைவனுடைய ஊரும் குலமும் பெயரும் அறியப்படுகின்றன. இன்னும் மிளைக்கந்தன், மிளைப்பெருங்கந்தன் என்னும் புலவர்கள்  இயற்றிய செய்யுளும் கிடைத்துள்ளன. தென் ஆர்க்காட்டு விருத்தாசல வட்டத்தில் பெரு முளை, சிறு முளை என்ற இரண்டு ஊர்கள் உண்டு. மிளையென்பது முளையென மருவி வழங்குதல் இயல்பாதலால் அன்னார் அவ்வூர்களில் ஒன்றைச் சேர்ந்தவராக இருத்தல் கூடும்.

குறுங்கோழியூரார்

      பழந் தொகை நூல்களில் குறுங்கோழியூர் கிழார் என்னும் சொல் வேளாளரைக் குறிக்கும். ஆதலால், அப் புலவர் குறுங்கோழியூரைச் சேர்ந்த வேளாளர் என்பது விளங்கும். முன்னாளில் குறுங்கோழி என்று தொண்டை நாட்டிற் பெயர் பெற்றிருந்த ஊர், இப்போது  கருங்குழி எனச் செங்கற்பட்டிலுள்ள மதுராந்தக வட்டத்தில் உள்ளது.

பெருந்தலைச் சாத்தனார்

     முற்காலத்தில் இருந்த மற்றொரு புலவர், பெருந்தலைச்சாத்தனார் என்று குறிக்கப்படுகின்றனர். குமணன் என்னும் சிறந்த வள்ளலைக் காட்டிலே தேடிக் கண்டு சோகம் நிறைந்த சொற்களால் அவன் உள்ளத்தை உருக்கி, அவன்பால் தலைக்கொடை பெற்ற புலவர் இவரே. பெருந்தலை என்னும் ஊரிற் பிறந்த சாத்தனார், பெருந் தலைச் சாத்தனார் என்று அழைக்கப் பெற்றார். அவ்வூர், பெருந்தலையூர் என்னும் பெயரோடு கொங்கு நாட்டில் இன்றும் காணப்படுகின்றது. குமண வள்ளலுக்குரிய நாடும் கொங்கு நாட்டின் ஒரு பாகமேயாகும். கொங்கு நாட்டைச் சேர்ந்த புலவர் ஒருவர் கொடிய வறுமையால் துன்புற்ற நிலையில் கொங்கு நாட்டு  வள்ளலை நாடிச் சென்று அவனிடம் தன் குறையை முறையிட்டார் என்பது மிகப் பொருத்தமாகவே தோற்றுகின்றது. இவ்வாறே சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரையும் சீத்தலை என்னும் ஊரிற் பிறந்தவர் என்று கொள்ளுதலே பொருத்த முடையதாகும்.

ஒட்டக்கூத்தர்

    தமிழ்ப்புலவர்தம் பெயர்களும் அருமையாக ஊர்ப் பெயர்களிலே காணப்படுகின்றன. சோழ மன்னர் அவைக்களத்திற் கவிச் சக்கரவர்த்திப் பட்டம் பெற்று விளங்கிய கவிஞருள் ஒருவர் ஒட்டக் கூத்தர். அவர் மலரி என்ற சிற்றூரிலே பிறந்தவர். முன்று சோழ மன்னர்கள் அவரை ஆதரித்தார்கள். அன்னாருள் ஒருவன் தன்னை அவர் மாணவன் எனப் பேசி பெருமை கொண்டான். பேரளத்துக்கு அருகேயுள்ள ஒரு சிற்றூர் அக்கவிஞருக்குப் புலமைக் காணியாக அளிக்கப்பட்டது. அதன் பெயராகிய கூத்தனூர் என்பது, ஒட்டக்கூத்தர் பெயரால் வந்ததென்று தெரிகின்றது.132 கலைமகள் அருளால் சீரும் சிறப்பும் பெற்ற ஒட்டக்கூத்தரது மரபில் தோன்றிய வரதக் கூத்தன் அங்கு அத் தெய்வத்திற்கு ஓர் ஆலயம் அமைத்துப் போற்றினான் என்பர்.

பொய்யா மொழியார்

    பதினாறாம் நூற்றாண்டில் விளங்கியவர் பொய்யா மொழிப் புலவர். அவர் தஞ்சாவூரையாண்ட சந்திரவாணன் மீது பாடிய கோவை “தஞ்சைவாணன் கோவை” என்று வழங்குகின்றது. அவர் வாக்கு அருள் வாக்கென்றும், பொய்யாமொழி யென்றும்   கொண்டாடப்பட்டது. தொண்டை நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் பொய்யாமொழி மங்கலம் என்னும் பெயருடைய ஊர் ஒன்றுள்ளது. அங்குக் கடிகை என்ற தமிழ்ச் சங்கம் இருந்ததென்று திருக்கச்சூர்ச் சாசனம் தெரிவிக்கின்றது. அவ்வூருக்கும் பொய்யாமொழிப் புலவர்க்கும் ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றுகின்றது.

காரிகைக் குளத்தூரார்

    சோழ மண்டலத்திலுள்ள மிழலை நாட்டில் தமிழ் வளர்த்த தலைவர் பலர் தழைத்து வாழ்ந்தார்கள். அன்னவருள் ஒருவனாகிய கண்டன் மாதவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்தினன்; மிழலை நாட்டைச் சேர்ந்த நீடூர்க் கோவிலிற் கண்ட சாசனப் பாட்டால் அவன் செய்த திருப்பணிகள் அறியப்படுகின்றன. “புராணநூல் விரிக்கும் புரிசை மாளிகையும் விருப்புறச் செய்தோன்” என்று புகழப்படுதலால் பட்டி மண்டபம் ஒன்று அவன் கட்டினான் என்பது விளங்கும். இத்தகைய மிழலை நாட்டுக் குறுநில மன்னனைக் “காரிகைக் குளத்தூர் மன்னவன்” என்று அச்சாசனம் கூறுதல் கருதத் தக்கதாகும். தமிழில் யாப்பருங்கலக் காரிகை என்னும் செய்யுளிலக்கணம் செய்தவர் அமிதசாகரர் என்ற சமணமுனிவர் என்பது அந் நூற்பாயிரத்தால் அறியப்படுகின்றது. அவ்வாசிரியர்பால் அன்பு கூர்ந்து, அவரை அழைத்து வந்து, குளத்தூரில் வைத்து ஆதரித்துக் காரிகை நூல் இயற்றுவித்தவன் மாதவன் குலத்துதித்த மிழலை நாட்டுத் தலைவன், காரிகையின் மணம் கமழ்ந்த குளத்தூர், காரிகைக்குளத்தூர் என வழங்கலாயிற்று.133 

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

130. பொதும்பு என்பது சோலை. சோலையினிடையே எழுந்த ஊர் பொதும்பில் என்று பெயர் பெற்றது. போலும்.

131. கிண்ணிமங்கலம், மதுரைத் திருமங்கல வட்டத்தில் உள்ளது.

132. 109 / 1928.

133. 535 / 1911.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்