தமிழ்நாடும் மொழியும் 41 : பிற நூல்கள்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 01 June 2023 அகரமுதல (தமிழ்நாடும் மொழியும் 40 : தமிழ் இலக்கண வளர்ச்சி தொடர்ச்சி ) பிறநூல்கள் இலக்கணக் கொத்தும் இலக்கண விளக்கச் சூறாவளியும் இலக்கணக் கொத்து என்னும் நூல் கி. பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈசான தேசிகர் எனப்படும் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பட்டது. 151 சூத்திரங்களாலான இந்நூல் வேற்றுமை, வினை, ஒழிபு என்ற முப்பெரும் பிரிவுடையது. தொல்காப்பியத்தில் அருகிக் கிடந்த இலக்கண விதிகளையும், சில வடமொழி இலக்கணங்களையும், பல அரிய இலக்கணக் குறிப்புகளையும் நுட்பங்களையும் இந்நூல் கூறுகிறது. இலக்கண விளக்கச் சூறாவளி என்பது இலக்கண விளக்கத்திற்கு மறுப்பு நூலாக கி. பி. 18 – ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த சிவஞான முனிவரால் எழுதப்பட்டதாகும். நேமிநாதம், முத்துவீரியம் நேமிநாதமே சின்னூல் ஆகும். இது வெண்பாவால் ஆயது; எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் இவற்றைக் கூறுகிறது. இந்நூலாசிரியரது பெயர் குணவீர பண்டிதராகும் . இவர் காலம் கி. பி. 12- ஆம் நூற்ருண்டு. முத்துவீரி...